பாஸ் கட்சி வேண்டும் ஓம்ஸ் தியாகராஜன் வேண்டாமா?


கே: நடந்து முடிந்த சபா மாநிலத் தேர்தலில் எந்த கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைத்தன என அறிய விரும்புகிறேன்?
ப: சரியான ஆய்வு. அம்னோ, பெர்சத்து ஆகிய கட்சிகள் இணைந்த ஜிஆர்எஸ் மொத்தம் 316,112 (43.42%) வாக்குகளையும் ஷாஃபி அப்டால் தலைமையிலான வாரிசான் ப்ளஸ் கூட்டணி 317,991 (43.42%) வாக்கு களையும் பெற்றுள்ளது. அதாவது வென்ற கூட்டணி குறைவான வாக்குகளையும் தோல்வியுற்ற கூட்டணி அதிகமான வாக்குகளையும் பெற்றுள்ளன. ஒன்று அல்லது இரண்டு விழுக்காடு வாக்குகள் மாறியிருந்தாலும் தேர்தல் முடிவுகள் மாறியிருக்கும்


கே: சபா மாநில முதல்வரை தேர்வு செய்ய கிட்டத்தட்ட 60 மணிநேரம் தடுமாற்றம் நிகழ்ந்தது, மத்தியில் ஆட்சி அமைக்க 60 நாள் தேவைப்படுமோ?
ப: அது கூட பரவாயில்லை. புதிய
தேர்தல் நடந்து, அப்போதும் எக்கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை என்றால், இழுபறி நிலையில் அமைக்கப்படும் புதிய ஆட்சி 60 நாட்களுக்காவது தாக்குப்பிடிக்குமா என்பதுதான் கேள்வி. புதிய தேர்தல்கூட ஒரு தீர்க்கமான முடிவைத்தராது என்ற நிலைதான் தற்சமயம் உள்ளது.


கே: தனிப் பெரும்பான்மையுடன் வாரிசான் சபா இருப்பது, தோல்வியிலும் ஒரு வெற்றிதானே?
ப: உண்மை தான். ஆனால், வாரிசான் சின்னத்தில் போட்டியிட்டு ஏழு இடங்களில் ஆறு இடங்களை ஜசெக வென்றுள்ளது. அந்த ஆறு இடங் களும் வாரிசான் கணக்கில்தான் வருகின்றன. ஒரு வேளை பிகேஆர் வாரிசான் சபா சின்னத்தில் போட்டி யிட்டிருந் தால் மேலும் ஓரிரு இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் என்றே நான் எண்ணுகின்றேன்.


கே: வரும் வாரம் என்ன நடக்கும்? அன்வார் இப்ராஹிம் பதவி ஏற்பாரா? அல்லது ஆட்சி கலைக்கப்பட்டு புதிய ஆட்சி மலருமா?
ப: இந்த கேள்வி தற்சமயம் அனைவரின் சிந்தனைகளையும் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. தற்சமயம் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி பெரும்பான்மை இழந்து இருக்கிறது என்பது உண்மை. வரும் நவம்பர் 2 ஆம் தேதி கூடவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தின் போது நாட்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப் படும். அப்பொழுது இரண்டு அம்னோ உறுப்பினர்
கள் வயிற்று வலி என்று நாடாளுமன்றம் வராமல் இருந்தாலும் நாடாளுமன்ற பட்ஜெட் தீர்மானம் தோல்வி யுறும். ஆட்சி கவிழும். இந்த இக்கட்டான சூழ்நிலையைத் தவிர்க்கும் பொறுப்பு பேரரசருக்கும் உள்ளது. சபா மாநில இடைத் தேர்தல் நாட்டில் மூன்றாவது கொரோனா தொற்றை கட்ட விழ்த்துள்ளது. இந்நிலையில் தேசிய அளவிலான தேர்தலை நடத்த நாட்டின் மீதும் மக்கள் மீதும் அக்கறை கொண்ட யாரும் விரும்ப மாட்டார்கள். ஆகவே, தேர்தலை தவிர்க்கவும் ஆட்சி கவிழ்ப்பை முறியடிக்கவும் அன்வார் இப்ராஹிம் ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 22 ஆண்டுகள் எதிர்பார்த்து காத்திருந்த அந்த நிகழ்வு அடுத்த 2 நாட்களில் நடைபெறும் என்று நம்பிக்கையுடன் இருப்போம்.


கே: பாஸ் கட்சி மஇகா தலைவர்கள் உதாசீனம் செய்தும் அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பதன் அர்த்தம் என்ன?
ப: பதவி வேண்டும். அதனால் எங்களை என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் எங்களுக்கு உறைக்காது. இப்படிக்கு மஇகா.


கே: மலேசிய இந்திய மறு மலர்ச்சி இயக்க நிகழ்வுகளுக்கு செல்லக் கூடாது, ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்று மஇகா தலைவர்கள் செய்த அறிவிப்பு எதைக் காட்டுகிறது?
ப: 74 ஆண்டு பழமை வாய்ந்த ஒரு தேசிய அரசியல் கட்சி புதிதாக பதிவுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் ஓர் இயக்கத்தைக் கண்டு பயந்து அதில் கலந்து கொள்ள வேண்டாமென்று அறிக்கை வெளியிடுகிறது. கூறப்பட்டுள்ள காரணம் ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா. தியாகராஜன் தலைமையில் செயல்படும் இந்த இயக்கம் எதிர்க்கட்சி ஆதரவு இயக்கமாம். ஓர் இயக்கம் எதிர்க்கட்சிக்கு ஆதரவாக இருக்கிறதா? ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறதா என்பது முக்கியமல்ல. சமுதாயத்திற்கு பயனளிக்க வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறதா என்பதுதான் கேள்வி. ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று பேதம் பிரித்துப் பார்க்கும் மஇகாவிடம் நான் கேட்கின்றேன், இப்பொழுது நீங்கள் அங்கம் பெற்றிருக்கின்ற பெரிக்காத்தான் நேஷனல் அதற்கு தலைமையேற்றிருக்கும் பெர்சத்து கடந்த பொதுத் தேர்தலில் எந்தக் கட்சி? நீங்கள் வெள்ளையும் சொள்ளையுமாக வேஷ்டி அணிந்து பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பாஸ் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் எந்தக் கட்சி? பதவிக்கு என்றால் எதிர்க்கட்சியோடும் கைகோர்க்கிறார்கள். இருந்தாலும் உங்கள் கட்சிக்கு எதுவும் வேண்டுமென்றால் பாரிசான் நேஷனலிடம் கேளுங்கள். எங்களிடம் கேட்காதீர்கள் என்று பாஸ் கட்சித் தலைவர்கள் ஏளனமாகவும் இளக்கார மாகவும் பேசினால் கூட மரியாதை கெட்டு அவர்களோடு உறவு வைத்துக் கொள்கிறார்கள். மஇகாவிற்கு பாஸ் கட்சி வேண்டும். ஓம்ஸ் தியாகராஜன் வேண்டாமாம். நஷ்டம் யாருக்கு என்பது நாட்டிற்கே தெரியும். தயவு செய்து உங்கள் தலைவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருங்கள். மஇகாவைச் சேர்ந்தவர்கள் இந்த இயக்கத்தின் பக்கம் வந்து விடாதீர்கள் என்று ஓம்ஸ் தியாகராஜனே வெட்ட வெளிச்சமாக கூறிவிட்டார்.


கே: இன்றைய தகவல் பரிமாற்ற தொழில் நுட்ப வளர்ச்சி எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது?
ப: பிரிட்டனைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன் டுவிட்டரில் ‘இந்தியாவின் தென் மாநிலங்களில் வசிக்கும் மக்களின் விருப்ப உணவான இட்லியை ‘உலகிலேயே சலிப்பான உணவு வகை’ என பதிவிட்டார். இதற்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் டுவிட்டரில் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரின் மகன் இஷான் தரூரும் சசி தரூரும் கூட இட்டிலிக்கு வக்காலத்து வாங்கி களத்தில் இறங்கியுள்ளனர். ‘இட்லியின் சுவையை பாராட்டுவதற்கும் கிரிக்கெட்டை ரசிப்பதற்குமான திறன் எல்லாருக்கும் இருக்காது. வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கும் இந்த மனிதரைப் பார்த்து பரிதாபப்படு மகனே’ என சசி தரூர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சர்ச்சைகளுக்குப்பின் ஆண்டர்சன் வெளியிட்ட பதிவில், எதிர்பாராத விதமாக இந்திய மக்களை கோபமடைய வைத்து
விட்டேன். என் மீதான விமர்சனங் களுக்குப் பின் மதிய வேளைக்கு இட்லியை ‘ஆர்டர்’ செய்து சாப்பிட்டேன். எனக்கு தோசை, ஆப்பம் உள்ளிட்ட பெரும்பாலான இந்திய உணவு வகைகள் மிகவும் பிடிக்கும். ஆனால் புட்டு மற்றும் இட்லியை என்னால் சகித்துக்கொள்ள இயலாது. என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் ஒருவருக்கு இட்லி பிடிக்கவில்லை என்றால் கூட அதற்கு உலகளவில் ஒரு சர்ச்சை உலா வரும் என்பது தெளிவாகிறது.


கே: கோவிட்- 19 தாக்கத்திற்கு நடுவே தமிழகத்தின் தேர்தல் பிரசாரம் எந்தநிலையில் உள்ளது?
ப: அதிமுக ஒருவழியாக தனது முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டது. தமிழகத்தில் சிறிது சிறிதாக கால்ஊன்றி வரும் பாஜக அடுத்த மாதம் தமிழகத்தில் ‘வெற்றிவேல் யாத்திரையை’ நடத்தவுள்ளது.
தமிழக பாஜ கட்சித் தலைவர் முருகன் யாத்திரையில் கலந்து கொண்டு மாநிலம் முழுவதும் சுற்றி வர உள்ளார். திருத்தணியில் நவம்பர் 6ம் தேதி துவங்கி திருச்செந்துரில் டிசம்பர் 6ஆம் தேதி நிறைவு செய்யப்படவுள்ளது. யாத்திரையின் அடையாளச் சின்னமாக பாஜக-வின் தாமரையில் வேல் பொறிக்கப்பட்டுள்ளது. கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப் படுத்திய ‘கருப்பர் கூட்டம்‘ பிரச்சினையில் கைது செய்யப்பட்டவர் தி.மு.க. – ஐ.டி. அணியில் இருந்தவர். ஹிந்துக்கள் மனதை புண்படுத்துவது தி.மு.க.விற்கு வாடிக்கையாக உள்ளது. இதை மக்களிடம் எடுத்து சொல்லவும் கருப்பர் கூட்டத்திற்கு தக்க பாடம் புகட்டவும் ‘வெற்றிவேல்’ யாத்திரையை திட்டமிட்டுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார். பாஜகவின் புதிய இணைப்பான அண்ணாமலை ஐபிஎஸ் கட்சிக் கூட்டங்களில் தூள் கிளப்பி வருகிறார். இதற்கிடையே ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை நடைபெறும் தமிழக தேர்தல் ஆன்மீகத் தேர்தலாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. காரணம் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு திராவிடக் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் கட்சி வெற்றி பெற தெய்வ தரிசனத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 8 =