பிறருக்கு உதவ திருமண சேமிப்பை பயன்படுத்திய தம்பதியர்

கோவிட்-19 தாக்கத்தால் பல தம்பதியர் தங்களுடைய திருமண வைபவத்தை ஒத்திவைத்துள்ளனர் அல்லது விமரிசையாகக் கொண் டாடுவதைத் தவிர்த்துள்ளனர்.
அது போல் ஒரு மருந்தகரான சிவரத்தினம் (வயது 32) – பொறியியலாளரான திலகேஸ்வரி (வயது 29) பினாங்கு, பார்லிமில் உள்ள தங்களுடைய வீட்டில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த வைபவத்தில் சுமார் 20 குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தங்களுடைய திருமணச் செலவுக்காகச் சேமித்த பணத்தை ஒரு சிறப்பான காரியத்திற்கு அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
எம்.சக்திவேல் என்ற மாணவனுக்கு ஒரு மடிக் கணினி மற்றும் பினாங்கு மாநகர் மன்ற முன்னாள் ஊழியரான எஸ்.கந்தையாவிற்கு ஆர்த்தோடிக் வாக்கர் ஒன்றையும் வாங்கித் தந்துள்ளனர்.
திருமணச் செலவுக்காகச் சேமித்த பணத்தில் சமூகத்திற்கு ஏதாவது செய்யும்படி தனது சகோதரர் ஆலோசனை கூறியதாக சிவரத்தினம் தெரிவித்தார்.
எங்களின் ஆலயத் திருமணம் மற்றும் திருமண விருந்து நடைபெற்றிருந்தால் நாங்கள் சுமார் 80,000 வெள்ளி செலவழித்திருக்க வேண்டும் என்றார் அவர்.
எங்களின் திருமணம் மே 31ஆம் தேதி நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது. நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன்பாக இந்தியாவில் திருமணத்திற்கான பொருட்கள் வாங்கியது உட்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன.
கோவிட்-19 தாக்கம் குறித்து தங்களின் குடும்பத்தினர் கவலையுற்றதாக திலகேஸ்வரி கூறினார்.
விரிவான பேச்சு வார்த்தைக்குப் பிறகு வீட்டிலேயே சிறிய அளவில் திருமணத்தை நடத்த முடிவு செய்தோம்.
திருமணத்திற்கு வருகை புரிந்தவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கிருமிநாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்யப்பட்டன.
அனைத்து வருகையாளர்களது பெயர்களும் பதிவு செய்யப்பட்டமை உட்பட அனைத்து நிர்ணயிக்கப்பட்ட நெறிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டன.
குறிப்பிட்ட சிலரே கலந்து கொள்ள முடியும் என்பதால் குடும்பத்தில் மூத்தவர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இவர்களின் ஆசிர்வாதம் மிக முக்கியம் என அவர் சொன்னார்.
சமூகநலப் பிரிவு மற்றும் புக்கிட் பெண்டேரா மலேசிய இந்து சங்கத்தைச் சேர்ந்த இருவர் பிரதிநிதியாகக் கலந்து கொண்டனர்.
2ஆண்டுகளுக்கு முன்பு சிவரத்தினத்தின் குடும்பத்தினர் தமக்கு ஆர்த்தோடிக் வாக்கர் வாங்கித் தந்ததாக நீரிழிவு நோயால் அவதியுற்று வரும் கந்தையா (வயது 62) கூறினார்.
இவர்கள் எனக்குச் செய்த உதவியை வர்ணிக்க வார்த்தையே இல்லை என கண்ணீருடன் அவர் கூறினார்.
இந்த தம்பதியரும் அவரது குடும்பத்தினரும் நீடூழி வாழ வேண்டும் என அவர் வாழ்த்தினார்.
கந்தையாவிற்கு பேறுகுறைந்த 31 வயதான இரட்டைப் பெண்கள் உள்ளனர். இந்த தம்பதியர் எனக்குச் செய்த உதவியை நான் மிகவும் பாராட்டுகிறேன் என மடிக்கணினி பெற்ற முதலாம் ஆண்டு பொறியியல் மாணவரான சக்திவேல் கூறினார்.
எதிர்காலத்தில் இவர்களின் வழியை நான் பின்பற்றுவேன் என்றார் அவர்.
பல இளைய தம்பதிகள் தங்களுடைய திருமணத்திற் காக அதிகமான பணத்தைச் செலவு செய்து கடனாளியாகி விடுகின்றனர்.
ஆனால் இந்த தம்பதியர் செய்த நற்காரியத்தைத் தாம் பாராட்டுவதாக புக்கிட் பெண்டேரா மலேசிய இந்து சங்கத்தைச் சேர்ந்த விவேகநாயகம் ஏ.தர்மன் பதிவிட்டுள்ளார்.
புதிதாக திருமணம் செய்து கொள்பவர்கள் கடன் எதுவுமின்றி தங்களுடைய திருமண வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்றார் அவர்.
திருமணத்தில் இருந்து சேமிக்கப்படும் பணத்தைக் கொண்டு ஒரு சொத்து வாங்குவதற்கு முன்பணமாகப் பயன்படுத்தலாம்.
இந்தக் காலத்தில் திருமண வைபவங்களுக்கு சுமார் ஒரு லட்சம் வெள்ளி செலவாகிறது. இது வெறும் பண விரயமே.
இளைய தலைமுறையினர் தங்களுடைய திருமணங்களை சிக்கனமான முறையில் நடத்தலாம். இதில் இருந்து சேமிக்கப்படும் பணத்தை சமூகநல காரியங்களுக்கு உதவலாம் என அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 4 =