
குடும்பப் பிரச்சினை என்று காரணம் கூறி குடும்ப வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் புகாரை ஒருசில போலீசார் ஏற்க மறுப்பதாக மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சிடம் தெரியப்படுத்தப்பட்டது என்று அமைச்சர், டத்தோஸ்ரீ ரீனா முகமட் ஹருண் தெரிவித்தார்.
இச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றுத் தங்களின் மருத்துவ அறிக்கையைப் பெற்றுக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மருத்துவ அறிக்கையைப் பயன்படுத்துவதன் மூலம் இவர்கள் கொடுக்கும் புகார்களை போலீசாரால் மறுக்க முடியாது.
ஒருவேளை கொடுமைப் படுத்தப்பட்டால் கணவன்-மனைவி இருவரையும் பிரித்து வைக்க அவசரப் பாதுகாப்பு உத்தரவைச் சமூகநல இலாகா வெளியிடும்.
அதே சமயம் குடும்ப வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகாரை போலீஸ் பெற மறுப்பது தொடர்பில் உள்துறை அமைச்சுடனானக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும்.
போலீஸ் நிலையத்துடனானப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு இவ்விவகாரம் தொடர்பில் உள்துறை அமைச்சுடன் மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சும் இணைந்து செயல்படும்.
இம்மாதிரியானப் பிரச்சனைகளுக்கானப் பாலியல், கொடுமைச் சம்பவங்கள், சிறார் விசாரணைப் பிரிவு உள்துறை அமைச்சின் கீழ் உள்ளது.
இவ்விரு அமைச்சுகளுக் குமானக் கலந்துரையாடல் எப்போதும் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அடுத்த கலந்துரையாடலில் இதுபற்றியக் கருத்துகள் சேர்க்கப்படும் என்று பெண்கள் சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் தித்திவங்சா நாடாளுமன்ற உறுப்பினருமான ரீனா முகமட் ஹருண் குறிப்பிட்டார்.