பெரியகோவில் கோபுர கலசங்களில் தங்க முலாம் பூசும் பணி நிறைவு

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி கோவிலில் தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேகத்தையொட்டி பெரியகோவில் கோபுரங்கள், மதில்சுவர்கள், சன்னதிகள் சுத்தப்படுத்தப்பட்டது. தெய்வங்கள் சுத்தப்படுத்தப்பட்டு, அ‌‌ஷ்டபந்தன மருந்து சாத்தும் பணி நடந்தது. சிதைந்த சிற்பங்களும் சீரமைக்கப்பட்டு வருகிறது.

கோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கில் யாகசாலை பூஜைக்காக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலை பூஜை வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது.

கோபுரகலச திருப்பணி மேற்கொள்வதற்காக கோபுரங்களில் இருந்து கலசங்கள் கீழே இறக்கப்பட்டுள்ளன. பெருவுடையார் சன்னதியில் உள்ள 216 அடி உயரமுள்ள மூலவர் கோபுரத்தில் 12 அடி உயரம், 4½ அடி அகலத்துடன் கூடிய செம்பினால் ஆன கலசம் பொருத்தப்பட்டிருந்தது. கலசம் 3 பெரிய பாகங்களாலும், 5 சிறிய பாகங்களாலும் இணைத்து பொருத்தப்பட்டிருந்தது.

இதேபோல் மற்ற சன்னதிகளின் கோபுரத்தில் இருந்த கலசங்களும் கழற்றப்பட்டு திருச்சுற்று மண்டபத்தின் தென்பகுதியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. அங்கு கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு கண் காணிக்கப்பட்டது.

இந்த கலசத்தின் தற்போதைய தன்மை குறித்து கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் கதிரியக்க பிரிவின் தலைவரும், விஞ்ஞானியுமான வெங்கட்ராமன் தலைமையில் மேனகா உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவினரும், இந்திய தொழில்நுட்ப கழகத்தின் உலோகவியல் பேராசிரியர் முருகையன் அமிர்தலிங்கம் தலைமையிலான குழுவினரும் ஆய்வு செய்தனர். பின்னர் நவீன கருவியின் உதவியுடன் கலசத்தின் தன்மை அறியப்பட்டது.

இதையடுத்து கோபுர கலசங்கள் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறையின் அங்கீகாரம் பெற்ற ஸ்தபதி செல்வராஜ் இந்த பணியை மேற்கொண்டார். இதில் 10-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். சுத்தப்படுத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து தங்க முலாம் பூசும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது அனைத்து கோபுரகலசங்களும் தங்க முலாம் பூசப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் மீண்டும் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இதையடுத்து ஏற்கனவே ஆய்வு செய்த அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்வதற்காக மீண்டும் இன்று(செவ்வாய்க்கிழமை) பெரியகோவிலுக்கு வருகிறார்கள். அவர்கள் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் அவர்கள் முன்னிலையில் கலசங்கள் பொருத்தும் பணி வருகிற 30-ந் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 4 =