பல ரூபங்களில் எதிரொலிக்கும் பாலியல் சர்ச்சைகள்

கடந்த ஒரு வாரக்காலமாக தமிழ ஊடகங்களின் முக்கியக் கருப்பொருளாக இருப்பது பெண்களுக்கெதிரான பாலியல் தொந்தரவுகள் பற்றிய சர்ச்சைகள்தான். ஒரு நதியில் பல கிளைகள் பிரிவதுபோல், இந்த ஒற்றை பிரச்சனையில் பல தரப்பட்ட விவகாரங்கள் ஊற்றெடுத்துக்கொண்டே இருக்கின்றன. பெண்களுக்கெதிரான பாலியல் தொந்தரவுகள் தொடர்பான சர்ச்சை தமிழகத்தில் தோன்றுவது இது முதல் முறையல்ல. கடலில் எழுந்து ஆர்ப்பரிக்கும் அலைகள்போல், அது தொடர்ந்து நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இம்முறை அது தமிழக எல்லையைத் தாண்டி அண்டை மாநிலமான கேரளாவையும் சர்ச்சைக்குள்ளே இழுத்துப் போட்டுள்ளது.

இம்முறை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு தந்த பாலியல் தொல்லை செய்தி புதிய சர்ச்சையை தொடக்கி வைத்தது.
சென்னை, கே.கே.நகரில் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகள் மதுவந்தியின் மேற்பார்வையில் நடத்தப்படும் பத்மா சேஷாத்ரி பள்ளி 60 ஆண்டுகால பாரம் பரியம் கொண்டது. இதுவரை அந்தப் பள்ளி உருவாக்கிய திறனாளர்கள் பல்துறைகளிலும் வெற்றியாளர்களாகப் பயணிக்கின்றனர். மிகுந்த போட்டிகளுக்கு இடையே அந்தப் பள்ளியில் படிக்க இடம் கிடைக்கப் பெறும் மாணவர்கள், ஒன்று சாதிய நிலையில் மேல் படிகளில் இருக்க வேண்டும். அல்லது பொருளாதார ரீதியாகப் பலமானவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இன்றோ, அந்தப் பள்ளியின் மாணவர்கள், தங்கள் ஆசிரியர் மீதே கொடுத்துள்ள பாலியல் புகார்கள், அப்பள்ளி பற்றிய பிம்ப மதிப்பீடுகளைத் தகர்த்துள்ளன. அப்பள்ளி நிர்வாகம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் மீது அப்பள்ளியின் மாணவிகளும், முன்னாள் மாணவிகளும் முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அவரை பணியிடைநீக்கம் செய்திருக்கிறது பள்ளி நிர்வாகம். பத்மா சேஷாத்ரி பள்ளிகொரோனா தொற்றின் காரணமாக, இணையப் வழி நடத்தப்படும் வகுப்பில், இடுப்பில் துண்டு மட்டும் அணிந்தபடி வந்தது, தனது தனி புலனத்தின் வாயிலாக மாணவிகளுக்கு ஆபாச வீடியொக்களின் தொடர் அனுப்பியது, ‘படத்துக்குச் செல்லலாமா?’ என்று குறுஞ்செய்தி அனுப்பியது, வகுப்பறைகளில் பாலியல் ‘ஜோக்ஸ்’ சொன்னது, மாணவிகளிடம் முறையற்ற தொடுதலில் ஈடுபட்டது என அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அவரை பணியிடைநீக்கம் செய்திருக்கிறது பள்ளி நிர்வாகம்.
இதற்கிடையில், குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டு அவர் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. காவல்துறை விசாரணையில், அவர் மாணவிகளுடனான தனது அனைத்து ‘வாட்ஸ்அப்’ பதிவுகளையும் அழித்துள்ளதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
20 ஆண்டுகளாக ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பற்றி இப்போது புகார் வெடித்திருக்கிறது என்றால், இத்தனை ஆண்டுகளில் இதே ஆசிரியரின் தொல்லைகள் எத்தனை மாணவிகளின் மௌனம், அச்சம், கண்ணீரின் மீது நிகழ்ந்திருக்கும் என்பது தெரியவில்லை. ஆகவே, அந்தச் சங்கிலியை அறுக்கும் முதல் கல்லாக இந்த புகாரை முதலில் வெளிக் கொணர்ந்த அந்த இளம் வயது மாணவிக்கு புகழ்ச்சிகள் குவிகின்றன.
இந்தப் பிரச்னையைக் கண்டித்தும், விசாரணை கேட்டும் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், ராமதாஸ், ஜோதிமணி என்று அரசியல் தலைவர்கள் அறிக்கை விட்டிருக்கிறார்கள். தயாநிதி மாறன், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் நிஷாங்க்கு, சி.பி.எஸ்.இ ஆணையமும் இந்தப் பிரச்னையை விசாரிக்கக்கோரி கடிதம் எழுதியுள்ளார். பத்மா சேஷாத்ரி பள்ளியின் முன்னாள் மாணவிகளான பாடகி சின்மயி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, நடிகை லெஷ்மி ப்ரியா சந்திரமௌலி எனப் பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் ஊதி பெரிசாகக்கப்பட்டு பள்ளி இழுத்து மூடப்பட வேண்டும், பள்ளி இடிக்கப்பட வேண்டு என்ற கூக்குரலும் எழுந்துள்ளது.
இவ்விவகாரம் இன்னொரு கோணத்திலும் விவாதிக்கப்படுகிறது. பள்ளி நடத்துனர் மதுவந்தி ஒரு பிராமணர். மற்றும் அவர் பாஜ கட்சியைச் சேர்ந்தவர் என்ற ரீதியில் அவருக்கு அதிகமாக அரசியல்வாதிகள் எதிர்ப்பு கணைகளை தொடுப்பதாக கூறப்படுகிறது.இதற்கு முன் இது போல் பள்ளிகளில் பாலியல் குற்றச்சாட்டுகள், கன்னியாஸ்திரிகளின் குற்றச்சாட்டுகள் என்று பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் பற்றிய புகார்கள் எழுந்த பொழுதெல்லாம் மௌனம் காத்த கனிமொழி பொன்ற பென்ணியம் பேசும் அரசியல் வாதிகள், தற்சமயம் சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் மட்டுக் அதிக அக்கறை காட்டுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது, இது சாதிய வன்மத்தின் வெளிப்பாடு என்று மறுமொழி தாக்குதல் இப்பொழுது வேகமாக ஒலிக்கத்தொடங்கியுள்ளது.

வைரமுத்துவின் மீது ஏன் நடவடிக்கை இல்லை?

அந்த வரிசையில் முதலில் வருவது பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு எதிராக
பாடகி சின்மயி உள்ளிட்ட 17
பேர் செய்த பாலியல் குற்றச் சாட்டுகள்தான். அந்த புகார்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த பெண்ணிய போராளிகள் ஏன் சின்மயி போன்றவர்களுக்கு ஆதரவு குரல் கொடுக்கவில்லை. ஏன் இந்த இரட்டை வேடம் என்ற எதிர்தாக்குதல்களும் கிளம்பியுள்ளன.

தராத பட்டத்தையும்,
பெறாத பணத்தையும்
திருப்பித் தந்த கவிஞர்

இதற்கிடையே, கேரளாவில் மலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி. பெயரில் இலக்கியத் திற்காக வழங்கப்படும் உயரிய விருது முதன் முறையாக கேரளாவை சேராத வைரமுத்துவிற்கு இந்தாண்டு வழங்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஏற்கெனவே பாலியல் புகாரில் சிக்கி பாலியல் குற்றம்சாட்டப்பட்ட வைரமுத்துவிற்கு இந்த விருது வழங்க கேரளாவை சேர்ந்த நடிகைகள் பார்வதி, ரீமா கல்லிங்கள், இயக்குனர்கள் கீது மோகன்தாஸ், பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூகவலைதளங்களில் பலரும் வைரமுத்துவிற்கு விருது வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அவருக்கு அறிவிக்கப்பட்ட விருது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என கேரளாவின் ஓஎன்வி கலாச்சார அகாடமி தெரிவித்திருந்தது. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக தனக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட விருதை திருப்பி தருவதாகவும், அதற்குண்டான பணத்தை கேரள நிவாரண நிதிக்கு திருப்பி தருவதாக வைரமுத்து அறிவித்துள்ளார். வைரமுத்துவிற்கு விருதுக்கான அறிவிப்பு மட்டுமே வெளியாகி உள்ளது. இப்போது அது மறுபரிசீலனையிலும் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தனக்கு விருது வேண்டாம், அதை ஏற்க மனம் விரும்பவில்லை என்று வைரமுத்து சொல்லியிருந்தால் பரவாயில்லை. விருதை திருப்பி தருகிறேன் என கூறியிருப்பதும், விருதுத் தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுங்கள் என கூறியிருப்பது பற்றி பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பாலியல் வன்கொடுமைகளும்
பக்கம் பார்த்துப் பேசுதலும் !

இந்த இரட்டை போக்கை கண்டித்து தமிழகத்தின் பிரபலமான கவிஞரும் சினிமா பாடலாசிரியருமான கவிஞர் தாமரை தமது முகநூலில் காட்டமாக ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெண்களின் மீதான பாலியல் சீண்டல்கள்/வன்முறை மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்தமுறை புண்ணியம் கட்டிக் கொண்டது பத்மா சேசாத்ரி பள்ளி. பாரம்பரியம் மிக்கதாகவும் சமூகத்தில் உயர்படியில் இருப்பதாகவும் தோற்றத்தைக் கொண்ட பள்ளி அசிங்கப்பட்டு நிற்கிறது. வெட்கக்கேடு! . இதற்கு விளக்கம் வேறு தேவையா? .
முன்னாள் மாணவிகள், விடயத்தைத் துணிந்து இணையத்தில் வெளியிட, தீ பற்றிக் கொண்டது. நல்லதுதான்… வேண்டியதுதான். ஆசிரியக் கோமகன் இராசகோபாலன் தற்போது சிறையில்!. எவ்வளவு வேகமான நடவடிக்கை! கண்டிப்பாக வரவேற்க வேண்டும். கல்வித்துறை அமைச்சருக்கும் காவல்துறைக்கும் பாராட்டுகள்!
அப்படியே கொஞ்சம் திரும்பி மற்ற கோப்புகளையும் பார்ப்போமா
மூன்றாண்டுகளுக்கு முன்பு சின்மயி உட்பட 13 பெண்கள் பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மேல் வைத்த பாலியல் குற்றச்சாட்டின்போது ஊடகங்களும் சமூகமும் அரசும் அரசியல் இயக்கங்களும் பெண்ணுரிமைப் போராளிகளும் நடந்து கொண்டது எப்படி?.
சின்மயி பார்ப்பனர் என்கிற ஒரே காரணத்துக்காக அடித்துத் துவைக்கப்பட்டார். அவர் தொழில் பாதிக்கப்பட்டு, தொந்தரவு கொடுக்கப்பட்டு அலைக் கழிக்கப்பட்டார். இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. தனியொரு பெண்ணாக நின்று போராடுகிறார்.
முகிலன் என்றோர் ஊரறிந்த ‘போராளி’… இசை என்ற பெண்ணை பாலியல்ரீதியாக ஏமாற்றி, தப்பிப் பதற்காக ஓடி ஒளிந்து கொண்டு ‘கடத்தல்’ நாடகம் ஆடுகிறான். எத்தனையெத்தனை அலப்பறை தமிழ்நாட்டில்!! அந்தப் பெண் முறையாகப் புகார் கொடுத்து, வழக்குப் பதிவான பிறகே போராளி கண்டு பிடிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டான். இப்போது பிணையில் வெளியே வந்து மீண்டும் ‘போராளி’ தொழில் ஆரம்பித்தாகி விட்டது.
அதற்கும் முன்னதாக, தோழர் தியாகு என்றழைக்கப்பட்ட, கைதேர்ந்த, முகிலனுக்கெல்லாம் முன்னோடி போராளி, பழம் தின்று கொட்டை போட்ட பெருச்சாளி, இயக்க வேலைகளுக்காகவும், பொதுவாக உதவிநாடியும் வந்தவர்களைத் தன் பிடியில் சிக்க வைத்துக் கொண்டு பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தது தமிழ்கூறும் நல்லுலகுக் கெல்லாம் தெரிந்த சங்கதி!. மெத்தப்படித்த மேதாவி சுபவீ முட்டுக்களவாணி என்பதுவும் அனைவரும் அறிந்ததுவே !.
ஆனால் நடந்தது என்ன ? நான் குழந்தையோடு தெருவுக்கு வந்ததுதான் மிச்சம்.
இன்றைக்கு ஆவேசமாக நெற்றிக்கண்ணைத் திறக்கும் நக்கீரர்களும், இழுத்து வந்து தெருவில் வைத்து அறுத்துவிட வேண்டும் என்று பொங்கும் களஞ்சியங்களும் அன்று செய்தது என்ன ?.
இராசகோபாலன்களுக்கும் வைரமுத்து, தியாகு, முகிலன்களுக்கும் என்ன வேறுபாடு?
ஒரு பார்ப்பனப் பொறுக்கி கிடைத்தால் மொத்துவீர்கள்,
திராவிடப் பொறுக்கிகளென்றால் ஒத்துவீர்களோ!!.
பாதிக்கப்படும் பெண்கள் வெளியே வந்து குரலெழுப்புவதே அரிது. அதிலும் எழுப்பும் பெண்களின் சாதி, மதம், நிறம், இடம், நிலை பார்த்துதான் உங்கள் விமர்சனம் இருக்குமோ! எதற்கெடுத்தாலும்,
நீதிமன்றத்துக்குப் போ,
காவல்துறையில் புகார் கொடு,
சட்ட நடவடிக்கை எடு…
பொதுவெளியில் பேசக்கூடாது,
வாய்ப்பூட்டு போட்டுக் கொள்…
முறையாகப் புகார் கொடுத்த சின்மயி இன்று வரை போராடுகிறார், புகார் கொடுத்த இசை இன்றைக்கும் உயிராபத்தில் நிற்கிறார், எத்தனை அலைக்கழிப்பு, அவமானம், நேரவிரயம் உடல்நலப் பாதிப்பு!
விமர்சனம் செய்யும் எந்தக் கோமாளிக்கும் காவல்நிலையத்துக்கு அலைவது, நீதிமன்றத்தில் காய்வது என்றால் என்னவென்று தெரியாது… போய்த்தான் பாருங்களேன் உங்கள் வீட்டிலிருந்து ஒரு வழக்கைப் பதிவு செய்து கொண்டு!
ஒரு பாலியல் குற்றம் நிகழ்கிறதெனில் சாதி, மதம், சமூகநிலை, பதவி, பணபலம், எதையும் பாராமல் பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்க வேண்டும். அதுதான் அறம்!. மாறாக, பக்கம் பார்த்துதான் பொங்குவேன் என்றால் அதற்குப் பெயர் பச்சோந்தித்தனம்!
குற்றம் புரிந்தவர்கள், எதுவுமே நடவாதது போல இளித்துக் கொண்டு மாலை, மரியாதை, பொன்னாடை, பூமாலை, விருது, மேடை கைதட்டு என்று கொண்டாடிக் கொண்டிருக்க….குற்ற இரைகள் ( எiஉவiஅள) நொந்து நொம்பலப்பட்டு உடல்நலம் கெட்டு உயிருக்குப் பயந்து ஒடுங்கிப் போய்விடுகிறார்கள். இந்த இழவையெல்லாம் நான் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே தியாகு விடயத்தில் பார்த்து விட்டதால்தான், அரசியல், பொதுவாழ்க்கை இவற்றிலிருந்து முற்றிலும் என்னை விடுவித்துக் கொண்டு ஒதுங்கி விட்டேன்.
போராட்டம், பொதுக்கூட்டம், போஸ்டர், தமிழ்த் தேசியம், தக்காளி ராச்சியம் என்று பேசிக் கொண்டு எந்தத் தறுதலையும் என்னை வந்து சந்திக்க முடியாத தொலைவில் நின்று கொண்டேன்.
இப்போதும் சொல்கிறேன்… செல்வாக்குப் பெற்றவர்களை சட்டரீதியாகத் தண்டிக்க முடியாது. ஆனால் சமூகரீதியாக தண்டிக்க முடியும். சமூகம் அவர்கள் முகத்தில் காறி உமிழ வேண்டும். வீட்டிலிருந்து வெளியே வந்தால், ‘த்தூ’ என்ற குரல்தான் அவர்கள் காதில் விழ வேண்டும்.
தியாகு, முகிலன் போன்றவர்களை அம்பலப்படுத்த சரியான நேரத்துக்காக இன்னும் காத்திருக்கிறேன்.
ஆதாரங்களெல்லாம் தேவையான அளவு இருக்கிறது ராசா! உண்மை அப்படியே உறங்கி விடாது. திடீரென்று தலையத் தூக்கிக் கொத்தும்!. எச்சரிக்கை !.
பி.கு:

  1. இந்தப் பதிவு அனைத்து மதங்களின் பொறுக்கிகளுக்கும் பொருந்தும். ஜெயேந்திரர்களுக்கும், பீஜெய்களுக்கும், ஃபாதர் தாமஸ்களுக்கும் ஒரே எடைக்கல்தான்!.
  2. நான் எழுதியதன் சாரத்தைப் புரிந்து கொள்ளாமல், இங்கே வந்து அவரவர் சார்புக்கேற்ப வாந்தி எடுப்பவர்களைப் பட்டியல் நீக்கம் செய்வேன்!
    தொகுப்பு: பச்சைக்கிளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + nine =