பெற்றோரின் அனுமதியின்றி பிள்ளைகளை மத மாற்றத்திற்கு உட்படுத்த முடியுமா?

0

பெற்றோர்கள் அனுமதியின்றி ஒரு தரப்பினர் ஒப்புதல் அளித்தாலே தங்கள் பிள்ளைகள் மத மாற்றத்திற்கு ஒப்புதல் வழங்கக்கூடிய சட்டத் திருத்தத்தை சிலாங்கூர் சட்டமன்றம் கொண்டு வருவதாகவும், இச்சட்டத் திருத்தத்தை இந்நாட்டில் உள்ள இஸ்லாம் அல்லாதவர்கள் எவருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், இந்த புதிய சட்டத் திருத்தத்திற்கு ஜசெக சட்ட மன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் உடன்பட மாட்டார்கள். இதற்கு காரணம் கடந்த 20 ஆண்டுகளாக இந்திராகாந்தி வழக்கில் நாங்கள் போராடி வருகின்றோம். இந்த மதமாற்ற வழக்கில் குலசேகரனும், தாமும் வாதாடி வந்துள்ளதாகவும் கூறினார்.
18-வயதுக்கும் குறைவான பிள்ளைகளை மதமாற்றம் செய்வதென்றால், இச்சட்டத்தின் கீழ் பெற்றோர்களில் ஒருவர் ஒப்புதல் வழங்கினாலே போதும், சம்பந்தப்பட்ட பிள்ளைகளை மதமாற்றம் செய்யலாம் என்று கூறுகிறது. ஆனால், கூட்டரசு அரசியல் சட்டத்தின் கீழ் கூறுவது என்னெவென்றால், 18-வயது நிறைந்தவர்கள் தாங்கள் விரும்பும் மதத்தை தன்னிச்சையாக தேர்வு செய்யும் உரிமையைப் பெறுகிறார்கள்.
அதே வேளையில் 18-வயதுக்கும் குறைவாக உள்ள பிள்ளைகளை மதமாற்றம் செய்யும் முழு உரிமையும் கணவனும் மனைவியும் பெற்றுள்ள நிலையில், இருவரும் இணைந்து இதற்கு ஒப்புதல் வழங்கினால் மட்டுமே அந்த பிள்ளையை மதமாற்றத்திற்கு உட்படுத்த முடியும் என்பதே கூட்டரசு அரசியல் சட்டம் கூறுகிறது என்றார்.
கடந்த 1986-ல் நடந்த வழக்கொன்றில், பெற்றோர் களுக்குள் ஏற்பட்ட குடும்பத் தகராற்றினால், தங்கள் பிள்ளையை இருவரில் ஒருவர் பிறந்த பத்திர நகலைக் கொண்டு மதமாற்றம் செய்ததின் விளைவுதான் முடிவில்லாப் போராட்டங் களுக்கிடையே இந்திராகாந்தி தொடுத்த வழக்கிற்கு முடிவு கிடைக்காமல் இழுபறியில் உள்ளது என்றும் சிவநேசன் கூறினார்.
போலீசாரும் இந்திராகாந்தியின் பிள்ளைகள் எங்கே இருக்கின்றனர் என்று கண்டு பிடிக்க முடியாமல் பல ஆண்டுகளாக இடைவிடாமல் தேடி வருகின்றனர். இது குறித்து நேற்று முன்தினம் தேசியப் போலீஸ் படைத் தலைவரும் உறுதிப்படுத்தினார்.
மதம் மாறியவர்களின் பிரச்சினை அத்துடன் முடிவுக்கு வந்து விடுகிறது. இஸ்லாமிய இலாகா பொறுப்பினை ஏற்கிறது. ஆனால், மதம் மாறாமல் உள்ளவர்கள் அனுபவிக்கும் துன்பத்திற்கு எல்லையே இல்லை என்றார் சிவநேசன்.
பாதிக்கப்பட்டவர்கள் நீதி மன்றத்தின் உதவியை நாடினால், கூட்டரசு சட்டம் 121 (1) (ய) பிரிவின் கீழ் சிவில் நீதிமன்றத்தில் இஸ்லாம் சம்பந்தப்பட்ட வழக்கை செவிமடுப்பதற்கு அனுமதி கிடையாது என்று அத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு கோப்புகள் மூடப்படும். அதற்கு மேலாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிகேட்டு எங்கும் செல்ல முடியாது என்றும் சிவநேசன் தெரிவித்தார்.
மதம் மாறியவர்கள் சிவில் நீதி மன்றம் வரவேண்டிய அவசியமில்லை என்று கூறுகின்றனர். ஆனால், ஷரியா நீதி மன்றம் அழைத்தால் மட்டுமே வருவேன் என்கின்றனர். இஸ்லாம் அல்லாதார் ஷரியா நீதி மன்றம் செல்ல முடியாது. பாதிக்கப்படவர்களுக்கு இரு நீதி மன்றத்திலும் அங்கீகாரம் கிடைக்காத நிலையில், நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் துன்பத்தை சொல்லி மாளாது என சிவநேசன் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் சட்டமன்றம் சந்திக்கவுள்ள இச்சட்டத்தை முறியடிக்க அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். இந்நிலையில், சிலாங்கூர் ஜசெக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நால்வரும் சுல்தானை சந்தித்துள்ளனர், அந்த நால்வரும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் சிவநேசன் உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × one =