பெண்களே நீங்க செல்போனுக்கு அடிமையா…?

இன்டர்நெட்டை, தகவல் அறியும் சாதனமாக, அறிவூட்டும் நண்பனாக, தங்கள் வேலைகளை சுலபமாக்கி கொள்ளும் ஒரு நல்ல ஊடகமாக மட்டும் எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள்? எத்தனை பேர் அதனை தங்கள் முன்னேற்றத்திற்கு மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள்? நல்ல விஷயங்களை விட அதிகமாய் கலாசார சீரழிவுக்கான விஷயங்களே இன்டர்நெட் மூலம் அதிகம் பார்க்கப்படுவதாகவும், இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் இன்டர்நெட் உபயோகத்திற்கு அடிமையாகி கொண்டிருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. இன்றைய இளைஞர்களிடம் யதார்த்த உலகத்தில் பங்குகொள்வது குறைந்து, இன்டர்நெட் மூலமாக மட்டும் உலகை காண ஆரம்பிக்கும் போக்கு வளர ஆரம்பித்துள்ளது.

இது ஒரு நோயாக மாறி விட்டதாக கூறும் அமெரிக்க உளவியல் கழகம், அந்த நோய் இன்டர்நெட் உபயோக சீர்குலைவு என்று பெயரிட்டிருக்கிறது. இன்டர்நெட் பயன்படுத்தும் நேரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போவது, இன்டர்நெட் இணைப்பு இல்லாத நேரங்களில் எதையோ இழந்தது போல தோன்றுவது, இன்டர்நெட் தடைபடும் போது மற்றவர்களிடம் கோபித்துக் கொள்வது, ஒழுங்காக மற்ற வேலைகளை பார்க்க முடியாமல், அந்த வேலை நேரத்தையும் இன்டர்நெட்டிலேயே செலவழிப்பது, மனிதர்களிடம் பழகும் நேரத்தையும், உறங்கும் நேரத்தையும் கூட படிப்படியாக குறைத்து கொண்டு இன்டர்நெட்டில் அரட்டை, விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிடுவது போன்றவை எல்லாம் அந்த நோய் உள்ளவர்களின் தன்மைகள் என்று உளவியலாளர்கள் சொல்கிறார்கள்.

அதே போல் செல்போன் தகவல் தெரிவிக்கும் சாதனமாய் பயன்படுவது சிலருக்கு மட்டுமே. இன்றைய இளைஞர்களில் மிக அதிகமானோர் வெட்டிப் பேச்சுக்குத்தான் அதை அதிகம் பயன்படுத்துகிறார்கள். அறிய வேண்டியவையும், செய்ய வேண்டியவையும் எத்தனையோ இருக்க சதாசர்வ காலம் செல்போனில் பேசிக் கொண்டும், எஸ்.எம்.எஸ். அனுப்பிக்கொண்டும் தங்கள் பொன்னான நேரத்தை இளைய சமுதாயம் இழந்து கொண்டிருப்பது முட்டாள்தனத்தில் முதலிடம் பெறும் தன்மை அல்லவா? நேரடி வெட்டிப் பேச்சுகள் கூட, ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட நேரம் முடிவடைவது உண்டு.

அவரவர் வீட்டுக்கு சாப்பிடவோ, உறங்கவோ போக வேண்டியது வரும். ஆனால் செல்போனில் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே பேசும் வசதி இருப்பதால் இது முடிவிற்கு வருவது இல்லை. இளமைக்காலம் இனிமையானது. இது பொன்னான காலமும் கூட. உங்கள் எதிர்காலத்தை நீங்கள் விதைக்கும் காலமும் அதுதான். இந்த காலத்தை திருடி கொண்டு வீணடிக்கும் எதையுமே, யாரையுமே நீங்கள் அனுமதிக்காதீர்கள். இன்டர்நெட், செல்போன் வசதிகளை கண்டிப்பாக பயன்படுத்துங்கள். ஆனால் அதன் பயன்பாட்டில் உங்கள் கட்டுப்பாடு இருக்கட்டும். தேவைப்படும் போது வேண்டியதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டிய கருவிகளாக அவற்றை வைத்திருங்கள்.

மாறாக அவற்றிற்கு அடிமைப்பட்டு வாழ்க்கையை தொலைக்க வேண்டாம் என்று எச்சரிக்கவும் செய்கிறார்கள், உளவியலாளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 5 =