பினாங்கு கடலடி சுரங்கப்பாதைத் திட்டம் மூடுவிழாவா??

பினாங்கு கடலடி சுரங்கப்பாதைத் திட்டம் நிர்மாணிக்கபட்டால், அது இந்த வட்டாரத்தில் பெரிய கட்டமைப்பு வசதியுடன் கூடிய மாபெரும் திட்டமாக அமைந்திருக்கும். எனினும், அத்திட்டம் தற்போது முடக்கப்பட்டதோடு அத்திட்டத்தை முன்னெடுத்த பினாங்கின் முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங் மீது ஊழல் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. மாபெரும் திட்டமானது பினாங் கை உலக வரைபடத்தில் முன்வைக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டது. ஆயினும் தற்போது அதனை கூட்டரசு அரசாங்கம் முடக்கியதோடு அதற்குமாறாக மேலும் ஒரு பாலத்தை நிர்மாணிக்கத் திட்டமிட்டு வருகிறது. 2008இல் பினாங்கை கைப்பற்றிய ஜசெக அங்கு பெரியதொரு திட்டத்தை இதுவரை நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடலடி சுரங்கப் பாதையோடு, அருகிலிருக்கும் 3 தீவுகளை இணைத்து மாபெரும் மாநகரமாக உருவெடுக்கும் வண்ணம் திட்டமிடப்பட்டது. அதில், கேபள் கார், ரயில் திட்டம், நெடுஞ் சாலை திட்டங்கள் மேம்பாட்டுத் திட்டங்கள் முதலானவை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தன. இத்திட்டம் ஹாங்காங், சிங்கப்பூர் போன்று பினாங்கை மேம்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அத்திட்டமானது லிம் குவான் எங்கின் பெயரை என்றென்றும் நினைவு படுத்தும் வகையிலும் பினாங்கை மீண்டும் பக்காத்தான் கைப்பற்றும் நோக்கத்திலும் திட்டமிடப்பட்டிருந்தது. திட்டத்தின் மொத்த செலவினம் 630 கோடியாக நியமிக்கப்பட்டதை அடுத்து, அம்மாதிரியான திட்டம் பினாங் கிற்குத் தேவையா என்ற கேள்வியும் தொடர்ந்து எழுப்பப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தங்க முக்கோணம் என்று கெர்னி டிரைவ், பூலாவ் திக்குஸ், தஞ்சோங் பூங்கா ஆகிய இடங்களை இணைத்து, அங்கு மத்தியதர குடும்பங்களை குடியமர்ந்தவும் அதனோடு பல பொருளாதார, வர்த்தக வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கத்திலும் அது தொடங்கப்பட்டது. அத்திட்டத்தை மத்திய அரசு முடக்கியது என்ற பத்திரிகை செய்தியை வெளியிட்ட பின்னர் சில நாட்கள் கழித்து, முதலமைச்சர் சௌ கோன் இயோவ் அது சம்பந்தமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தற்போதைய நிலையில், மத்திய அமைச்சின் திட்டமான மூன்றாவது பாலத்தை ஏற்றுக் கொள்வதை விட வேறெதுவும் செய்ய முடியாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசோடு அமைச்சர் மோதலில் ஈடுபட விரும்பவில்லை என்றும் தெரிகிறது. லிம் குவான் எங்கோடு சௌ கோன் இயோவின் உறவு தற்போது இழுபறியில் இருப்பதாகவும் கோவிட் பிரச்சினையில் பினாங்கு அரசின் செயல்பாடு வெளிப்படையாக இல்லாததை அடுத்து, அங்கு தலைவர்களுக்கு இடையிலான உறவில் கசப்பு ஏற்பட்டிருக்கிறது. லிம் குவான் எங் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி மத்திய அமைச்சராக மாறி இருந்தாலும், இன்னமும் அவர் பினாங்கின் வளர்ச்சியில் ஈடுபாடு காட்டி வருவதாகவும் மக்கள் அவரை ‘வார இறுதி முதலமைச்சராகவும் சௌ கோன் இயோவை வார நாள்கள் முதலமைச்சராகவும்‘ அழைக்கின்றனர். கனவு திட்டமான சுரங்கப் பாதைத் திட்டம் மூடுவிழா கண்டதால், லிம் குவானின் கடும் கோபத்துக்கு ஆளாவோம் என்று அவர் சற்று மௌனம் காட்டி வருகிறார். கடலடி சுரங்கப் பாதைத் திட்டத்தை ஒட்டி அங்கு இருக்கும் மூன்று தீவுகளையும் இணைத்து மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று சௌ கோன் இயோ விரும்பி இருந்தார். அதுபற்றி குறிப்பிட்ட பினாங்கின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பினாங்கு மாநில அரசு மத்திய அரசோடு மோதல் போக்கைக் தவிர்த்து, பினாங்கு பாலத்தின் செலவினம் குறைவாக இருப்பதால் அதனை ஏற்றுக் கொண்டு நிர்மாணிக்க வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார். பொதுமக்களில் பலர் தற்போதைய நிலையில் பினாங்கின் போக்குவரத்து பிரச்சினை பெரிய அளவில் உருவாகி இருப்பதால், சுரங்கப்பாதைத் திட்டத்தின் பணத்தை கட்டமைப்பு வசதிகளும் போக்குவரத்து வசதிகளையும் நிர்மாணிக்க பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். மேம்பாடு பெரிதாக இருந்தாலும் சிறிதாக இருந்தாலும் பிரச்சினைக்கு உரியதாகவே பார்க்கப்படுகிறது. சீனர்களின் ஆதரவைக் கொண்டே, ஜசெக அங்கு தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. மலாய்க்காரர்களின் சலுகை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் போன்ற விவகாரங்களில் அங்குள்ள சீன சமூகம் மிகுந்த அதிருப்தி கொண்டிருப்பதால் அவர்கள் ஜசெகவை வெற்றி பெற செய்து வருவதாக கூறப்படுகிறது.அங்குள்ள முதியவர்கள் பினாங்கு தற்போது இருப்பதைப் போலவே, அதன் பாரம்பரியத்தை கட்டிக் காக்க வேண்டும் என்று விரும்பும் வேளையில் இளைஞர்கள் அங்கு மேம்பாட்டுத் திட்டங்கள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு விரும்பும் வகையில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டுமென்று விரும்புகின்றனர். 2008 ஆம் ஆண்டு பக்கத்தான் ஹராப் பான் பினாங்கைக் கைப்பற்றிய பின்னர், பல திட்டங்களை முன் வைத்திருந்தாலும், அவை நிறைவேறாமல் போயுள்ளன என்பதை அங்குள்ள மக்கள் கவனித்து வருகின்றனர். பினாங்கில் பரவலான மேம்பாட்டை கொண்டு வந்தால்தான், அங்குள்ள இளையோரின் வாக்குகளைப் பெற முடியும் என்று பக்காத்தான் எண்ணுகிறது. இளையோர் அங்கு கடலடி சுரங்கப்பாதை நிர்மாணிப்பை வரவேற்கின்றனர், ஆயினும் அந்தக் கடலடி சுரங்கப் பாதைக்கு என்ன அவசியம் என்று ஜசெகவால் விளக்கம் தர முடியவில்லை என்பது வருத்தத்துக்குரியது. தற்போது அந்த மெகா திட்டத்தின் அவசியத்தையும் நோக்கத்தையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய நிலையில் கடுமையான நெருக்கடியை ஜசெக சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. இத்திட்டமானது உண்மையிலேயே தேசிய முன்னணி அரசாங்கத்தால் முன் மொழியப்பட்டதாகச் சில செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இரண்டாவது பாலம் முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா படாவியின் காலத்தில் கட்டப்பட்டது. அது பத்து காவான் நகரை இன்னும் பிரபலப்படுத்தி அதிக மேம்பாட்டைக் கொண்டு வந்தது என்று குறிப்பிட வேண்டும். பினாங்கு தீவில் ஜோர்ஜ் டவுனில் உள்ள பாரம்பரிய இடங்களை உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக உலக அளவில் பிரபலப்படுத்தும் நோக்கிலே அப்போதைய கெராக்கான் ஆட்சி. மிகப் பெரிய சவாலை எதிர்கொண்டு அதனை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நூர் என்பவர் கூறும் போது, ஒவ்வொரு 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை பினாங்கில் ஆட்சி மாறும் என்பதைச் சுட்டிக்காட்டினார். ஆகையால் தற்போது பக்காத்தான் அங்கு குறிப்பிட்ட தவணையை எட்டியுள்ளதால், அடுத்த பொதுத் தேர்தலில் அது தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வியும் எழுப்பபடுகிறது. ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் பினாங்கு ஆளும் கட்சிகள் தங்களின் அடைவு நிலை என்ன என்பதை மக்களுக்கு விளக்கியே வந்துள்ளது. அதனை வைத்தே அங்குள்ள மக்கள் தங்களை ஆள ஒரு கட்சியைத் தேர்ந் தெடுப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இந்நிலையில் பக்காத்தான் ஆட்சி இன்னும் சில ஆண்டுகள் ஆட்சி புரியுமா என்பது சந்தேகமே! பினாங்கை ஆட்சி செய்த லிம் குவான் எங் அங்கு மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்டு வந்து சிறந்த தலைவராக பெயரெடுத்து இருந்தாலும், மத்திய அரசில் நிதி அமைச்சராகப் பதவியை மேற்கொண்டு, துன் மகாதீர் காலத்தில் அவர் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போனதை சீன சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. லிம் குவான் எங் போல தற்போதைய முதலமைச்சர் சௌ கோன் இயோவ் பெரிய பெரிய திட்டங்களை அமைக்க விரும்பாத நிலையில் இன்னுமொரு தவணை தாம் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் செயல்படுவதாகவும் அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் சௌவுக்கு பெரும் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், புக்கிட் மெர்தாஜம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சிம் உருவாகி வருவதை அரசியல் நோக்கர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். வரும் பொதுத் தேர்தலில் அவர் பினாங்கு தீவில் சட்டமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிட முயற்சிப்பதாகவும் சொல்லப்படுகிறது. குவான் எங்கின் தீவிர ஆதரவாளரான அவர் லிம் கிட் சியாங்கின் ஆதரவைப் பெற்று பினாங்கு முதலமைச்சராக வர விரும்புவதாகவும் கூறப்படுகிறது. பக்காத்தான் ஹராப்பான் வரும் பொதுத்தேர்தலில் இன்னும் கடுமையாக உழைத்து அங்கு மூன்றில் இரண்டு மடங்கு ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடிப்பது சுலபமான காரியமாக இருக்காது என்றே தோன்றுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 5 =