பெண்கள் அவசியம் செய்ய வேண்டியவை…

0

குடும்பத்தினருக்கான காப்பீடு குறித்து திட்டமிடும்போது பெண்களும் இருப்பது அவசியம். தேவையற்ற பாலிசிகளை தவிர்த்தல், விண்ணப்ப விவரங்களை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்தல், வாரிசுதாரராக தன்னை நியமிக்கச் சொல்லி வலியுறுத்துதல், வாரிசுதாரரின் விவரங்களைச் சரியாக எழுதுதல் ஆகியவை பெண்களின் கடமை. எங்கெல்லாம் ‘ஜாயின்ட் ஓனர்ஷிப்’ சாத்தியமோ (வங்கிக் கணக்கு, அசையும், அசையாச் சொத்துகள் அனைத்தும்) அவையெல்லாம் இருவர் பெயரிலும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் என்னென்ன சேமிப்புகள்-முதலீடுகள் உள்ளன, அவற்றை தெளிவாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இதில் தவறு எதுவும் இல்லை.

உயில் இன்றியமையாதது. தெள்ளத் தெளிவாக யார் யாருக்கு என்னென்ன சேர வேண்டும் என உயிலில் எழுதி கையெழுத்திட்டு சாட்சி கையெழுத்துகளோடு வையுங்கள். உயில் பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கும். உயிலை எழுதுபவர் அவர் வாழ்நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் அதை மாற்றி எழுதலாம். ஒருமுறை எழுதிவிட்டால் சொத்தின் உரிமை போய்விடும் என்று அவர் பயப்படத் தேவையில்லை. பிள்ளைகள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், மனைவியையே வாரிசுதாரராக எழுதுங்கள். மனைவியைப் பிள்ளைகளின் தயவில் விட்டுவிடாதீர்கள்.

வங்கிக்கணக்கு, செல்போன் அக்கவுன்ட் லாகின், இ-மெயில் லாகின் உள்பட அனைத்து பாஸ்வேர்டுகளையும் இருவரும் அறிந்த ஓரிடத்தில் (லேப்டாப், நோட்புக்) சேமித்து வையுங்கள். ஒவ்வொரு முறை பாஸ்வேர்டு மாற்றும்போதும் தவறாமல் அதில் அப்டேட் செய்துவிடுங்கள். கணவன்-மனைவி இருவரும் உபயோகிக்கும் செல்போன்கள் பரஸ்பரம் மற்றவர் பெயரில் இருந்தால் நல்லது. திடீரென ஒருவருக்கு ஏதேனும் விபரீதம் என்றால் மற்றவர் அந்த போன் நம்பரைத் தொடர்ந்து உபயோகிக்க இயலும். செல்போனில் வரும் ஓ.டி.பி. (One Time Password) இல்லாமல் வங்கிக் கணக்கு, இணையப் பணப்பரிவர்த்தனை என எதிலும் பாஸ்வேர்டு மாற்றுவது கடினம்.

பெரும்பாலான தளங்களில் பாஸ்வேர்டு ரெக்கவரிக்கு சில கேள்வி பதில்கள் இருக்கும். அவற்றில் இருந்து 10 கேள்விகளைத் தேர்ந்தெடுத்து, இருவருமாகச் சேர்ந்து அவற்றுக்கான பதில்களை உள்ளடு கொடுத்து வையுங்கள். அவற்றையும் பாஸ்வேர்டு சீட்டில் சேமித்து வையுங்கள். ஒருவேளை ஏதோ ஒரு தளத்தின் பாஸ்வேர்டு தெரியாவிட்டாலும் இவற்றின் மூலம் பாஸ்வேர்டை மாற்ற இயலும். குழந்தை பிறப்புக்குப் பின் குடும்ப நிர்வாகியாக மாறும் பெண்கள், குழந்தைகள் ஓரளவு வளர்ந்து முழுநேர பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பின்னர் மீண்டும் வேலைவாய்ப்பு தேட வேண்டும். பகுதி நேரமாகவோ, வீட்டில் இருந்தோ வேலை செய்யும் வாய்ப்புகள் இன்று எல்லா துறைகளிலும் பெருகியிருக்கின்றன. அவற்றை பற்றிப் பெண்கள் யோசிப்பதும் முக்கியம்.

அமெரிக்காவில் விவாகரத்து ஆகும்போது (திருமணத்துக்கு முன்பே ஒப்பந்தம் போடவில்லை என்றால்) இருக்கும் சொத்துகள் அனைத்தும் கணவன்-மனைவிக்குப் பிரித்து வழங்கப்படும், அதுநாள் வரை யார் எவ்வளவு சம்பாதித்தார்கள் என்பதெல்லாம் பொருட்டே இல்லை. இப்படிப்பட்ட தீர்க்கமான விதிகள் இந்தியாவில் இல்லாத நிலையில் பெண்கள் தமக்கென சேமித்தல் அவசியம். மேலே சொன்னாற்போல ஜாயின்ட் வங்கிக் கணக்கு வைத்துக்கொள்ளலாம். அல்லது பெண்கள் தங்களுக்கென ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கி அதில் குடும்பத்தின் சேமிப்பில் ஒரு தொகையை வைக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 5 =