புலந்த்சாகர் வன்முறை -சிறையில் இருந்து வெளிவந்த குற்றவாளிகளுக்கு உற்சாக வரவேற்பு

லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் அருகில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பசுக்கள் இறந்து கிடந்ததால், அங்கு பசுவதைக் கூடம் செயல்படுவதாக கூறி இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். 

அப்போது போலீசார் மீது போராட்டக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். போலீசார் தடியடி நடத்தியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இந்த வன்முறையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் சிங் கொல்லப்பட்டார். அவர் மீது போராட்டக் கும்பல் கற்களை வீசி தாக்கியதும், துப்பாக்கியால் சுட்டதும் தெரியவந்தது. 

இச்சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை நடத்த உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். வன்முறை தொடர்பாக போலீசார் பாரதீய ஜனதா யுவ மோச்சாவைச் சேர்ந்த சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இவர்களுக்கு அலகாபாத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கடந்த சனிக்கிழமை இரவு வெளியே வந்தனர். வெளியே வந்த அவர்களுக்கு அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பின்னர், ‘பாரத் மாதாகீ ஜே’ மற்றும்  ‘வந்தே மாதரம்’ என முழக்கமிட்டு, அங்கிருந்த இளைஞர்கள் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

ரஜினி சிங்

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இச்சம்பவம் குறித்து மறைந்த இன்ஸ்பெக்டர் சுபோஷ் சிங்கின் மனைவி ரஜினி சிங் கூறுகையில், ‘எந்த அடிப்படையில் இவர்களுக்கு விரைவாக ஜாமின் வழங்கப்பட்டிருக்கிறது. 

என் கணவரைக் கொன்றவர்களுக்கு இவ்வளவு விரைவாக ஜாமின் கிடைத்திருக்கக் கூடாது. இதனை ரத்து செய்ய வேண்டும். சமூகத்தில் இவர்களை போன்றவர்கள் வாழவேக் கூடாது. இப்போது இவர்கள் வெளியே வந்திருப்பதால் எனக்கும், என் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + thirteen =