பினாங்கின் மேம்பாட்டுத் திட்டத்தை நூருல் எதிர்க்கலாமா?

பிகேஆரின் முன்னாள் உதவித் தலைவர் நூருல் இஸா அன்வார் ஈராண்டுகளுக்கு மேலாக அரசியலில் தீவிரம் காட்டாமல் ஒதுங்கி இருந்த பின்னர், கடந்த வாரம் பெரிய குண்டைத் தூக்குப் போட்டுள்ளார்.
பினாங்கின் தென் பகுதியில் மேற்கொள்ளப்படும் 3 தீவுகளை இணைத்து மேம்பாட்டை மாநில அரசை வழிநடத்தும் ஜசெகவின் திட்டத்திற்குத் தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பிஎஸ்ஆர் திட்டம் கடற்கரையோர சுற்றுச்சூழலுக்குத் கேட்டை ஏற்படுத்துவதோடு, ஆயிரக் கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்திற்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதால் பினாங்கு அரசு அத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று அவர் அறைகூவல் விடுத்தார்.
இதுவரை அத்திட்டத்தைச் சில அரசியல்வாதிகள் எதிர்த்து வந்த பின்னர், பினாங்கை ஆளும் பக்காத்தான் ஹராப்பானில் உறுப்பியம் பெற்றிருக்கும் பிகேஆர் கட்சியே எதிர்ப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது பிகேஆர் மேலிடத்திற்குத் தெரியாமல் நூருல் அந்த அறிப்பைச் செய்யவில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நூருலின் இந்த அறிவிப்பானது பக்காத்தான் கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
2015இல் கடலைத் தூர்த்து மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது, பிகேஆர் அதனை எதிர்க்கவில்லை. ஆனால், தற்போது எதிர்க்கும் நோக்கம்தான் என்ன?
அதற்குப் பதிலளித்த நூருல், அத்திட்டம் முதலில் போக்குவரத்து பெருந்திட்டமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அதில் மெகா நெடுஞ்சாலைகள், மோனோ ரயில் திட்டம், ஆகாய டாக்சி சேவை, எல்ஆர்டி போன்றவை உட்படுத்தப்பட்டன. பின்னர், பினாங்கிற்கு அருகிலிருக்கும் 3 தீவுகளை இணைத்து பெரிய மேம்பாட்டுத் திட்டங்கள் அதில் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு துன் மகாதீர் பிரதமாக இருந்தபோது, அத்திட்டத்தால் ஆயிரக் கணக்கான மீனவர்களின் தொழில் பாதிக்கும் என்று அன்வார் இப்ராஹிம் அவரிடம் புகார் தெரிவித்திருந்தார்.
இறுதியில், அத்திட்டத்தை ஜசெக கைவிட வேண்டுமென பிகேஆர் நெருக்குதலைக் கொடுத்து வருகிறது.
பிகேஆரின் இந்த முடிவானது வரும் பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் வெற்றியைப் பாதிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
பிகேஆர் வசமுள்ள தொகுதிகளில் பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கபடுகிறது. மேற்கண்ட திட்டத்தால் பெரும்பாலான மலாய்க்கார மீனவர்களே பாதிப்படைவர் என்றும் சொல்லப்படுகிறது.
இது பினாங்கில் உள்ள மலாய்க்காரர்களிடையே முதலமைச்சர் சௌ கோன் இயோவுக்கு கெட்ட பெயரையே கொண்டுவரும் என்பது உண்மையே ஆகும். பொதுமக்களின் புகார்களுக்கு முதலமைச்சர் பதில் சொல்லாமல், துணை முதல்வர் அமாட் ஸாக்கியுடின் அப்துல் ரஹ்மான் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செபெராங் பிறையில் உள்ள மலாய்க்கார சமூகம் தேர்தலில் தங்களின் அதிருப்தியை பெருவாரியாக வாக்குச் சீட்டின் வழி தெரிவிப்பார்கள் என்ற அபாயம் இருப்பதால், அதில் பிகேஆரே பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.
எனினும், பினாங்கு தீவில் கோலோச்சி வரும் சீனர்களுக்கு அதனால் பாதிப்பு வராது. இந்த மேம்பாட்டுத் திட்டம் பினாங்கு மக்களுக்கு வேலை வாய்ப்பையும் மேம்பாட்டு வளர்ச்சியையும் கொண்டுவரும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
அத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் மேம்பாட்டை எதிர்ப்பவர்கள் என்று முத்திரை குத்தப்படுகின்றது.
அத்திட்டத்தின் எதிர்ப்பாளர்கள் மேம்பாட்டுத் திட்ட வாய்ப்புகளை உணராதவர்கள் என்று விமர்சிக்கப்படுகின்றனர்.
கடந்த 3 தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பான் பினாங்கில் அதிகப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றதை அடுத்து, அது தன்மூப்பாக மேம்பாட்டுத் திட்டங்களை அறிவிக்கத் தொடங்கியது.
பினாங்கின் வளர்ச்சி ஒரு முடிவான கட்டத்தை அடைந்து, நடுத்தர குடும்பங்கள் அதிகமாக அதிகரித்து, பணப்புழக்கம் அதிகமாக உருவெடுத்த போது பக்காத்தான் அங்கு ஆட்சியைக் கைப்பற்றியது. அங்கு வீடமைப்புத் திட்டங்கள், பெரிய பெரிய பேரங்காடிகள், அதிநவீன நகர்புற வசதிகள் வேண்டுமென பினாங்கின் சீன சமூகம் விரும்பியபோது பக்காத்தான் ஆட்சிக்கு வந்தது.
அச்சமயத்தில் சீனர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்டுவரும் முயற்சியில் லிம் குவான் எங் இறங்கினார். சீனர்கள் தனியார் துறை பொருளாதாரம் வளர்ச்சி பெற்று பொருளாதார வாய்ப்புகள் மென்மேலும் பெருக வேண்டுமென எதிர்பார்த்தனர்.
அதனைத் தொடர்ந்து, கடலடி சுரங்கப்பாதை, கடலைத் தூர்த்து நிலப் பரப்பை அதிகரித்து, நவீன மேம்பாடுகளைக் கொண்டுவர லிம் குவான் எங் முயன்றார். எனினும், இந்த மெகா திட்டம் பெரும் வரவேற்பைப் பெறத் தவறியுள்ளது. அத்திட்டம் தொடர்பாக அவர் ஊழல் வழக்கையும் எதிர்நோக்கி இருக்கிறார்.
தேசிய முன்னணியின் சார்பில் பினாங்கு முதலமைச்சராக இருந்த லிம் சோங் இயூ, தமது பெயர் நிலைக்கும் வகையில் பினாங்கு பாலம், கொம்தார் கட்டடம் போன்றவற்றை விட்டுச் சென்றது போன்று, துன் மகாதீர் அனைத்துலக விமான நிலையம், இரட்டைக் கோயுரம் போன்றவற்றை நிர்மாணித்து உலகளவில் பெயர் பெற்றது போன்று, ஒரு முன்மாதிரியாகக் கொண்டு, லிம் குவான் எங்கும், சௌ கோன் இயோவும் தங்களின் பெயர் நிலைக்க வேண்டி மேற்கண்ட மெகா திட்டங்களை நிறைவேற்றத் துடிக்கின்றனர்.
லிம் குவான் எங்கிற்கு கடலடி சுரங்கப்பாதையும் சௌ கோன் இயோவுக்கு கடலைத் தூர்த்து நிலப் பரப்பை உருவாக்கி மேம்பாட்டுத் திட்டமும் அவர்களின் மனதில் உதித்தவையாகும்.
கடலைத் தூர்க்கும் திட்டம் தொடர்ந்து நடைபெறுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது. அது நிறைவேறுமா அல்லது கடலடி சுரங்கப்பாதையைப் போன்று கிடப்பில் போடப்படுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.
இத்திட்டம் வரும் பொதுத்தேர்தலில் விவாதத்துக்குள்ளாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்க்கலாம்.
அத்திட்டமானது பினாங்கின் எதிர்காலத்திற்குத் தேவை என்று பெரும்பாலோர் கூறுகின்றனர். பலரோ, அது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பணயம் வைத்துச் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தைக் கொண்டுவரும் திட்டம் என்று விமர்சிக்கின்றனர்.
இது பினாங்கு பொதுத்தேர்தலில் இன ரீதியான பிரிவினையை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
இதனிடையே அங்கு ஜசெகவுக்கும் பிகேஆருக்கும் இடையிலான பிரச்சினையைத் தீர்க்க முதலமைச்சர் முயல வேண்டும்.
பினாங்கின் ஆட்சியைக் கைப்பற்ற இரு கட்சிகளின் ஒருமித்த ஒத்துழைப்பு தேவை. அதில் அன்வார் இப்ராஹிமும், லிம் குவான் எங்கும் என்ன செய்யப் போகிறன்றனர் என்பதை பினாங்கு மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − six =