பெண் இயக்கவாதியிடம் நான் அநாகரிகமாக நடக்கவில்லை; உள்ளூர் மஇகா தலைவர் சந்திரசேகரன் விளக்கம்

பெண் இயக்கவாதி ஒருவரிடம் தாம் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுவதைச் சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பிரிவு துணைத் தலைவர் எம்.சந்திரசேகரன் மறுத்துள்ளார். மாறாக, அரசு சாரா அமைப்பொன்றின் செயலாளரான அப்பெண்தான், மஇகா உறுப்பினர்களை தகாத வகையில் பேசியதாக அவர் சொன்னார். நான் அநாகரிகமாக நடந்து கொண்டதாக அப்பெண் குற்றம் கூறிருப்பதை வன்மையாக மறுக்கிறேன். அதற்கு மாறாக, சம்பந்தப்பட்ட அப்பெண்தான் மஇகா உறுப்பினர்களைப் ‘பொண்டான்’ ( திருநங்கைகள்) என்று கூறி எங்களுக்கு சினமூட்டினார். அச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தும்படி போலீசாரை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று சந்திரசேகரன் கூறினார். சம்பந்தப்பட்ட அந்த பெண் இயக்கவாதி அதற்கு முன்பாக போலீசில் புகார் செய்திருந்தார். அப்புகாரை மறுக்கும் வகையில் சந்திரசேகர் தமது சார்பாக அப்புகாரைச் சமர்ப்பித்தார். நவம்பர் 25ஆம் தேதியன்று சாக் கடையில் கழிவுநீர் தேங்கியிருக்கும் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கத்தில் சுங்கை சிப்புட்டில் உள்ள குடியிருப்புப் பகுதியொன்றுக்குச் சென்றிருந்த வேளையில், சம்பந்தப்பட்ட அந்த மஇகா உறுப்பினர் தம்மை நோக்கி பண்பற்ற முறையில் பேசியதாகவும் அதன் பின்னர் தமது கால்சட்டையின் ‘ஜிப்’யைத் திறந்து காட்டியதாகவும் அப்போலீஸ் புகாரில் அப்பெண் தெரிவித்துள்ளார். தமது அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் கோலா கங்சார் மாநகர் மன்ற அதிகாரிகளுடன் சென்றிருந்தபோது அச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அப்பெண்ணிடமிருந்து போலீஸ் புகார் பெறப்பட்டிருப்பதை சுங்கை சிப்புட் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் கைஸாம் அமாட் ஷஹாபுடின் உறுதிப்படுத்தினார். இதனிடையே, பெண்களுக்கு எதிரான எந்தவொரு பாலியல் தாக்குதல்களையோ சீண்டல்களையோ மஇகா சகித்துக் கொள்ளாது என்று மஇகா தேசிய மகளிர் பிரிவுத் தலைவர் மோகனா முனியாண்டி எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 8 =