பழைய நண்பர்கள் அழைத்தார்கள்; விருந்தில் கலந்து கொண்டேன்

விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும்படி எனது பழைய நண்பர்கள் அழைத்தார்கள். அவர்களின் அழைப்பைத் தட்டிக்கழிக்க முடியாததால் அதில் கலந்து கொண்டேன் என்று ஜொகூர் கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஒஸ்மான் சாப்பியான் தெரிவித்துள்ளார்.
ஜொகூர் மாநில முன்னாள் மந்திரி பெசார் ஒஸ்மான் சாப்பியான் பெர்சத்து கட்சி சார்பில் கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
பேராக் சிலிம் சட்டமன்ற இடைத்தேர்தலின் போது துன் மகாதீரின் பெஜுவாங் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
இதனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் இன்னும் பெர்சத்து சட்டமன்ற உறுப்பினரே என அறிவிப்புச் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஜொகூர் பெஜுவாங் கட்சி ஏற்பாட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசார விருந்து நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
“என்னுடன் பெர்சத்து கட்சியில் ஒன்றாக இருந்த பழைய நண்பர்கள் அழைத்ததன் பேரில் இந்த விருந்தில் கலந்து கொண்டேன். பெர்சத்து கட்சியில் என் நிலை குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர். சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தல் பிரசாரத்தில் நான் கலந்து கொண்டதற்காக அவர்கள் நன்றி தெரிவித்தனர்” என்றார் அவர்.
ஜொகூர் மாநில சட்ட மன்றத்தில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு 29 இடங்களும் பக்காத்தான் ஹராப்பானுக்கு 27 இடங்களும் உள்ளன. ஒஸ்மான் சாப்பியான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டால், ஜொகூர் அரசாங்கம் ஆட்டம் காணும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × one =