பிரதமர் வேட்பாளர்; பரிசீலிக்க சற்று கால அவகாசம் தேவை!

பக்காத்தான் ஹராப்பான் பிளஸின் பிரதமர் வேட்பாளராக தம்மை துன் மகாதீர் பரிந்துரைத்தது குறித்து ஒரு முடிவெடுக்க தமக்கு சற்று கால அவகாசம் தேவைப்படுவதாக சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் கூறினார்.
தமது வாரிசான் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகே இது குறித்து தாம் அறிவிப்புச் செய்யவிருப்பதாக வாரிசான் கட்சியின் தலைவருமான அவர் சொன்னார். முன்னாள் பிரதமர் துன் மகாதீரிடம் இருந்து வந்துள்ள இந்த பரிந்துரைக்காக தாம் நன்றி கூறுவதாக செம்பூர்ணா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
இந்த பரிந்துரை குறித்து வாரிசான் கட்சியின் துணைத் தலைவர் டேரல் லெய்கிங் மற்றும் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டாக்டர் யூசோப் யாக்கோப்புடன் விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் சொன்னார்.
“இது எனக்கு ஒரு பெரிய சவால். இந்த பரிந்துரையை நான் கடுமையாகக் கருதுகிறேன். இது குறித்து இறுதி முடிவு செய்ய எனக்கு கால அவகாசம் தேவை” என ஷாபி குறிப்பிட்டார்.
கடந்த ஜூன் 25ஆம் தேதி ஜசெக, அமானா மற்றும் வாரிசான் தலைவர்களுடன் சந்திப்பு நடத்திய பிறகு பிரதமர் வேட்பாளராக ஷாபியின் பெயரை லங்காவி நாடாளுமன்ற உறுப்பினருமான மகாதீர் அறிவித்தார். இருப்பினும் இந்த பரிந்துரை பற்றி கட்சியின் தலைமைத்துவம் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவத்துடன் கலந்தாலோசிக்கப் போவதாக ஜசெக மற்றும் அமானா தலைவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே இந்த புதிய பரிந்துரை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் தயார் என பிகேஆர் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + six =