பெட்ரோனாஸில் தலையீடு ஏன்? புத்ராஜெயா விளக்க வேண்டும்!

தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸின் தலைமைச் செயல்முறை அதிகாரி வான் ஸுல்கிப்ளி வான் அரிபின் கடந்த மாதம் தமது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பெட்ரோனாஸில் அரசாங்கம் தனது தலையீட்டைப் பற்றி விளக்கமளிக்க வேண்டும் என பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
அரசியல் காரணங்களுக்காக சரவாக் அரசாங்கத்திற்கு சலுகைகளைத் தர பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம், பெட்ரோனாஸுக்கு நெருக்குதல் அளித்ததன் காரணமாக வான் ஸுல்கிப்ளி ராஜினாமா செய்துள்ளாரா என அவர் வினவினார்.
நாட்டின் வளம் மற்றும் வருமானத்தைக் கண்காணிக்கும் நிறுவனம் பெட்ரோனாஸ் என்பதால், வான் ஸுல்கிப்ளியின் ராஜினாவின் பின்னணிக்கு உண்மைக் காரணம் என்ன என மக்கள் கேள்வி எழுப்பி வருவதாக அவர் சொன்னார்.
ஆகையால் இதற்கான உண்மையான காரணத்தை புத்ராஜெயா தெளிவாக விளக்கமளிக்க வேண்டும் என போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
சரவாக்கிற்கு 200 கோடி வெள்ளி எண்ணெய் மற்றும் எரிவாயு வரி வழங்கும் மத்திய அரசாங்கத்தின் திட்டத்திற்கு இணக்கம் தெரிவிக்காததால் வான் ஸுல்கிப்ளி தமது பதவியை ராஜினாமா செய்ததாக நம்பப்படுகிறது.
இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாததால் ஆட்சேபம் தெரிவித்து வான் ஸுல்கிப்ளி பதவி விலகியதாக அவருக்கு அணுக்கமான வட்டாரம் ஒன்று கூறியுள்ளது. கொள்கைகளின் காரணமாக வான் ஸுல்கிப்ளி பதவியை ராஜினாமா செய்துள்ளார் என அந்த வட்டாரம் தெரிவித்தது.
இந்த ராஜினாமாவால் பல கேள்விகள் எழுந்துள்ளதாக சுமார் 40 ஆண்டுகள் பெட்ரோனாஸில் பணியாற்றியுள்ள அன்வார் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 11 =