பெங்களூரு அணி வெற்றி

வடகிழக்கு அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் லீக் போட்டியில் பெங்களூரு அணி 4–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் 8வது சீசன் நடக்கிறது. நேற்று கோவா, படோர்டாவில் நடந்த லீக் போட்டியில் சுனில் செத்ரியின் பெங்களூரு அணி, வடகிழக்கு யுனைடெட் அணியை சந்தித்தது. வான்மழை ஒருபக்கம் பொழிந்து கொண்டிருக்க, இரு அணி வீரர்கள் தங்கள் பங்கிற்கு கோல் மழை பொழிந்தனர். போட்டியின் 14வது நிமிடம் உடாண்டா சிங் கைகொடுக்க கிளைட்டன் சில்வா, பெங்களூரு அணிக்கு முதல் கோல் அடித்தார். அடுத்த 3வது நிமிடத்தில் வடகிழக்கு அணிக்கு சுகைர் உதவியில் டெஷ்ஹார்ன் ஒரு கோல் அடித்தார். 23வது நிமிடத்தில் வடகிழக்கு அணி கோல் கீப்பர் சுபாஷிஸ் தடுத்த பந்தை, மஷூர் ஷெரிப் வெளியே அடித்து தள்ள முயன்றார். துரதிருஷ்டவசமாக பந்து வலைக்குள் செல்ல, ‘சேம் சைடு’ கோல் ஆனது. 25 வது நிமிடம் வடகிழக்கு வீரர் மதாயஸ் ஒரு கோல் அடித்தார். 12 நிமிட இடைவெளியில் இரு அணிகளும் அடுத்தடுத்து 4 கோல் அடித்தன. போட்டியின் 42வது நிமிடத்தில் ஜெயேஷ் ரானே தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்த முதல் பாதியில் பெங்களூரு அணி 3–2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் பெங்களூரு வீரர் பிரின்ஸ் இபாரா ஒரு கோல் அடித்தார். முடிவில் பெங்களூரு அணி 4–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 2 =