பதவி விலகிய பின்னர் மகாதீருக்கு மூத்த ஆலோசக அமைச்சர் பதவியா?

0

பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னர், துன் மகாதீருக்கு மூத்த ஆலோச அமைச்சர் பதவி தரப்பட்டால், வர்த்தக சமூகத்தின் எதிர்பார்ப்பைச் சமாளிக்க முடியும் என இரு கல்விமான்கள் பரிந்துரைத்துள்ளனர்.
அவரின் செல்வாக்கு அடுத்துவரும் பிரதமருக்கு உதவியாக இருக்கும் என சன்வே பல்கலைக்கழகத்தின் யியா கிம் லெங் குறிப்பிட்ட வேளையில், மகாதீரின் அறிவுரையானது அனுபவம் குறைந்த அமைச்சர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என ஜனநாயக மற்றும் பொருளாதார விவகாரக் கழகத்தின் அட்லி அமிருல்லா தெரிவித்தார்.
ஆட்சியைப் கைப்பற்றி ஈராண்டுக்குப் பின்னர், மகாதீர் பிரதமர் பதவியை அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைக்க வேண்டுமென உடன்பாடு காணப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான தேதி குறிப்பிடப் படவில்லை. எனினும், பதவியை மாற்றிக் கொடுப்பதில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வரும் மகாதீர் மீது வெறுபடைந்து வரும் அன்வாரின் ஆதரவாளர்கள், தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டுமென நெருக்குதலைக் கொடுத்து வருகின்றனர்.
பதவி மாற்றம் இழுபறியில் இருந்தால் பொருளாதாரக் குழப்பம் நீடிக்கும் என யியா எச்சரித்தார். அது இறுதியில் பொருளாதாரச் சரிவைக் கொண்டுவரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மகாதீரின் பரந்த அனுபவம் நாட்டுக்கு வளத்தைக் கொண்டுவருவதோடு அனைத்துத் தரப்பாரின் ஆதரவையும் பெற்று, சிக்கலைச் சுமுகமாகத் தீர்க்க முடியும் என அவர் கருத்துரைத்தார்.
அந்தக் கருத்தானது தத்துவார்த்த முறையில் சரியானது என அட்லி குறிப்பிட்டதோடு, மகாதீர் மூத்த ஆலோக அமைச்சராக நியமிக்கப்பட்டால், அனுபவம் குறைந்த அமைச்சர்களுக்கு அவர் வழிகாட்டியாக இருக்க முடியும் என குறிப்பிட்டார்.
எனினும், அரசின் கொள்கைகளை வகுக்கும்போது அவரின் ஆலோசனையைப் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்படுவது அவசியமென அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த ஆலோசனை வரவேற்கக் கூடியதாக இருப்பினும், மகாதீரின் ஆளுமைப் பண்புகள் அதனை நிறைவேற்றத் தடையாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர் கமாருல் ஸாமான் குறிப்பிட்டார்.
மகாதீர் எந்த விவகாரத்திலும் தமது கருத்துகளையே திணிக்க முயல்வார். பொருளாதாரம், சமூகம் மற்றும் கல்வித் திட்டங்களில் தம்முடைய கருத்துகளுக்கே அதிக முக்கித்துவம் கொடுக்க முயல்வதால், அது பிரச்சினையை உருவாக்கும். மேலும், தமது போக்கின்படி எதையும் செய்ய முனையும் அன்வாருக்கும் அவருக்குமிடையே பெரும் மோதலை உருவாக்கும் என அவர் எச்சரித்தார்.
இதனிடையே, மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் அஸ்மி ஹசான் கூறும்போது, சிங்கப்பூரின் முன்னாள் பிரதமரான லீ குவான் யூ, 2004இல் இருந்து 2011 வரை மூத்த ஆலோசக அமைச்சராக இருந்தபோது, எதையுமே செய்ய முடியாத நிலையில் இருந்ததாகக் குறிப்பிட்டார்.அவரின் ஆலோசனைகள் ஏற்கப்பட்டனவா என்பது தெரியவில்லை என அவர் தெரிவித்தார்.
அந்தப் பரிந்துரையானது செயல்படுத்த முடியாதது ஏனெனில், மகாதீர் பதவியை விட்டு விலக மாட்டார் என்று சொல்வதற்கில்லை ஆனால், தமக்குப் பின்னர் அன்வார் பிரதமர் பதவியை ஏற்கக் கூடாதெனவே அவர் நினைப்பதாக சிங்கப்பூர் அனைத்துலக விவகாரக் கழகத்தின் ஓ ஈ சன் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here