பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் லிம் குவான் எங்கிடம் பல மணி நேரம் விசாரணை

பினாங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் 630 கோடி வெள்ளி மதிப்புள்ள கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இருந்த லிம் குவான் எங்கிடம் நேற்று முன்தினம் பல மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புத்ராஜெயாவில் இருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) அலுவலகத்தில் லிம் குவான் எங் 7 மணி நேரத்திற்கு தனது வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
பிற்பகல் 1.05 மணிக்கு எம்ஏசிசி அலுவலகத்திற்கு வந்த பினாங்கு மாநில முன்னாள் முதலமைச்சருமான லிம் குவான் எங், இரவு 7.15 மணி அங்கிருந்து வெளியேறியதாக எம்ஏசிசி துணை தலைமை ஆணையர் டத்தோ அஹ்மாட் குசாய்ரி உறுதிசெய்தார்.
ஜனநாயக செயல் கட்சியின் தலைமை செயலாளர் லிம் குவான் எங்குடன் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ மற்றும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். நேதாஜி ராயர் ஆகியோரும் வழக்கறிஞர்களாக உடன் வந்திருந்தனர்.
630 கோடி ரிங்கிட் மதிப்புடைய இத்திட்டத்தின் ஊழல் குறித்த விசாரணைக்கு உதவும் பொருட்டு இம்மாதம் 7ஆம் தேதி பினாங்கு மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோவ் மற்றும் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி உட்பட மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 9 =