பின்தங்கிய மாணவர்களையும் அரவணைக்க வேண்டும்

சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவை பொறுத்தவரையில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தரத்திலான கல்வி வாய்ப்புகள் கிடைக்கப் பெற வேண்டும். சொல்லப் போனால் இந்த நீரோட்டத்தில் யாரும் விடுபட்டு போய்விடக்கூடாது என்பதில் தாங்கள் தன்மூப்பாக செயல்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநில கல்வி இயக்குநர் டாக்டர் மஹானோம் பிந்தி மாட் சாம் தெரிவித்தார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை செர்டாங் மேப்ஸ் மாநாட்டு மண்டபத்தில் ஓம்ஸ் அறவாரியத்தின் ஏற்பாட்டிலும் சிலாங்கூர் மாநில கல்வி இலாகா மற்றும் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டிலும் நடைபெற்ற யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கான தங்கப் பதக்கம் அணிவிப்பு நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
ஆண்டுதோறும் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் மாணவர் தேர்ச்சி விகிதம் எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. கல்வியோடு சேர்த்து இன்னும் பல அபார திறமைகளும் அவர்களிடம் காணப்படுகின்றன. அது மட்டுமின்றி புறப்பாட நடவடிக்கைகளிலும், விளையாட்டுத் துறையிலும் அவர்கள் திறன் பெற்று விளங்கி வருவதாக அவர் புகழாரம் சூட்டினார்.
இத்தகைய மாணவர்களை ஊக்குவித்து அவர்களின் இடைநிலைப்பள்ளி வாழ்க்கைக்கு அடித்தளம் போடும் வகையில் ஓம்ஸ் அறவாரியம் ஏற்பாடு செய்துள்ள இந்த தங்கப் பதக்க அணிவிப்பு விழாவில் நான் கலந்து கொண்டதில் பெருமை கொள்கிறேன். அவரின் சேவை தொடர்ந்து சிலாங்கூர் மாநிலத்திற்கு தேவை என்றும் அவர் மேலும் கூறினார்.
அதே வேளையில், சிறந்த மாணவர்களை ஊக்குவித்து அவர்களை அங்கீகரிப்பது போன்று பின்தங்கிய மாணவர்களும் அவர்களின் திறனுக்கு ஏற்றவாறு சிறப்பிக்கப்பட வேண்டும். இல்லையெனில் அந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.
அதன் பொருட்டு சிலாங்கூர் மாநில கல்வி இலாகா ஆண்டுதோறும் பின்தங்கிய மாணவர்களையும் அரவணைத்து அவர்களின் தன்மைக்கேற்றவாறு துறைகளை ஏற்படுத்திக் கொடுத்து அந்த மாணவர்களையும் முன்னேற்றி வாழ்வில் வெற்றி நடை போடுவதற்கான திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. ஓம்ஸ் அறவாரியம் போன்ற நல்நெஞ்சம் படைத்த சமூக சேவை நிறுவனங்கள் இருந்தால் இன்னும் அதிகமான முயற்சிகளை நாங்கள் வகுப்போம் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். இன்றைய இந்த தங்கப் பதக்க விழாவிற்கு கல்வி துணையமைச்சர் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மாணவர்களின் வெற்றிக்கு பெரும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் அவர் தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் டாக்டர் மஹானோம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 3 =