பொய்யான செய்தியைப் பரப்பிய நால்வர் கைது

0

நாட்டை உலுக்கி வரும் கோரோனா வைரஸ் சம்பந்தமான பொய்ச் செய்தியை சமூக ஊடகங்களில் பரப்பிய நால்வரைப் போலீசாரின் உதவியோடு கைது செய்துள்ளதாகத் தகவல், பல்லூடக ஆணையம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அந்நால்வரும் கைது செய்யப்பட்டனர். மலாக்காவில் இருவரும் கெடா மற்றும் பகாங்கில் தலா ஒருவரும் அதில் அடங்குவர்.

நேற்று முன்தினம், அலோர்ஸ்டாரில், 49 வயது மதிக்கத்தக்க பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் நண்பகல் 12 மணியளவில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் ஜனவரி 25ஆம் தேதி தமது முகநூலில் பொய்யான செய்தியைப் பதிவேற்றியதாகவும் தெரிகிறது. மலாக்கா, மெர்லிமாவில் 25 மற்றும் 30 வயதுடைய இரு மருந்தகப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஜனவரி 26ஆம் தேதி கொரோனா வைரஸ் சம்பந்தமான பொய்ச் செய்தியை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. பகாங், குவாந்தானில் 24 வயது தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் மாலை 4.15 மணியளவில் கைது செய்யப்பட்டார். அவர் ஜனவரி 27ஆம் தேதி டுவிட்டரில் பொய்யான செய்தியை வெளியிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

கைது செய்யப்பட்டவர் களிடமிருந்து 4 கைப்பேசிகள், 5 சிம் கார்டுகள், 2 தகவல் பதிவுக் கார்டுகள் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் அனைவரும் 1998ஆம் ஆண்டு தகவல், பல்லூடகச் சட்டம், பிரிவு 233இன் வழி விசாரிக்கப்படுவர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், 50,000 ரிங்கிட் அபராதம், ஓராண்டுக்கு மேற்போகாத சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். தண்டனைக்குப் பின்னர், அக்குற்றத்தைத் தொடர்ந்தால், ஒவ்வொரு நாளுக்கும் 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்.

பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் மீது போலீசும் தகவல், பல்லூடக ஆணையமும் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − one =