பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வருகை: கடலில் மீன்பிடிக்க தடை

0

மாமல்லபுரம்:

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் வருகிற 11-ந் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது தலைவர்கள் இருவரும் புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளான அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில், பட்டர்பால், ஐந்துரதம் பகுதிகளை பார்வையிடுகிறார்கள்.

இதையடுத்து இந்த பகுதிகளை தூய்மைபடுத்தும் பணிகள் தீவிரம் அடைந்து வருகிறது. சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு உள்ளது. மேலும் மாமல்லபுரம் பகுதியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட தள்ளுவண்டி, மற்றும் பெட்டிக்கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு நகருக்கு வெளியே கொண்டு போடப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்

கடைகளை அகற்றிய பகுதிகளில் பூஞ்செடிகள் வைக்கப்பட்டு வருவதால் மாமல்லபுரம் நகரமே பளிச்சென காட்சி அளிக்கிறது.

அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் கடற்கரை கோயில் எதிரே புதிதாக கட்டப்பட்டுள்ள வரலாற்று காட்சிக் கூடத்துடன் கூடிய நுழைவு சீட்டு கட்டிடத்தை தலைவர்கள் இருவரும் சேர்ந்து திறந்து வைக்க உள்ளனர்.

இதையடுத்து அதன் அருகே இருநாட்டு நட்புறவையும் உணர்த்தும் வகையில் இரண்டு யானைகளுடன் கூடிய புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் அதிக நேரம் சந்தித்து பேசும் இடமாகவும் கலை நிகழ்ச்சியை பார்த்து ரசிக்கும் இடமாகவும் கடற்கரை கோவில் உள்ளது.

இதைதொடர்ந்து அதன் அருகே கடற்கரை செல்லும் வழியில் இருந்த 120 கடைகளிலும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தங்குவதற்காக அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதற்கு வசதியாக பேரூராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கடைகளை காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இன்றுடன் கால அவகாசம் முடிந்ததால் கடைகளை வியாபாரிகள் காலி செய்து வருகிறார்கள்.

பாதுகாப்பு முன்னேற்பாடாக மாமல்லபுரம், கல்பாக்கம், தேவநேரி, கொக்கிலமேடு, சூலேரிக்காடு, நெம்மேலி, பட்டிபுலம் பகுதி மீனவர்கள் வருகிற 6-ந்தேதியில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் வருகிற 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மீனவர்கள் அனைவரும் கடலுக்கு செல்லக்கூடாது எனவும், கடலோர பாதுகாப்பு படையினர் தடை விதித்துள்ளனர்.

இந்தநிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வெளியுறவு செயலர் விஜய் கே‌ஷவ் கோகலே, மத்திய உயர் அதிகாரிகள் மற்றும் தலைமை செயலர் சண்முகம் ஆகியோர் நேற்று மாமல்லபுரம் வந்திருந்தனர்.

பணிகளை வேகப்படுத்தி மாமல்லபுரத்தை 10-ந் தேதிக்குள் பசுமை நகரமாகவும் மாற்றி குப்பைகள் இல்லாத தூய்மை நகரமாகவும், புதுப்பொலிவுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 12 =