பெட்டாலிங் பழைய மார்க்கெட் இந்திய வியாபாரிகள் பரிதவிப்பு

0

ஐம்பது ஆண்டுகள் பழைமை வாய்ந்த பெட்டாலிங் ஜெயா மார்க்கெட்டில் காலங்காலமாக வியாபாரம் செய்து வரும் இந்திய வியாபாரிகள் உட்பட அனைவரும் இப்பொழுது பெரும் துயரத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்ட கோவிட் -19 நோய்த் தொற்று தாக்கத்தினால் பெட்டாலிங் ஜெயா பழைய மார்க்கெட் 40 நாள்களுக்கு மூடப்பட்டன. மார்க்கெட் திறந்து இரண்டு மாதங்கள் ஆனாலும் இங்கு பொதுமக்களின் வருகை குறைந்து விட்டது. ஒரு காலத்தில் பெட்டாலிங் பழைய ஜெயா பழைய மார்க்கெட்டில் காய்கறிகள், பழங்கள், கோழி, மீன், ஆட்டிறைச்சி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும்.
ஆனால், கோவிட் -19 தாக்கத்திற்குப் பின்னர் மக்கள் கூட்டம் இல்லாததால் இங்கு வியாபாரம் செய்யும் ஒட்டுமொத்த வியாபாரிகளும் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இன்னமும் முள்வேலி கம்பிகள் அகற்றப்படவில்லை. கோவிட் -19 தாக்கம் இருக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் வருகை பெருமளவில் குறைந்துவிட்டது. வீட்டிற்குத் தேவையான காய்கறிகள், கோழி, இறைச்சி, மீன் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனத்தை நிறுத்துவதற்கு போதுமான இடவசதிகள் இல்லை.
சாலையோரங்களில் காரை நிறுத்தி விட்டு பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு கார்களுக்கு மின்னல் வேகத்தில் சம்மன்கள் விதிக்கப்படுகிறது.
இதனால், இங்கு பொருள்களை வாங்க வருவதற்கு பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் அஞ்சுகின்றனர் என்று பெட்டாலிங் ஜெயா பழைய சந்தை வியாபாரிகள் சங்கத்தின் துணைத் தலைவர் ராஜரத்தினம் தெரிவித்தார்.
60 இந்திய வியாபாரிகள் கடந்த 50 ஆண்டுகளாக இந்த மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகின்றனர். கோவிட்-19 நோய்த் தொற்று பரவியதைத் தொடர்ந்து மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவினால் 40 நாள்கள் இந்த மார்க்கெட் மூடப்பட்டது. பலமுறை கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அனைவரிடமும் கோவிட் -19 நோய்த் தொற்று மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் மீண்டும் மார்க்கெட் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் (எம்பிபிஜே) பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. கடை வாடகை அதிகரித்து விட்டது. மேலும் குறுகிய இடத்தில் குறைந்தபட்ச பொருள்களை மட்டுமே வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்பதாகும். இதனால் ஒவ்வொரு நாளும் வியாபாரிகள் வருமானமின்றி தவித்து வருவதாக ராஜரத்தினம் தன் மனவேதனையை வெளியிட்டார்.
பெட்டாலிங் ஜெயா பழைய மார்க்கெட்டில் 25 ஆண்டுகளுக்கு மேலாக காய்கறி வியாபாரம் செய்து வரும் குணசேகரன் கூறுகையில், ஒட்டுமொத்தமாக எங்கள் வியாபாரம் பாதித்து விட்டதாக குறிப்பிட்டார்.
காய் கறிகள் எல்லாம் நம் நாட்டில்தான் விளைகின்றன. ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன் 3 வெள்ளிக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளிப்பழம் இன்று 6 வெள்ளி 50 காசாக உயர்ந்திருக்கிறது. தக்காளி, பச்சை மிளகாய், கத்திரிக்காய், கேரட், கோபிஸ் உட்பட அனைத்து வகை பொருள்களின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. காய்கறிகள் விலைகள் கிடுகிடுவென உயர்ந்திருப்பதால் பொதுமக்களும் பொருள்களை வாங்க வருவதில்லை.
மேலும், பொதுமக்களிடம் போதுமான பணமும் புழக்கத்தில் இல்லை என்று குணசேகரன் தெரிவித்தார்.
என் தந்தை இராமையா, இந்த சந்தையில் கடந்த 25 ஆண்டுகளாக காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இப்போது 20 ஆண்டுகளுக்கு மேலாக நான் வியாபாரம் செய்து வருகிறேன் என்று மாசிலாமணி தெரிவித்தார்.
முன்பெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், தற்போது கூட்டத்தையே காணோம். வருமானம் பாதித்துள்ள நிலையில், கடை வாடகையும் 85 வெள்ளியில் இருந்து 300 வெள்ளியாக உயர்ந்துவிட்டது.
நாங்களும் பல போராட்டங்களுக்கிடையே வியாபாரம் செய்து வருகிறோம். வருமானம் பெருமளவில் பாதித்துள்ளதால் நிம்மதியை இழந்துவிட்டோம் என்றார் அவர். இங்கு சில ஆண்டுகளாக காய்கறி வியாபாரம் செய்து வரும் யுகேந்திரகுமார் கூறுகையில், வியாபாரம் பாதிக்கு பாதி குறைந்து விட்டது. வாடிக்கையாளர்கள் வருகையும் குறைந்துவிட்டது. இதனால் காய்கறிகளை விற்க முடியாமல் தவிக்கிறோம் என்று வேதனையோடு குறிப்பிட்டார்.
20 ஆண்டுகளுக்கு மேலாக மீன் வியாபாரம் செய்து வரும் கமலநாதன் கூறுகையில், வியாபாரம் பெரிதும் பாதித்துவிட்டது. மீன் பற்றாக்குறையால் 30 விழுக்காடு வரை விலைகள் ஏற்றம் கண்டிருக்கின்றன. இது பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி இருப்பதாக அவர் சொன்னார்.
33 ஆண்டுகளாக ஆட்டிறைச்சி வியாபாரம் செய்து வரும் அஸிஸ் கூறுகையில் வாடிக்கையாளர்களின் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருப்பதால் வியாபாரம் பெருமளவில் பாதித்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
40 ஆண்டுகளுக்கு மேல் ஆட்டிறைச்சி வியாபாரம் செய்து வரும் முகமட் இப்ராஹிம் கூறுகையில், கோவிட் -19 தாக்கம் ஏற்பட்டது முதல் எங்கள் வியாபாரம் அடியோடு சாய்ந்துவிட்டது என்று பெருத்த வேதனையோடு குறிப்பிட்டார். இதனிடையே, சுங்கை பீசி வட்டாரத்தில் மிட்பீல் பாரதி உணவகத்தை நடத்தி வரும் பாரதி கூறுகையில், நான் இங்குதான் காய்கறி, மீன், கோழி, ஆட்டிறைச்சி வாங்க வருகிறேன்.
காலங்காலமாக இங்கு வாங்கி வருவதால் விலையும் நியாயமாக இருக்கிறது. மேலும் பெட்டாலிங் ஜெயா, பழைய மார்க்கெட்டில் விற்கப்படும் பொருட்கள் அனைத்தும் தரமானதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + five =