பெரிக்காத்துடன் உறவு துண்டிப்பு; அம்னோவின் முடிவு உறுதி செய்யப்பட்டது


வரும் ஆகஸ்டு மாதத்திற்குள் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்துடனான உறவை அம்னோ துண்டிக்கும் என்பதை அம்னோ தேர்தல் தலைவர் டத்தோஸ்ரீ தாஜூடின் அப்துல் ரஹ்மான் நேற்று உறுதிப்படுத்தினார். நேற்று முன்தினம் கூடிய அக்கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டது.
பெரிக்காத்தானுடனான உறவை துண்டிப்பது குறித்து கடந்த மாதம் நடைபெற்ற தனது வருடாந்திரக் கூட்டத்தில் அம்னோ முடிவெடுத்தது. அந்த ஒருமித்த முடிவு குறித்து விவாதிக்கும் நோக்கத்தில் நேற்றுமுன்தினம் உச்சமன்றம் கூடியது.
கோவிட்-19 பெருந்தொற்று ஆபத்து நிலவி வரும் இவ்வேளையில், கட்சித் தேர்தலை நடத்துவது சீராக நடத்துவது என்பது குறித்து தேசியப் பாதுகாப்பு மன்றத்திடமிருந்தும் சங்கப் பதிவகத்திடமிருந்தும் தகுந்து ஆலோசனைகளைப் பெறுவதற்கு அம்னோ எண்ணம் கொண்டுள்ளது என்றும் தாஜூடின் குறிப்பிட்டார். அம்னோவின் மகளிர், இளைஞர் மற்றும் புத்ரி பிரிவுகள் உட்பட அனைத்து கிளைகளும் 191 டிவிஷன்களும் மொத்தமாக 66,287 கூட்டங்களை நடத்த வேண்டி உள்ளது.
அதில் முப்பத்து மூன்று லட்சம் பேர் பங்கு பெறுவார்கள். இத்தேர்தல்கள் அனைத்தும் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில், கோவிட்-19 பெருந்தொற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது என்றார் அவர்.
அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடி மற்றும் பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோருக்கு இடையே நடைபெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் விவகாரம் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா என்று கேட்கப்பட்டதற்கு, அந்த விவகாரம் அக்கூட்டத்தில் எழுப்பப்படவில்லை என்று தாஜூடின் கூறினார். அந்த விவகாரம் மிக அவசியமானது என்று உச்சமன்ற உறுப்பினர்கள் எவரும் கருதியிருந்தால், அதனை அவர்கள் துணிச்சலாக கூட்டத்தில் எழுப்பியிருக்க வேண்டும் என்றார். உச்சமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தலைவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அதே நேரத்தில், மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளைக் களைவதற்கு அவர்கள் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார் என தாஜூடின் தொடர்ந்து குறிப்பிட்டார்.
பெர்லிஸ் அம்னோ மாநில தொடர்புக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம் நீக்கப்பட்டிருப்பது பற்றி கருத்துரைத்த அவர், இந்த விவகாரத்தை ஷாஹிடான் தொடர்ந்து நீட்டித்துக் கொண்டிருக்கக் கூடாது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × one =