பேரா அரசு 2,000 ஏக்கர் நிலத்தை மஇகாவுக்கு வழங்கியதா??

0

பேரா மாநில முன்னாள் தேசிய முன்னணி அரசு 2,000 ஏக்கர் விவசாய நிலத்தை மஇகாவுக்கு வழங்கியதா அல்லது இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக கொடுக்கப்பட்டதா என பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் வினவினார்.
மொத்தம் 6 நிலப் பட்டாக்களைக் கொண்டிருக்கும் அந்த இடங்களில் ஓர் இடங்கூட மஇகாவுக்குச் சொந்தம் என்ற எழுத்துப்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை .
அண்மையில் இங்குள்ள ஜாலான் சபாக் பெர்ணம், சுங்கை தீமா புறநகர் இந்திய குடியிருப்பாளர்களுடன் நடத்திய சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
இந்த நிலம் யாருக்காக வழங்கப்பட்டது என்பது புரியாமல், பேரா மஇகா தலைவர் இளங்கோ அது மஇகாவுக்கு வழங்கப்பட்டது என்று பேசுகிறார். பேரா மாநிலத்திலுள்ள அனைத்து ஆரம்பப்பள்ளி மற்றும் உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தங்கள் கல்வியைத் தொடரும் இந்திய மாணவர்களுக்கு இந்த 2,000 ஏக்கர் நிலத்தின் வாயிலாக கிடைக்கப் பெறும் வருமானத்தின் மூலமாக நிதி வழங்குவதே அந்த நிலம் கொடுக்கப்பட்டதன் தலையாய நோக்கமாகும்.
இந்த நிலம் பேரா மாநில கல்வி மேம்பாட்டு அறவாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அரசாங்கம் மாற்றம் பெற்றவுடன் அந்த அறவாரியத்தில் இருந்து இளங்கோவும் தம் பதவியை உடனடியாகத் துறந்தார்.
இந்நிலையில், இந்த நிலத்தைப்பற்றி உண்மைக்குப் புறம்பாகவும் பேசுகிறார். இன்று வரையில் ஒரு சல்லிக்காசு கூட மாணவர்களிடம் சென்றடைய வில்லை அது ஏன்? என சிவநேசன் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலத்தைப் பற்றி தெரிந்துகொள்ள மக்கள் சார்பில் தாம் தலையிடுவது மஇகாவைச் சேர்ந்தவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பதால், மேலும், 2,000 ஏக்கர் நிலத்தை பெற்றுக் கொள்ளுமாறு தமக்கு ஆலோசனை வழங்கியுள் ளனர். தற்போது கிடைக்கப்பெறும் வருமானம் எங்கே போகிறது? என்று கேள்வி எழுப்பினால், அதற்கு நேர்மறையான பதிலை பேரா இந்திய சமூகத்திடம் மற்றும் நடப்பில் உள்ள அரசு குறித்து எதிர்மறையான செய்தியை வெளியிடுவது பேரா மஇகா தலைவர் இளங்கோவிற்கு அநாகரிகமானது என சிவநேசன் சாடினார்.
பேராவில் கடந்த பாரிசான் காலத்தில், 134 தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆண்டொன்றுக்கு 1 மில்லியன் வெள்ளி மானியம் வழங்கினர். ஆனால், நடப்பு அரசாங்கத்தில் இந்திய மாணவர்களுக்கும், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் முறையே 2.2 மில்லியன் வெள்ளி மானியமாக 120 விழுக்காடு இரட்டிப்பாக ஒதுக்கப்பட்டுள்ள என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + four =