பணக்காரப் பிள்ளைகளுக்கும் இலவச கணினி தேவையா?

அரசின் இலவச கணினிக்கு பல்வேறு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு மக்கள் பிரதிநிதிகளைத் திக்குமுக்காட வைக்கும் பொதுமக்கள் நிறையவே இருப்பதாக புக்கிட் மெர்தாஜம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சிம் சே கியோங் தெரிவித்தார். வீட்டில் வெல்ஃபயர், மெர்சிடிஸ் வாகனம் இருந்தாலும், இலவச மடிக்கணினிக்கு விண்ணப்பிப்போர் இருக்கவே செய்கின்றனர். அதே வேளையில், எதுவுமே இல்லாத குடும்பத்தினர் அதற்கு விண்ணப்பம் செய்யத் தயங்குவதையும் தாம் கண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். ஒரு சிலர் வீட்டில் கணினி இல்லையென்று சொல்கின்றனர்.

ஆனால், வீட்டிற்குச் சென்று சோதனையிடும்போது, கணினி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில வீடுகளில் பல பிள்ளைகள் இருந்தாலும், ஒரு கணினியை மட்டுமே அக்குடும்பம் கேட்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசு வழங்கும் மடிக்கணினிகள் வசதி குறைந்த மாணவர்களுக்கே சென்றடைய வேண்டுமென்பதே தங்களின் விருப்பம் என்று குறிப்பிடும் ஸ்டீவன் சிம், சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் கணினிகள் இல்லையென்பதை தீர அறிந்து கொண்ட பின்னரே, அது வழங்கப்படும் என்று தெரிவித்தார். தங்களிடம் 400 கணினிகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பம் 1,500ஐ தாண்டுகிறது.

மடிக் கணினி வழங்குவதில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், இடைநிலைப்பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். தொடக்கப் பள்ளிகளில் 5ஆம் வகுப்பிலிருந்து முதலாம் படிவ மாணவர்களுக்கு டேப்லட் கருவி வழங்கப்படும். மடிக்கணினிகள் போதுமானதாக இல்லாத காரணத்தினால், முதல் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு அவை வழங்க இயலாது என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 10 =