பெஞ்சானா நிதியுதவித் திட்டத்தில் முதலாளிகள் ஆர்வம் காட்டவில்லை

0

நிதிப் பிரச்சினையில் சிக்கி யிருக்கும் நிறுவனங்கள், அரசின் பெஞ்சானா திட்டத்தின் வழி புதிய பட்டதாரிகளுக்குப் பயிற்சியை வழங்கி நிரந்தர வேலை வாய்ப்பைத் தர விரும்பவில்லை என்று தெரியவருகிறது.
நிறுவனங்கள் தற்போதைய சூழ்நிலையில் இயங்குவதில் சிரமத்தை எதிர்நோக்குவதால், அவை பயிற்சிப் பட்டதாரிகளுக்குத் தொடர்ந்து நிரந்தர வேலை வாய்ப்பைத் தர முடியாது என்று முதலாளிமார் சங்கங்களின் சம்மேளனமான எம்இஎஃப்பின் செயல்முறை இயக்குநர் ஷம்சுடின் பர்டான் குறிப்பிட்டார்.
பட்டதாரிகளின் பயிற்சிக் காலம் முடிவடைந்த பின்னர், அவர்கள் நிறுத்தப்பட்டால் தாங்கள் சட்டப்பூர்வமற்ற முறையில் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக தொழிலியல் நீதிமன்றத்துக்குச் செல்லவும் முடியும். ஆக, அம்மாதிரியான சிரமத்தை நிறுவனங்கள் எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்றும் ஷம்சுடின் சுட்டிக்காட்டினார்.
தேசிய பொருளாதார மீட்புத் திட்டத்தில் (பெஞ்சானா) நிறுவனங்களில் பயிற்சி மாணவர்களாகப் பணியாற்றும் பட்டதாரிகளுக்கு அரசு 600லிருந்து 1,000 ரிங்கிட் வரை நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.
இத்திட்டமானது, கோவிட்-19 நோய்த் தாக்கத்தின் எதிரொலியாக பல நிறுவனங்கள் மூடும் நிலையிலிருப் பதைத் தடுக்கவே, அரசு அத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
புள்ளிவிவரத்தின்படி, ஏப்ரல் மாதம் வரை, குறைந்தது 800,000 பேர் வேலை இழந்துள்ளதாகக் கணிக்கப்படுகிறது.
பட்டதாரிகளைப் பயிற்சி அதிகாரிகளாக வேலைக்கு எடுத்துக் கொள்ளும் நிறுவனங்கள், அவர்களுக்குத் தொழிலாளர் சேம நிதியையும், தொழிலாளர் பாதுகாப்பு நிறுவன(சொக்சோ) கட்டணத்தையும் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள், அவர்களுக்குப் போதுமான தகுதியும் திறனும் இருப்பதாக உணர்ந்தால், அவர்களுக்குத் தொடர்ந்து வேலையை அளிக்கும். எனினும், சம்பந்தப்பட்ட பயிற்சி மாணவரின் திறனில் திருப்தி இல்லையென்றால், அவர்களை வேலையிலிருந்து நீக்கவும் முடியும்.
நிறுவனங்கள் புதிய பட்டதாரிகளைக் கட்டயமாக வேலையில் அமர்த்த வேண்டுமென்ற அரசின் நிர்ப்பந்தம் நியாயமில்லை என்றும் அதனை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்றும் ஷம்சுடின் கேட்டுக் கொண்டார்.
பயிற்சியாளர்களை நிரந்தரத் தொழிலாளர்களாகக் கருத வேண்டுமென்ற நிலை இருந்தால், நிறுவனங்கள் அத்திட்டத்திலிருந்து பின் வாங்கும் என்று அவர் தெரிவித்தார்.
புதிய பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தாமலேயே நிறுவனங்கள் இருப்பவர்களை வைத்துக் கொண்டு, தொழிலை நடத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × four =