பொருளாதாரத் துறைகள் இயங்க அனுமதி எம்சிஓ அமலாக்கம் அர்த்தமற்றது


  ஒருபுறம் தேசிய நிலையில் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை ( எம்.சி.ஓ.) அமலாக்கம் செய்யப்பட்டிருக்கும் வேளையில், மறுபுறம் பொருளாதாரத்துறைகள் அனைத்தையும் செயல்பட அனுமதித்துள்ள அரசாங்கத்தின் முடிவு குறித்து மலேசிய மருத்துவர்கள் சங்கம் ( எம்.எம்.ஏ.) கேள்வி எழுப்பியுள்ளது.

  அரசாங்கம் ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து எம்.சி.ஓ. ஆணையை கடுமையான முறையில் அமல்படுத்த வேண்டும். இரண்டு வாரங்களுக்கு கடுமையாக அமல்படுத்தப்பட்ட பிறகு, அக்கட்டுப்பாடுகளை அது மெதுவாக அகற்றத் தொடங்கலாம் என்று அச்சங்கத்தின் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் முனியாண்டி தெரிவித்தார்.
  எல்லாப் பொருளாதாரத்துறைகளும் அனைத்து இடங்களிலும், வெவ்வேறான பகுதிகளிலும் திறந்து விடப்பட்டுள்ளன. இது அறிவுக்குப் பொருந்துவதாக எனக்குத் தோன்றவில்லை. ஒரு வகையில் முரண்பாடாகக்கூட இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். நோய்க் கிருமிகள் எல்லா இடங்களிலும் பரவியுள்ளன. இது மேலும் மோசமடையத்தான் போகிறது. பொதுமக்களும் இது குறித்து கவலை கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.
  அரசாங்கம் செய்துவரும் காரியம் அவர்களுக்கும் மக்களுக்கும் எந்த வகையிலும் நன்மை பயப்பதாக இருக்காது என்று டாக்டர் சுப்பிரமணியம் சொன்னார்.
  பொருளாதாரத்தையும் மக்களின் உடல்நலத்தையும் ஒருசேர பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்பதைத் தாம் உணர்ந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இப்போதைய சூழ்நிலையில் முடக்க நிலை மிக அவசியமான ஒன்று என வலியுறுத்தினார்.
  பிரச்சினை என்னவென்றால், கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகி நோய்வாய்ப்பட்டால், பொருளாதாரத்தின் மூலம் கிடைக்கப் பெறும் பணம் எங்கே போகும்? நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்கும் மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கும்தான் அப்பணத்தைச் செலவிட வேண்டிவரும். அதே நேரத்தில், பொருளாதாரத்துறைகளையும் மாதக் கணக்கில் நாம் மூடி வைத்திருக்க முடியாது என்றார் அவர்.
  இதனிடையே, எம்.சி.ஓ. கட்டுப்பாடுகளை தேசிய நிலையில் அமல்படுத்துவதற்கு முன்பு, சில மாநிலங்களிலும் சில மாவட்டங்களிலும் மட்டும் அந்தக் கட்டுப்பாடுகளை அமல்படுத்திய அரசாங்கத்தின் முடிவை சுகாதாரத்துறை துணையமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் கண்டனம் செய்துள்ளார்.
  தேசிய நிலையிலான எம்.சி.ஓ. உத்தரவை கடந்த வாரமே அரசாங்கம் அறிவித்திருக்க வேண்டும். ஆனால், அதனைச் செய்யாமல் சிலாங்கூரில் ஆறு மாவட்டங்களில் மட்டுமே அது அமல்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.
  ஆனாலும், கோலாலம்பூரில் அது அமல் செய்யப்படவில்லை. பிறகு அங்கும் அது அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், ஜொகூரிலும் பினாங்கிலும் சில மாவட்டங்களில் எம்.சி.ஓ. ஆணை அமல்படுத்தப்பட்டது. அரசாங்கத்தின் இந்நடவடிக்கை அபத்தமானது என்று லீ பூன் சாய் சாடினார்.
  இருந்த போதிலும், பொருளாதாரத்துறைகள் அனைத்தையும் மூடிவிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  twelve − three =