பிகேஆரின் ‘ஆயோ மலேசியா’ எனும் முழக்கம் இளைஞர்களைக் கவர்ந்திழுக்கும்

15ஆவது பொதுத் தேர்தலில் மாற்றத்தை கொண்டுவர வேண்டுமானால் சாதாரண மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்று பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஸா அன்வார் கேட்டுக்கொண்டார்.
பிகேஆர் மலாக்கா, சரவாக், ஜொகூர் ஆகிய மாநிலத் தேர்தல்களில் பின்னடைவை சந்தித்ததாகவும் இதன் காரணமாக நாம் முற்றாக தேர்தலில் இருந்து பின்னடைய வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேற்கண்ட மாநிலத் தேர்தல்களில் குறைவான வாக்காளர்களே வந்து வாக்களிப்பில் கலந்து கொண்டனர். தற்போது நாட்டில் அரசியல் சிக்கலின் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளதையே அது காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
எம்மாதிரியான சவால்களை நாம் சந்தித்தாலும், கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காமல், நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வர நாம் தொடர்ந்து பாடுபட வேண்டுமென நூருல் இஸா கேட்டுக் கொண்டார்.
எதிர்க்கட்சிகள் ஒரே எண்ணத்தைக் கொண்ட இளைஞர்களை ஒன்று சேர்த்து, தங்களுடன் இணைத்துக் கொண்டு அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ரஃபிஸி ரம்லியுடன் தாம் இணைந்து அறிமுகப்படுத்திய ‘ஆயோ மலேசியா’ எனும் திட்டமானது அரசியலில் எவ்விதமான நிலைப்பாட்டையும் எடுக்க முடியாது தத்தளித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை அரசியலில் ஈடுபடுத்தி நாட்டில் உருமாற்றத்தைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியோடு போட்டியிட்டு, மாற்றத்தைக் கொண்டுவரவும் மக்களுக்கு நல்வாழ்வைத் தரவும் உழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அடுத்த பொதுத்தேர்தலில் வெற்றி கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு சிறந்த வாய்ப்பு இருப்பதாகவும் அதனைத் தட்டிக் கழிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த மூன்று ஆண்டு காலமாக நாடு பல்வேறு சோதனைகளை எதிர் கொண்டதாகவும் அதில் முக்கியமாகக் கோவிட் தொற்றும் நாட்டின் பொருளாதார நிலையும் மிகவும் சிக்கல்களை ஏற்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆயூ மலேசியா எனும் கொள்கையானது ஒரே மாதிரியான எண்ணத்தை கொண்ட அனைவரையும் ஒன்றிணைத்து மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அணுகி, ஆராய்ந்து களைய நோக்கம் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் பக்காத்தான் ஹராப்பானும் பிகேஆரும் மற்ற கட்சிகளை விட மாறுபட்டது என்று மக்களுக்கு உணர்த்த முடியும் என அவர் சுட்டிக் காட்டினார். எம்மாதிரியான சவால்களையும் தடைகளையும் தடங்கல்களையும் எதிர்கொண்டு நாம் மாற்றத்தைக் கொண்டு வருவதிலிருந்து தவறக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சாதாரண முடிவு கூட வருங்காலத்தில் பெரிய வெற்றிகளைத் தர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
பி40, எம்40 ஆகிய பிரிவு மக்கள் பருவ நிலை மாற்றம் காரணமாக வெள்ளம், நிலச்சரிவு போன்ற சோதனைகளை எதிர்கொண்டு கடும் துன்பத்திற்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டதோடு இதில் டி20 எனும் பிரிவு எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல் இருந்ததாகச் சுட்டிக்காட்டினார்.எனவே, மலேசியர்கள் அனைவரும் சிறப்பான வாழ்வை உறுதி செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
தனித்துவமான தகுதி மட்டும் நம்மை உயர்த்தாது. அதற்குத் தகுந்த அரசியல் உதவியும் இருப்பது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசியலில் அதிகமான இளைஞர்கள் ஈடுபாடு காட்டி, நாட்டின் எதிர்காலத்தை நிலை நிறுத்த முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நாடு வளமாக இருக்க பொருளாதாரம் சிறக்கவும் இளைஞர்கள் தொழில் துறைகளில் ஈடுபாடு காட்ட வேண்டுமென்றும்.
ஜெர்மன் நாடு அத்துறையில் பெரும் முன்னேற்றத்தோடு சிறந்து விளங்குவதை முன்மாதிரியாகக் கொண்டு, அதனைப் பின்பற்ற வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஆகவே, நாட்டில் அதிகமான தொழில் திறன் பயிற்சிகளை வழங்கும் பணிகளை நாம் உருவாக்க வேண்டும் என்றும் நாட்டில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர ஆயூ மலேசியா திட்டத்தில் இளைஞர்கள் பெருவாரியாக இணைந்து கொள்ள வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + 19 =