புதுவையில் அதிவேகமாக பஸ் ஓட்டினால் நாளை முதல் அபராதம் – போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி:

புதுவையில் சமீப காலமாக சாலை விபத்துக்கள் அதிகமாக நடக்கின்றன. குறிப்பாக புதுவை- கடலூர் சாலையில் தொடர் விபத்துக்கள் நடக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கடலூர் சாலை முதலியார்பேட்டையில் பஸ் மோதி பள்ளி மாணவி பலியானார்.

ரோடியர் மில் முன்பும் பஸ் மோதி சிலருக்கு காயம் ஏற்பட்டது. 4 மோட்டார் சைக்கிள், ஒரு கார் சேதம் அடைந்தது.

இதனால் சாலை விபத்தை தடுப்பதற்கு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி இன்று காலை 11 மணிக்கு கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பஸ் டிரைவர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் 40-க்கும் மேற்பட்ட பஸ் டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜசேகர், முருகவேல், சுப்பிரமணி, டெல்லி போக்குவரத்து பயிற்சி பள்ளி நிறுவன தலைவர் பங்கஜ் மேக்சா, இன்ஸ்பெக்டர்கள் ஜெயராமன், முருகையன், வரதராஜன், தனசேகர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

இதில் போக்குவரத்து துறை ஆர்.டி.ஓ. ஏழுமலை கலந்து கொண்டார்.

கூட்டத்தில் சாலை விதிமுறைகளை பின்பற்றி வாகனம் ஓட்ட வேண்டும்.பெர்மிட் இல்லாமல் ஓடும் பஸ்களுக்கு உரிமம் ரத்தாகும். லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500, டிரைவர் யூனிபார்ம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 100-ம், பஸ் நிறுத்தம் இல்லாமல் வேறு இடத்தில் பஸ்சை நிறுத்தினால் ரூ.500, அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டினால் ரூ.400, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

இந்த அபராதம் வசூல் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × one =