பொதுத்தேர்தல் நடந்தாலும் தொங்கு நாடாளுமன்றமே உருவாகும்

நாட்டில் ஒவ்வொரு நாளும் புதுப்புது அரசியல் செய்திகளும் நிகழ்ச்சிகளும் நிகழ்ந்து வருகின்றன. இந்த மாற்றமானது 15ஆவது பொதுத்தேர்தல் நடந்த பின்னரும் தொடரும் என்று நம்பப்படுகிறது.
புதிய கட்சிகள் முளைத்து வருகின்றன. புதிய கூட்டணிகள் உருவாகி வருகின்றன. பழைய உடன்பாடு முறிக்கப்பட்டு, புதிய உடன்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. கூட்டணியில் இருக்கும் உறுப்புக் கட்சிகள், கருத்து வேறுபாடு காரணமாக வேறு பாதையில் பயணிக்கின்றன.
புதிய கூட்டணிக்குள்ளே பல்வேறு இணைப்புகளும் பிணைப்புகளும் உருவாகியிருப்பது மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றது. தற்போதைய சூழ்நிலை சிக்கலையும் பிரச்சினையையும் உருவாக்கி வருவது அதிர்ச்சியளிக்கிறது. இதில் யார் வெற்றி பெறுவார் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
இதில் ஒன்று மட்டும் நிச்சயம். மலாய்க்காரர்கள் தங்களது உரிமையையும் அரசியல் அதிகாரத்தையும் இழக்கத் தயாரில்லை என்பது புலப்படுகிறது. ஆட்சிக்கு எந்தக் கட்சி வந்தாலும், அது மலாய் ஆதிக்கத்தையே கொண்டிருக்கும் என்பது உறுதி.
தற்போது மலாய், முஸ்லிம் ஆதிக்கத்தை முன்னெடுக்கும் நான்கு கட்சிகள் இருக்கின்றன. அதில் அம்னோ, பாஸ், பெர்சத்து மற்றும் துன் மகாதீரின் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பார்டி பெஜுவாங் தானா ஆயர் கூ என்ற கட்சியும் அடங்கும்.
அதனைத் தொடர்ந்து அம்னோ, பாஸ், பெர்சத்து அடங்கிய பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியும், பிகேஆர், ஜசெக மற்றும் அமானா ஆகியவை இணைந்துள்ள பக்காத்தான் நேஷனலும் உள்ளன.
அம்னோவும், பாஸ் கட்சியும் இணைந்து முவாஃபக்காட் நேஷனல் என்ற கூட்டணியை ஏற்படுத்தியுள்ளன. அதில் புதிதாக பெர்சத்துவும் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாஸ் கட்சி பெர்சத்துவுடன் மறைமுக கூட்டணியை உருவாக்க முனைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கட்சிகளைத் தொடர்ந்து பல குழப்பமான கூட்டணிகளும் உருவாகியிருக்கின்றன. இன்னும் பதிவு பெறாத பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில்(பிஎன்) இரு வேறு அமைப்புகள் உள்ளன.
62 ஆண்டு காலம் கோலோச்சிய பின்னர், ஆட்சி கவிழ்க்கப்பட்ட தேசிய முன்னணியில் ஒரு காலத்தில் 13 கட்சிகள் இணைந்திருந்தன. தற்போது அதில் அம்னோ, மசீச மற்றும் மஇகா மட்டுமே உள்ளன. 14ஆது பொதுத்தேர்தலுக்குப் பின்னர் கெராக்கான் அதிலிருந்து விலகி சுயேச்சையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், மசீச அக்கூட்டணியிலிருந்து விலக பெரும் முயற்சியை எடுத்த பின்னர், அம்முடிவை மாற்றிக் கொண்டது.
அதே வேளையில் மலாய்க்காரர்களின் முழு ஆதரவையும் கைகழுவ முடியாத நிலையை உணர்ந்த அம்னோ, இன, சமய தீவிரவாதப் போக்கில் குறியாக இயங்கி வரும் பாஸ் கட்சியோடு கூட்டுச் சேர்ந்து, முவாஃபக்காட் நேஷனலை உருவாக்கி மலாய்க்காரர்கள், இஸ்லாத்தின் உரிமையைக் காக்க தனக்குத்தான் பொறுப்பு அதிகமிருப்பதாக மார்தட்டிக் கொண்டு வருகிறது.
அதில் தற்போது முஹிடின் யாசினின் பெர்சத்துவும் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆட்சியில் தொடர்ந்து இருக்கவும் நாட்டை இஸ்லாமிய வழியில் மாற்றவும் பாஸ் கட்சி, பெர்சத்துவோடு வெறொரு மறைமுகக் கூட்டணியைக் கொண்டு செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது.
பக்காத்தான் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர், அதன் கூட்டணியில் பிகேஆர், ஜசெக மற்றும் அமானா நெகாரா போன்ற கட்சிகள் இன்னமும் இடம்பெற்று வருகின்றன. அக்கூட்டணிக்கு வாரிசான் சபாவின் ஆதரவு இருக்குமா என்று சொல்வதற்கில்லை.
சபா முதலமைச்சர் ஷாபி அப்டாலை பிரதமர் வேட்பாளராக ஆக்க, துன் மகாதீர் தீவிர முயற்சியில் இறங்கியபோது, இறுதியில் அதனை பிகேஆர், ஜசெக, அமானா ஆகியவை ஏற்றுக் கொள்ளாததால், ஷாபி அப்டால் அந்த வாய்ப்பைப் பெறத் தவறியதோடு, அவர் சபா சட்டமன்றத்தைக் கலைத்து திடீர் தேர்தலை அறிவித்துள்ளார். அங்கு அவரின் தலை தப்புமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இச்சூழ்நிலையில் அது பற்றிக் குறிப்பிட்ட அரசியல் ஆய்வாளர் வோங் சின் ஹுவாட், அடுத்த போதுத்தேர்தலுக்குப் பின்னர், தொங்கு நாடாளுமன்றமே உருவாகும் என்று ஆரூடம் கூறுகிறார். எந்தக் கூட்டணிக்கும், எந்தத் தனிப்பட்ட கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்று அவர் சுட்டிக் காட்டுகிறார். அதனையடுத்து அதிகமான குதிரைப் பேரமும் நடக்க வாய்ப்பிருக்கிறது.
மத்திய அளவிலும் மாநில அளவிலும் கட்சிகள் ஒன்றையொன்று எதிர்த்துப் போட்டியிடுவதோடு, புதிய அரசியல் கூட்டணிகளை உருவாக்க முனையும். அந்தக் கூட்டணிகள் எந்தவொரு அடையாளத்தையும், பொது இலக்கையும், குறிக்கோளையும் கொண்டவையாக இல்லாமால், பதவி, பட்டம், செல்வாக்கு, வருமானம் முதலியவற்றைக் கொண்டே செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் என்பது அடுத்த பொதுத்தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்திருக் கிறது. புதிய கூட்டணிகள் யாவும் பொதுத்தேர்தலில் கூடுதலான தொகுதிகளைப் பெறும் நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அரசியலில் அதிகமான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதால், வாக்காளர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பர் என்பதைக் கணிக்க முடியாது என்று பெர்சத்துவின் வியூகப் பொறுப்பாளர் ராய்ஸ் ஹுசேய்ன் முகமட் அரிஃப் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சூழ்நிலை அதிக மாற்றங்களைக் கொண்டதாகவும், அதிசயங்களும் அதிர்ச்சியும் நிகழக்கூடும் களமாக உருவெடுத்துள்ளது. நண்பர்களாக இருந்தவர்கள் பகைவர்களாகவும் எதிரிகளாக இருந்தவர்கள் உற்ற நண்பர்களாகவும் மாறக் கூடும்.
அதில் பிரதானமான கூட்டணி, துணைக் கூட்டணிகள், இடையிடையே சிறு சிறு கூட்டணிகள் உருவாகும். இது எவ்வாறு வாக்காளர்களைத் திருப்திப்படுத்தும் என்று சொல்வதற்கில்லை.
உருவாக்கப்படும் கூட்டணிகளில் மலாய் ஆதிக்கமே பெரும் பங்கு வகிக்கும் . அதனைத் தவிர்த்து வேறு எந்த அம்சத்துக்கும் இடமில்லை என்று அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் தஜுடின் முகமட் ரஸ்டி குறிப்பிட்டார்.
ரிபோர்மாஸி காலத்தில் மத்திய தர மலாய்க்காரர்களின் ஆதரவு அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவாகத் திரும்பியது. பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக்கு வந்தபின்னர், அது மலாய்க்காரர்களுக்கு எதிராகச் செயல்பட்டதாகப் பொய்ப் பரப்புரை செய்யப்பட்ட பின்னர், அடித்தட்டு மலாய்க்காரர்கள், மலாய்க்காரப் பெரும்பான்மை கொண்ட அரசின் பால் சாயத் தொடங்கியுள்ளனர்.
இந்த விவகாரமே எதிர்கால அரசியலில் பெரும் பங்கு வகிக்கும் என்பதே உண்மையென்று துஜுடின் குறிப்பிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × four =