
மலேசியக் குடும்பங்களின் நலனுக்காகப் பொருட்களின் விலை உயர்வை உடனடியாக நிவர்த்தி செய்வதை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
சம்பந்தப்பட்ட அமைச்சுகளிடம் இருந்து விரிவான விளக்கத்தைப் பெற, எதிர்காலத்தில் தேசிய வாழ்வாதார நடவடிக்கை கவுன்சிலின் கூட்டத்திற்கு தலைமை தாங்கவுள்ளதாக பிரதமர் கூறினார்.இது தொடர்பாக அவர் நேற்று தனது முகநூலில் பதிவிட்டுள்ள பதிவில், “சமீபகாலமாக பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து அரசாங்கம் கவலை கொண்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.
இந்த நேரத்தில் பொருட்களின் விலை உயர்வு, பயன்பாட்டுக் கட்டணம் உள்ளிட்ட பிரச்சினைகள் மக்களுக்கு மிகவும் சுமையாக உள்ளது.
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி, அதிகபட்ச குடும்ப விலைத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சியின் ரிம.9.10 விலை எதிர்வரும் பிப்ரவரி 4-ஆம் தேதியுடன் முடிவடையும் என்று கோடி காட்டியுள்ளார். இந்த விலையேற்றத்தை எதிர்நோக்க மக்கள் தயாராக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
கால்நடைத் துறை சீரான விநியோகத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பதை உறுதி செய்யும் முயற்சியில் புதிய கோழியின் உச்சவரம்பு விலை திருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் 2022 முதல் 2024 வரையிலான தேசிய மின் கட்டண விகிதத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என்று எரிசக்தி மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தகியுதீன் ஹசான் முன்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மூன்றாண்டு காலத்திற்கான புதிய மின்கட்டணம் குறித்த முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றார் அவர்.