புகைப் பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்கள்; எங்கே போகிறது எம் சமுதாயம்..!

ரவாங், ஆக. 10 – ‘பள்ளிக்குச் செல்வோம், பாடம் படிப்போம்’ என்ற தாரக மந்திரம் இப்போது மலையேறி விட்டது. அதற்குப் பதிலாக நம் இன மாணவர்களில் ஒரு சிலர், ‘பள்ளிக்குச் செல்வோம்; புகைத்து வருவோம்’ என்ற அழிவுக்கு இட்டுச் செல்லும் பழக்க வழக்கத்துக்கு அடிமையாகிறார்கள்.
பள்ளி ஆசிரியர்கள் எல்லா நேரத்திலும் எல்லா மாணவர்களையும் கவனித்துக் கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பழக்க வழக்கங்களைக் கண்காணிக்க வேண்டும். புகைக்கிற பிள்ளைகள் அருகில் வந்தாலே, அந்த வாடை அவர்களைக் காட்டிக் கொடுக்கும். அப்படி அவர்கள் சிகரெட் புகைக்கிறார்கள் என்றால், அவர்களைக் கண்டிக்க வேண்டும். தேவைக்கு மிஞ்சி கைசெலவுக்கு அவர்களிடத்தில் பணம் கொடுக்கக் கூடாது.
சிகரெட் வாங்குவதற்கு அவர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது? என்பது முதல் கேள்வி. 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு சிகரெட் விற்க தடை விதிக்கப்பட்ட நிலையிலும், சில வியாபாரிகள் லாபத்தைக் கருத்தில் கொண்டு, சட்டத்தைப் புறக்கணித்து அவர்களுக்கு சிகரெட் விற்கிறார்கள். எனவே, காவல் துறையினர் மாறு வேடத்தில் இடை நிலைப் பள்ளிகளுக்கு அருகில் உள்ள உணவகங்களில் அமர்ந்து இவர்களைக் கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கு சிகரெட் விற்கும் கடைக்காரர்களின் உரிமங்களைப் பறிப்பதோடு, கடுமையான அபராதத்தையும் விதிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here