அடுத்தாண்டு ஜனவரி 28ஆம் தேதி தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படவிருக்கிறது.
கடந்த காலங்களில் தைப்பூசத்திற்கு முதல்நாள் கோலாலம்பூர் ஜாலான் துன் எச்எஸ்லீயில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்படும் வெள்ளி ரதம் பல மணி நேரத்திற்குப் பின்னர் பத்துமலை திருத்தலம் வந்தடையும்.
வெள்ளி ரத ஊர்வலத்தின் போதும் வழிநெடுகிலும் பக்தர்கள் தண்ணீர்ப்பந்தல் அமைத்து பொதுமக்கள் தாகம் தீர்க்க பானங்களை வழங்குவர்.
ஆனால் தற்போது உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கோவிட்-19 தாக்கத்தால் தாய்க்கோயிலில் இருந்து புறப்படும் வெள்ளி ரதம் எங்கும் நிற்காமல் பத்துமலை திருத்தலத்தை வந்தடையும்.
நான்கு மணி நேரத்தில் வெள்ளி ரதம் பத்துமலையைச் சென்றதையும் வண்ணம் அரசாங்கத்திடம் அனுமதி கோரப்படும் என ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்தார்.
கோவிட்-19 தாக்கத்தினால் பொதுமக்கள் ரத ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் தண்ணீர்ப் பந்தல்களை அமைக்க வேண்டாம் எனவும் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சுடன் தேவஸ்தானம் பேச்சுவார்த்தை நடத்தி வெள்ளிரதம் 4 மணி நேரத்தில் பத்துமலை சென்றடைய அனுமதி வழங்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வோம் என்றார் அவர்.
இதனிடையே, மலேசிய இந்து பெருமக்கள் இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பான முறையில் தைப்பூசத்தை கொண்டாடி மகிழும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.