தற்போதுள்ள நிபந்தனைக்குட்பட்ட எம்சிஓ காலத்தில் பினாங்கு நாசி கண்டார் உணவகங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்திருக்கும் வேளையில், சில உணவகங்கள் கிள்ளான் பள்ளத்தாக்கு வரை உணவை விநியோகச் சேவையைத் தொடக்கியுள்ளன.
பினாங்கில் செயல்படும் நாசி கண்டார் உணவகங்களில் வார இறுதி நாள்களில் கூட்டம் அலை மோதும். ஆனால், கோவிட்-19 நோய்த் தொற்றின் காரணமாக உள்ளூர்க்காரர்களோடு, கோலாலம்பூரிலிருந்து இங்கு உணவுக்காக வருவோரின் எண்ணிக்கை பெருவாரியாகக் குறைந்துள்ளதாகப் பெரும்பாலான உணவக உரிமையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
ஆயர் ஈத்தாம், கம்போங் மலாயுவில் உள்ள நாசி கண்டார் உணவகம் நாளொன்றுக்கு 700 பொட்டலங்களைக் கொண்ட நாசி கண்டார் உணவை கிள்ளான் பள்ளத்தாக்கு வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்து வருவதாக அதன் உரிமையாளர் ஸைனாப் பிபி முகமட் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் நாளொன்றுக்கான 5,000 ரிங்கிட் வருமானம் சிஎம்சிஓ காலத்தில் ரிம. 2,000லிருந்து 3000ஆகக் குறைந்துள்ளதாகவும், கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு விநியோகம் செய்வதன் மூலம், செலவுகளை ஈடுகட்ட முடிவதாக அவர் குறிப்பிட்டார்.
ஜாலான் கேம்பலில் உள்ள ஹமிடியா உணவக உரிமையாளர் அமாட் சீனி பாக்கிர் அப்துல் சுக்கோர், 1907ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமது உணவகத்தின் வருமானம் 10,000 ரிங்கிட்டிலிருந்து நாளொன்றுக்கு 60 விழுக்காடு வரை குறைந்துள்ளதால் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் தவித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர், 2 கடை வீடுகளில் செயல்பட்டு வந்த வியாபாரம் தற்போது ஒரு கடை வீட்டில் மட்டுமே நடந்து வருவதாகவும், பினாங்கில் உள்ள வாடிக்கையாளர்கள் கூட வருமானம் குறைந்து உணவகத்துக்கு வருவது குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜெலுத்தோங்கில் உள்ள நாசி கண்டார் அலி அமீர் உணவக உரிமையாளர் முகமட் அலி அமீர், நாளொன்றுக்குப் பெற்று வந்த வருமானமான 3,000 ரிங்கிட் தற்போது 1,000 ரிங்கிட்டுக்குக் குறைந்துள்ளதாகவும், தமது உணவகம் நள்ளிரவு 12 மணிக்கு மூடம்படும், என்றாலும் இரவு 9 மணிக்கெல்லாம் வாடிக்கையாளர்களின் வருகை குறைந்து விடுவதாகக் குறைபட்டுக் கொண்டார்.
கோவிட்-19க்கான தடுப்பு மருந்து கிடைக்காத வரை தங்களுக்கு விமோசனமில்லை என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.