பெரிக்காத்தான் நேஷனலில் அம்னோ இல்லை! மஇகா இருக்கிறதா?

0

பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசிய கூட்டணியில் அம்னோ இணையாது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஸாஹிட் ஹமிடி அறிவித்துள்ள வேளையில், மஇகாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி அமைக்கப்பட்ட போது கூடிய தலைவர்கள் குழுவில், சரவாக்கை சேர்ந்த ஜிபிஎஸ் எனப்படும் கூட்டணியின் பிரதிநிதி, கட்சியே இல்லாத அஸ்மின் அலி போன்றோர் இருந்தனர். ஆனால், 74 ஆண்டு கால மஇகாவின் பிரதிநிதி ஒருவர் கூட இல்லை.
பெரிக்காத்தான் நேஷனல் அரசு மலாய்க்காரர்-இஸ்லாமியர் ஆட்சி என்ற முழக்கம் செய்யப்பட்டதினால் சீனர்களின் கட்சியான மசீச மற்றும் இந்தியர்களின் கட்சியாக அடையாளப்படுத்தப்படும் ம இகா ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் அக்குழுவில் இடம் பெறவில்லை.
சுதந்திர மலேசியாவில் மலாய்க்காரர் அல்லாதவர்கள் அரசியல் களத்தில் இதுவரை இது போல் ஒரம் கட்டப்பட்டதில்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் ஆபத்து ஒலியை எழுப்பும் அளவிற்கு இந்த பெரிக்காத்தான் நேஷனல் என்ற இன வாத கூட்டணி அமைக்கப்பட்டது.


ஆனால், ஆட்சி அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதற்காகவும், பல்லின மக்களை பிரதிநிதிப்பதாக ஒரு தோரணையை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினாலும் ‘மசீச -மஇகா’விற்கு அமைச்சரவையில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதனால் பெரிக்காத்தான் நேஷனல் ‘மசீச -மஇகா’வை கறிவேப்பிலை போல் பயன்படுத்திக் கொள்வதாக குறை கூறப்பட்டு வந்தது.
மேலும், கட்சி தாவல் நடவடிக் கையின் வழி பக்காத்தான் ஹராப்பானிடம் இருந்து பெரிக்காத் தான் நேஷனல் கைப்பற்றிய மாநிலங்களிலும் மஇகா ஓரம் கட்டப்பட்டுதான் வருகிறது.
ம இகாவின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ விக்னேஸ்வரன் கெடா மாநில மந்திரி பெசாரை நேரடியாக சந்தித்த பிறகும் இந்திய விவகாரத்திற்கான மாநில மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாக பாஸ் கட்சியை சேர்ந்த குமரேசன் நியமிக்கப்பட்டாரே தவிர மஇகா விற்கு அந்த அங்கீகாரம் வழங்கப் படவில்லை.இதே நிலைதான் பேரா மாநிலத்திலும் தொடர்கிறது.
அம்னோ பெரிக்காத்தான் நேஷனலில் இணைந்து இருப்பதினா
லும், மஇகா அம்னோவுடன் இணைந்து பரிசான் நேஷனல் கூட்டணியில் இருப்பதினாலும் மட்டுமே மஇகா பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிஅரசில் இடம் பெற்று இருக்கிறது.
ஆனால், தற்சமயம் அம்னோவே தாங்கள் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இல்லை. மாறாக பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் இடம் பெற்று மட்டும் இருக்கிறோம் என்று அறிவித்துவிட்டனர்.
அம்னோ பெரிக்காத்தான் நேஷனலில் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்த பிறகு அக்கூட்டணியில் அதிகாரப்பூர்வ உறுப்பினராக இல்லாத மஇகாவின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது.
இந்நிலையில் மஇகா பெரிக் காத்தான் நேஷனல் கூட்டணியில் இருக்கிறதா? இல்லையா? என்ற அறிவிப்பை ஏன் மஇகா தலைமைத் துவம் இதுவரை அறிவிக்கவில்லை.
மஇகா அம்னோவின் வழி பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்
கத்தில் இல்லை என்ற முடிவு வெளிப் படையாக அறிவிக்கப்பட்டால் மத்திய மாநில அளவிலும் மஇகாவின் நிலை நிச்சயமாக மாறுபடும். இனிமேல் நாங்கள் பெரிக்காத்தான் நேஷனலில் இருப்ப தினால் இந்திய விவகாரத்திற்கான மாநில மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி நியமனத்திற்கு மஇகா அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று இதுவரை கூறியது போல் இனி கோரிக்கைகள் முன்வைக்க முடியாது. பெரிக்காத்தான் நேஷனல் உறுப்பு கட்சி என்ற கோரிக்கையை மஇகா முற்றாக கைவிட வேண்டும். அதற்கு மஇகா தயாராக இருக்கிறதா?
அம்னோ பெரிக்காத்தான் நேஷனலில் இருந்து விலகி பாஸ் கட்சியுடனான முவாஃபாக்காட் நேஷனல் கூட்டணியை வலுப்படுத் தப்போவதாக கூறியுள்ளது.
ஆனால், முவாஃபாக்காட் நேஷனல் கூட்டணியில் மஇகா இல்லை. இந்நிலையில் அடுத்த தேர்தல் பாரிசான் நேஷனலுக்கு மாற்றாக முவாஃபாக்காட் நேஷனல் தேர்தலில் களம் இறங்கினால் மஇகா முவாஃபாக்காட் நேஷனலின் ஆதரவுக் கட்சியாக செயல்படுமா? அல்லது அதற்கு முன்பு முவாஃபாக்காட் நேஷனலில் தங்களையும் ஓர் உறுப்புக் கட்சியாக இணைத்துக் கொள்ள மனு செய்யுமா? என்ற கேள்வி எழுகிறது. ஐபிஎப் கட்சி பாரிசான் நேஷனலில் தன்னை இணைத்துக் கொள்ள காத்திருந்தது போல் மஇகா தற்போது முவாஃபாக்காட் நேஷனலில் இணைய காத்திருக்கப் போகிறதா? என்ற கேள்வி எழுகிறது.
மேலும் டிஎச்பிபி எனப்படும் பாஸ் ஆதரவாளர்கள் அமைப்பு இந்திய உறுப்பினர்கள் மற்றும் அஸ்மின் அலியின் இந்திய ஆதரவாளர்களுடன் மஇகா தேர்தலுக்கான தொகுதி, பதவி நியமனம், மேலவை நியமனம் போன்றவற்றில் பங்கிட்டுக் கொள்ளப்போகிறதா? என்ற கேள்வியும் பொதுமக்களிடம் பரவலாக விவாதிக்கப்படுகிறது.
மஇகா வெற்றி பெறும் இடங்
களில் மட்டுமே போட்டி யிடும் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ விக்னேஸ்வரன் கூறியிருப்பது இந்த சந்தேகத்திற்கு வலு சேர்க்கிறது.
மஇகாவிற்கு பாரம்பரிமாக ஒதுக்கப்பட்டு வந்த அனைத்து இடங்களிலும் போட்டியிடுவோம். அதில் வெற்றி பெறுவோம் என்ற நிலையை விட்டு விட்டு, தொகுதிiயே விட்டுக் கொடுப்போம் என்று போட்டிக்கு முன்பே தோல்வியை மஇகா ஒப்புக் கொண்டுள்ளது அதன் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. மற்ற கட்சிகளுக்கு இப்படி விட்டுக் கொடுத்து இழக்கும் தொகுதியை மீண்டும் மஇகா பெற நினைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும். இதை அறிந்தும் வலிய சென்று தொகுதியை விட்டுக் கொடுக்கும் இந்த நிலை மஇகா மேலும் வலுவிழந்து வருகின்ற கட்சியாக தன்னை அடையாளப்படுத்துக் கொண்டிருக்கிறது.
கடந்த தேர்தல்களில் மஇகா பல தொகுதிகளை இழந்திருந் தாலும் அம்னோவும் தற்சமயம் பெரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளது. அக்கட்சியின் முன்னாள் தலைவர் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரஸாக் ஊழல் குற்றவாளி என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளார். இது அடுத்த தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
இந்த ஊழல் குற்றச்சாட்டின் பிரதபலிப்பு மலாய்க்காரர்கள் வாக்குகளை பிளவுபடுத்தும் என்ற சூழ்நிலையில் இந்தியர்களின் பிளவுபடாத வாக்குகள் பெரும்பான் மையான தொகுதித் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்பதனால் மஇகா இதை காரணமாக வைத்து அதிக இடங்களை கேட்டுப் பெற வேண்டும். குறைந்தது இருக்கும் இடங்களையாவது தக்கவைத்துக் கொள்ள அம்னோவிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
ஆனால், ஆரம்பித்த இடத்திற்கே பிரச்சினை மீண்டும் வருகிறது. மஇகா தற்போது கூட்டணியில் இருக்கிறது என்பது முதலில் தெளிவுபடுத்த வேண்டும். பெரிக்காத்தான் நேஷனலிலா? அல்லது முவாஃபாக்காட் நேஷனலிலா? அல்லது பாரிசான் நேஷனலில் மட்டுமா?
இந்நிலையில் மஇகா தனது தொகுதிகளை அம்னோவிற்கு விட்டுக் கொடுக்கிறதா? அல்லது பாஸ் கட்சி ஆதரவாளர்களுக்கு விட்டுக் கொடுக்கப்போகிறதா? அல்லது அஸ்மின் அலி ஆதரவானளர்களுக்கு விட்டுக் கொடுக்கப்போகிறதா? என்பது ஒருபுறம் எழும் கேள்வி.
உதாரணத்திற்கு சிகாமட் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர், துணைத் தலைவர், உதவித் தலைவர் போட்டியிட்ட பாரம்பரியத் தொகுதி. தற்சமயம் அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக அஸ்மின் ஆதரவாளர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா இருக்கிறார். மஇகா இத்தொகுதியை அவருக்கு விட்டுக் கொடுக்கப்போகிறதா?
கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை தொகுதியை தனக்கு வழங்கும்படி டான்ஸ்ரீ கேவியஸ் இறுதி வரை மஇகாவிடம் போராடினார். மஇகா அவருக்கு விட்டுக்கொடுக்க மறுத்ததனால் அவர் பாரிசான் நேஷனல் கூட்டணியை விட்டே வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் அதன் பிறகு வந்த இடைத்தேர்தலில் மஇகா அத்தொகுதியை அம்னோவிற்கு விட்டுக் கொடுத்து விட்டது. பாரம்பரியமாக வெற்றி பெற்ற தொகுதியை விட்டுக் கொடுத்தது. அதை மீண்டும் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் இருக்கும் மஇகா இருக்கும் தொகுதியையும் விட்டுக் கொடுப்பதாக கூறுவது அதன் பலவீனத்தைக் காண்பிக்கிறது.
முன்பு டத்தோஸ்ரீ பழனிவேல்- டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம் ஆகியோர் கட்சியின் தேசியத் தலைவராக பதிவ வகித்த காலகட்டங்களில் அவர்களுக்கு எதிராக வெளிப்படையாகவும், ஆக்ரோஷமாகவும் கேள்விகளை எழுப்பி அன்றாடம் அறிக்கைகள் வெளியிட்ட மஇகாவின் துடிப்புமிக்க உறுப்பினர்கள், மஇகாவின் இன்றைய நிலை குறித்து எந்த கேள்வியும் எழுப்பாமல் இருப்பது கட்சி உண்மையில் செயல்படுகிறதா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − ten =