பெண் விடுதலைக்காக இறுதிவரை போராடியவர் தந்தை பெரியார்- பேராசிரியர் டாக்டர் இராமசாமி

பினாங்கு மலேசிய திராவிடர் கழகம் ஏற்பாட்டில்,தந்தை பெரியார் இ.வே.ராமசாமியின் 142 ஆம் ஆண்டு பிறந்ந நாள் விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மலேசிய திராவிடர் கழக தேசிய தலைவரும், பினாங்கு மாநில மதிகவின் தலைவருமான சா.த.அண்ணாமலை இந்த விழாவுக்கு தலைமையேற்றார்.
பட்டர்வொர்த், ஆனந்த பவன் உணவக மாநாட்டு அறையில் நடந்த இவ்விழாவில் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.ராமசாமி, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டி, டத்தோ அ.சௌந்தரராஜன், சூரியா உணவக உரிமையாளர் சூரியா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
தமிழ் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது,மதிக மாநில செயலாளர் சொ.மருதமுத்து வருகையாளர்களை வரவேற்று பேசியதுடன்,தந்தை பெரியார் தமிழ் இனத்துக்கும், தமிழ்மொழிக்கும் ஆற்றிய சீரிய தொண்டுகளையும் நினைவு கூர்ந்து பேசினார்.
மதிக தலைவர் சா.த. அண்ணாமலை தமதுரையில், தந்தை பெரியார் பிறந்தநாள் தேசிய அளவில் கடந்த 17.9.2020 ஆம் நாள் தலைநகர் கிரேன்ட் பசிபிக் தங்கு விடுதியில் சிறப்பாக நடைபெற்றதைக் கூறினார்.
இவ்விழாவில் பினாங்கு முதலமைச்சர் பேராசியர் பி.இராமசாமி தந்தை பெரியார் விழாவில் கலந்து கொண்டதற்கு நன்றி பாராட்டினார்.
இதனிடையே, பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி தமது சிறப்புரையில், திராவிடர் இனம் ஆதி இனம் என்பதுடன் தமிழர்கள் ஜாதி எனும் கொள்கையில் வகைப்படுத்தப்படவில்லை என்பதுடன் ஆரிய கலப்பினால் ஜாதி எனும் பகுத்து பார்க்கும் வேற்றுமைகள் தோன்றியதாக கூறினார்.
பெரியார் பெண்அடிமை கொள்கைகளை அடியோடு ஒழிக்க வேண்டும் எனவும் பகுத்தறிவு சிந்தனை மூட நம்பிக்கைகளை ஒழிக்க தனது வாழ் நாள் முழுவதும் பாடுபட்டார் என மேலும் சொன்னார்.
பெரியார் கூறிய கருத்துகள் யாவும் தேவையானவற்றை தெரிந்து பகுத்தறிந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்பதை தமது தொண்டர்களுக்கு கூறினாரே ஒழிய அவர் எக்காலத்திலும் வற்புறுத்தியதில்லை என்றார் அவர்.
நமது நாட்டை பொறுத்தவரை ஜாதியின் தாக்கம் மிகுதியாக இல்லை தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்கள் நமது நாட்டுக்கு சம்பந்தமில்லாதது என விவரித்த பேராசிரியர் ப.ராமசாமி, பெரியாரின் சிந்தனைகளையும் பகுத்து அறிந்து கொள்ளும் கொள்கையையும் கடைப்பிடித்தால் போதுமானது என்றார்.
உலகளாவிய நிலையில் தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் மகத்தான பணியை ஆற்றியிருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை என்று எடுத்துரைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × four =