பினாங்கிற்கு நீரை விநியோகிக்க முடியாது பேராக் மந்திரி பெசார் திட்டவட்டம்

சுங்கை பேராக் ஆற்றிலிருந்து பெறப்படும் தண்ணீரைப் பேரா மாநில மக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று பேரா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சரானி முகமட் நேற்று சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
சுங்கை பேராக் ஆற்றிலிருந்து சுத்திகரிக்கப்படாத நீரை தங்களுக்கு விநியோகம் செய்யும்படி பினாங்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கையைத் தங்களால் நிறைவேற்ற முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
பிரச்சினையை எதிர்நோக்கிவரும் பினாங்கு மீது நாங்கள் இரக்கம் கொண்டாலும், அம்மாநிலத்திற்கு எங்களால் சுத்திகரிக்கப்படாத நீரை விநியோகம் செய்ய இயலாது. தெனாகா நேஷனல், பேராக் குடிநீர் வாரியம், நீர்ப்பாசன, வடிகால்துறை, பேரா மாநில பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு ஆகிய முக்கிய முகமைகளின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பினாங்கின் கோரிக்கையை நாங்கள் நிராகரிக்க வேண்டியுள்ளது என்றார் அவர்.
சுங்கை பேராக் ஆற்றுநீர் சுத்திகரிக்கப்பட்டு மாநில மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமன்றி, மின்சார உற்பத்திக்கும் மீன்வளர்ப்புக்கும் விவசாயத்திற்கும் அந்த ஆற்றுநீர் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.
சுங்கை பேராக் சுத்திகரிக்கப்படாத நீர் விநியோகத் திட்டத்தின்கீழ் பினாங்கிற்கு பேராக் மாநில அரசு சுத்திகரிக்கப்படாத நீரை விநியோகம் செய்யுமா என்று தெபிங் திங்கி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் அஸிஸ் பாரி கேட்டதற்கு சரானி அவ்விவரங்களைத் தெரிவித்தார்.
தற்போது இருபத்தைந்து லட்சமாக இருக்கும் பேரா மாநிலத்தின் மக்கள்தொகை வரும் 2050ஆண்டில் முப்பது லட்சமாக அதிகரிக்கும் என்று வீடமைப்பு மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள்தொகை அதிகரிக்கும் நிலையில், நீரின் பயன்பாடும் அதிகரிக்கும். விவசாயம், மீன்வளம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அதிக நீரைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே, பினாங்கிற்கு நீரை விநியோகம் செய்யத் தொடங்கினால் பேரா மாநிலத்திற்குக் போதுமான நீர் கிடைக்காது. இதனால், அதன் பொருளாதாரம் பெரிதும் பாதிப்படையும் என்று சரானி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + 8 =