பிரமிக்க வைக்கும் பெரிய கோவில்

0

தமிழகத்தை ஆண்ட மிக சிறந்த மன்னர்களில் ஒருவர் ராஜராஜ சோழன். இம்மன்னனால் கட்டப்பட்ட மிகவும் வியக்கத் தக்க வரலாற்று சின்னம் தான் தஞ்சைப் பெருவுடையார் கோயில்.

தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதின் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் ஆலயம். இது தஞ்சை பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்று ஆகும்.

கி.பி. 850 ல் விஜயாலய சோழன் முத்தரைய மன்னன் ஒருவனை வென்று, தஞ்சையை கைப்பற்றி, சோழ நாட்டின் தலைநகரமாக ஆக்கினான். ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு பின் வந்த இராஜராஜ சோழன் சோழ நாட்டை விரிவுப்படுத்தி சிறந்த முறையிலே ஆட்சி செய்து வந்தான்.

இம்மன்னனால் பெரிய கோவில் கி.பி. 1010-ம் ஆண்டு கட்டப்பட்டது. இராஜராஜசோழன் சிவபெருமான் மீது கொண்டிருந்த பக்தியால் அவருக்கு ஆத்மார்த்தமாக ஒரு கோயிலை கட்ட விரும்பினான். அந்த கோயில் பிரமாண்டமாக இதுவரை யாரும் கட்டாத அளவுக்கு கட்டவேண்டும் என நினைத்தான். அப்படி கட்டப்பட்ட கோயில் தான் இந்த உலகம் வியக்கும் உன்னதமான கோயில்.

சோழர் கால கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு மாபெரும் பொக்கிஷம் தான் தஞ்சை பெரிய கோவில். இக்கோயிலைக் கட்ட வெளி மாவட்ட, வெளி மாநிலங்களிலிருந்துதான் கற்கள் அனைத்துமே கொண்டுவரப்பட்டு இருக்கிறது.

கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித் தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. கோபுரம் மட்டுமே தரைத் தளத்திலிருந்து 216 அடி உயரமுடையது.

அதன் உச்சியில் உள்ள வட்ட வடிவ பிரம்ம மந்திரக்கல் 80 டன் எடையுள்ள ஒரே கல். இங்கிருந்து 7 கி.மீ. தூரத்திற்கு கும்பகோணம் அருகிலுள்ள சாரப்பள்ளம் என்ற ஊர் வரை மணல் கொட்டி அந்த ஒரே ஒரு கல்லை மட்டும் மேலே கொண்டு சென்றனராம்.

உலகின் பல நாடுகளின் கட்டிடக் கலை வல்லுனர்கள் வந்து பார்த்து வியந்து போன கோயில் இது. இங்கு உள்ள நந்தி 20 டன் எடையுள்ள ஒரே கல்லால் ஆனது. இது 2 மீட்டர் உயரமும், 2 மீட்டர் நீளமும் 2.5 மீட்டர் அகலமும் உடையது. நவக்கிரகங்கள் 9 லிங்க வடிவம் உடையது. அனுபவித்த ரசிக்கத்தக்க கலைக் கோவில்.

ராஜ ராஜ சோழன் இக்கோவில் முழுவதையும் கற்களால் கொண்டு கட்டியுள்ளான். ஏறக்குறைய 130000 டன் கற்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இக்கோவிலை ராஜராஜ சோழனின் ஆணைப்படி கட்டி கொடுத்த சிற்பி குஞ்சாரமல்லன் ராஜராஜ பெருஞ்சத்தன். இக்கோவிலின் கட்டிட அமைப்பு வாஸ்து சாஸ்திர முறைப்படி அமைக்கப் பெற்றிருக்கிறது. இக்கோவில் சிவன் மற்றும் நந்தி தவிர பல சிறிய சந்நிதிகளை கொண்டுள்ளது.

சிவனை தவிர விஷ்ணு மற்றும் துர்கா சிலைகள் உள்ளது. இதன் தெற்கு சுவரில் விநாயகர், விஷ்ணு, பூமாதேவி, ஸ்ரீதேவி, இரண்டு துவார பாலகர்கள், வீரபத்ரன், தக்ஷினாமூர்த்தி மற்றும் நடராஜர் ஆகியோர் உள்ளனர்.

இதன் மேற்கு சுவரில் ஹரிஹரன், அர்த்தநாரீஸ்வரர், இரண்டு துவாரபாலகர்கள் மற்றும் இரண்டு சந்திரசேகரர்கள் உள்ளனர். இக்கோவிலின் வடக்கு சுவரில் சிவன் சூலத்துடனும், சரஸ்வதி, மகிஷாசுர மர்த்தினி மற்றும் பைரவர் ஆகியோர் உள்ளனர். இத்தகைய சிறப்புடைய தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் நாளை (5-ந்தேதி) நடைபெற உள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 1 =