பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் போலிகிராப் சோதனைக்கு இணங்குவாரா?

பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டில் உண்மைத் தன்மையை கண்டறியும் போலிகிராப் சோதனைக்கு உட்பட வேண்டுமென பாஸ் கட்சியின் இயக்குநர் ரோஸ்லான் ஷாஹிர் முகமட் ஷாஹிர் வலியுறுத்தியதை அடுத்து, பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் அந்தச் சோதனைக்கு உட்பட சம்மதிப்பாரா என பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டி கேள்வி எழுப்பினார். அம்னோவிடமிருந்து பாஸ் கட்சி எந்த நிதியையும் பெறவில்லை என ஹாடி அவாங் சாதித்து வரும் வேளையில், அக்கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான நசாருதின் மாட் இசாவின் மீது நம்பிக்கை மோசடி, பண மோசடி சம்பந்தமான 33 வழக்குகள் போடப்பட்டிருப்பது ஏன் என சதீஸ் கேள்வி எழுப்பினார். இந்த நசாருடின், தலைவர் ஹாடி அவாங்கிற்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்துள்ளார் என்றும் 2013ஆம் ஆண்டிலிருந்து அம்னோவுடன் பாஸ் கட்சி கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி வந்ததாகவும் சதீஸ் குறிப்பிட்டார்.
பாஸ் கட்சி அம்னோவிடமிருந்து 9 கோடி ரிங்கிட்டைப் பெற்றதாக சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர், கிளேர் ரிவ்காசல் பிரௌன் எழுதியதை எதிர்த்து, அவருக்கு எதிராக லண்டனில் வழக்கைத் தொடர்ந்த பின்னர், இவ்வாண்டு பிப்ரவரியில், பெரிய தொகையிலான இழப்பீட்டை வழங்கி, அந்த வழக்கை ஹாடி அவாங் மீட்டுக் கொண்டது ஏன்? தம்மீது தவறு இல்லையென்றால் அந்த வழக்கை அவர் தொடராதது ஏன் என்றும் சதீஸ் வினவினார்.
இந்த விவகாரத்தில் ஹாடி அவாங் தெரிவித்த தகவல்கள் யாவும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாகக் குறிப்பிட்டதோடு, அது சம்பந்தமாக ஹாடி அவாங் பொய்யைக் கண்டறியும் போலிகிராப் சோதனைக்கு உட்பட பாஸ் கட்சியினர் வலியுறுத்த வேண்டுமெனவும் சதீஸ் முனியாண்டி கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 3 =