புத்திசாலித்தனம் இல்லாத புறக்கணிப்பு – இராகவன் கருப்பையா

0

வரலாற்றுப் பூர்வமாக கடந்த ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தற்போது பல கோணங்களிலும் திசைமாறி தடுமாறிக்கொண்டிருக்கிறது என்பதை நாட்டு மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.

தேர்தல் அறிக்கையை உதாசினப்படுத்தியுள்ளது ஒருபுறமிருக்க, கடந்த சில மாதங்களாக நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு முறையான தீர்வு காணப்படாமல் இருப்பது மக்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தையே அளிக்கிறது.

செக்ஸ் வீடியோ விவகாரம் தொடங்கி, ஆரம்பப் பள்ளிகளில் ஜாவி பாடத்திணிப்பு, பிறகு, ஜாக்கிர் நாயக் பிரச்சனை, ஆகக் கடைசியாக, முஸ்லிம் அல்லாதாருக்கு எதிரான புறக்கணிப்பு என எல்லா விசயங்களுமே தற்போது பக்காத்தான் அரசின் நிலைத்தன்மையை மிரட்டிக்கொண்டிருக்கிறது.

முஸ்லிம் அல்லாதார் தயாரிக்கும் பொருட்களையும் அவர்களுடைய சேவைகளையும் புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் தற்போது அமெசோன் காட்டுத் தீ போல் நாடு முழுவதும் பரவி வருகிறது.

கடந்த மாதப் பிற்பகுதியில், மலேசிய இஸ்லாமிய பயனீட்டாளர் சங்கம் இப்பிரச்சாரத்தை எதேச்சையாக தொடக்கியது, என்ற போதிலும் இதற்கு பின்னணியில் அம்னோவும் பாஸ் கட்சியும் எண்ணெய்யை மேலும் ஊற்றி, தீ கொழுந்துவிட்டு எரிய வகை செய்கின்றன என்ற உண்மையையும் மக்கள் நன்றாகவே அறிவர். ‘கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவையா?’

ஆக, நாட்டில் நிலவும் பல பிரச்னைகளுக்கு அரசியல்வாதிகளே மூலக்காரணமாக இருக்கின்றனர் என்பது வெள்ளிடை மலை.

எப்படியாவது ஆட்சி பீடத்தில் அமர்ந்துவிடவேண்டும் எனப் பாஸ் கட்சிக்குப் பகல் கனவு. அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்றினால், பல பில்லியன் ரிங்கிட் தொடர்பான நூற்றுக் கணக்கான வழக்குகளில் இருந்து ஜாலியாக ‘எஸ்கேப்‘ ஆகி விடலாம் என அம்னோ தலைவர்களுக்கு ஓர் அல்ப ஆசை.

இதற்கிடையில், ‘பூவோடு சேர்ந்தால் நாறும் மணக்கும்’ என்ற ஏக்கத்தில் ம.இ.கா.-வும் ம.சீ.ச.-வும் காத்துக் கிடக்கின்றன. ‘அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும்’ என்ற எண்ணத்தில், குறுக்கு வழிச்சாலைகளை அமைத்துக் கொண்டிருக்கின்றன இந்த எதிர்க்கட்சிகள்.

நாடு எக்கேடு கெட்டால் என்ன, மக்கள் எப்படி அவதிப்பட்டால் நமக்கென்ன என்ற மோசமான சுயநலச் சிந்தனையில், பிரச்னைகளுக்கு எதிர்க்கட்சிகள் தூபம் இடுவது மிகவும் வேதனையான விசயம்.

பல இனங்களைக் கொண்ட இந்நாட்டில், அர்த்தமற்ற ஒரு பிரச்சாரத்தை கண்மூடித்தனமாகப் பரப்பினால், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை மக்கள் நன்றாக உணர்வது அவசியமாகும். தன் வினை தன்னைச் சுடும் என்பதனை மறந்துவிடக்கூடாது.

இந்நாட்டில் முஸ்லிம்கள் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகளில் 60 விழுக்காட்டுக்கு மேலானவை முஸ்லிம் அல்லாதாரால் தயாரிக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு, நமது அன்றாடத் தேவையான அரிசி. நமது பயனீட்டுக்குத் தேவைப்படும் அரிசியில் 85 விழுக்காட்டுக்கும் மேல் இந்தியா மற்றும் தாய்லாந்திலிருந்து நாம் இறக்குமதி செய்கிறோம். ஆக, அதனைப் புறக்கணித்தால் 15 விழுக்காட்டுக்கும் குறைவான அரிசி உற்பத்தியை வைத்துக்கொண்டு, பழையபடி மரவள்ளிக் கிழங்கைதான் நாம் சாப்பிட வேண்டும்.

வெங்காயம், பூண்டு, மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றை எல்லாம் பெரிய அளவில் இறக்குமதி செய்வது சீனர்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள்தான். இவை இல்லையென்றால் ‘நாசி லெமாக்‘ கூட தயாரிக்க முடியாது.

ஓர் இந்தியருக்கு சொந்தமான ஏர் ஏசியா விமான சேவையைப் புறக்கணித்தால் இலட்சக் கணக்கான முஸ்லிம்களின் பயணங்கள் தடைபடுமே – இது சாத்தியமா?

நாம் குடியிருக்கும் வீடுகளில் பெரும்பாலானவைச் சீன மேம்பாட்டு நிறுவனங்களினால் கட்டப்பட்டவை. அப்படியென்றால் வீட்டை உடனே காலி செய்துவிட்டு எங்கே செல்வது?

தலைநகரில் உள்ள டைம்ஸ்குவேர், சுங்கை வாங்கி பிளாஸா, ஐ.ஒ.ஐ. மோல், சோகோ, சன்வே மோல், புக்கிட் பிந்தாங் பிளாஸா மற்றும் பெவிலியன் போன்ற பிரசித்திப் பெற்ற ஆயிரக் கணக்கான இடங்களைப் புறக்கணித்து வெளியே நிற்க முடியுமா?

அது மட்டுமின்றி, ஜயண்ட், டெஸ்கோ, ஏயோன், ஸ்பீட்மாட், கே.கே. மற்றும் எக்கொன்சேஃப் முதலியப் பேரங்காடி நிலையங்களில் பணிபுரியும் மலாய்க்காரர்களின் குடும்பங்களின் நிலை என்னாவது? கேளிக் கூத்தாக அல்லவா இருக்கிறது!

என் மனைவி ஓர் சீனப் பெண், அவளை நான் என்ன செய்வது என ஒரு மலாய்க்காரர் தனது முகநூலில் தமாசாகக் கேட்டிருந்தார்.

இந்நிலையில், ‘வேலியேப் பயிரை மேய்கிறது’ என்பதனை வெளிப்படையாக காட்டிக்கொள்ளாத நிதியமைச்சர் லிம் குவான் எங், அம்னோவும் பாஸ் கட்சியும் இந்தப் பிரச்சாரத்தைக் கண்டிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பதிலுரைத்த பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம், முஸ்லிம் பயனீட்டாளர்களின் உரிமைகளை லிம் மதிக்கவில்லை என்றும் இன உணர்வோடு அவர் விளையாடுகிறார் என்றும் குற்றஞ்சாட்டியது முற்றிலும் கோமாளித்தனமாகவே உள்ளது.

பாமர மக்களின் அறியாமையைத் தங்களுடைய அரசியல் சுயநலத்துக்காக எவ்வகையில் இவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதையே இது புலப்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =