பெரிக்காத்தான் நேஷனல் தாக்கல் செய்த 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கை வாய்மொழி வாக்கெடுப்பின் மூலம் மக்களவையின் ஒப்புதலைப் பெற்றது.
நிதியமைச்சர் பட்ஜெட்டை முடித்து வைத்து உரையாற்றிய பின்னர், சபாநாயகர் அஸார் ஹருண் வாய்மொழியிலான வாக்கெடுப்புக்கு வழி விட்டார்.
பட்ஜெட்டை எதிர்ப்பதாக 13 பேர் எழுந்து நின்று குரல் கொடுத்த வேளையில், அதற்குக் குறைந்தபட்சம் 15 பேரின் ஆதரவு வேண்டுமென் பதால், சபாநாயகர் அவர்களின் எதிர்ப்பை நிராகரித்தார்.
பட்ஜெட்டை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்களை விட அதிகமாக இருந்ததால், அதனை அதனை ஏற்றுக் கொள்வதாக அவர் அறிவித்தார்.
அதன் பின்னர், திங்கட்கிழமை செயற்குழுக்கள் முறையினான விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்படும்.
குழு முறையிலான வாக்கெடுப்பு வேண்டுமென்று 4 அமானா எம்பிக்கள், 2 சுயேச்சை எம்பிகள், பெஜுவாங்கின் முக்ரிஸ் மகாதீரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதனிடையே நிதியமைச்சர் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது அவரைப் பாராட்டியும் எதிர்க்கட்சியினரைக் கேலி செய்தும் சில அம்னோ எம்பிக்கள் கூச்சல் எழுப்பிய வண்ணமாக இருந்தது காணப்பட்டது. அதில் முக்கியமாக அடாவடித் தனத்துக்குப் பேர் போன பாசிர் சாலாக் எம்பி தாஜுடின் அப்துல் ரஹ்மான், பாலிங் எம்பியும் ஊழல் வழக்குகளை எதிர்கொண்டிருக்கும் நபருமான அப்துல் அஸீஸ் அப்துல் ரஹிம் ஆகியோர் முன்னிலையில் இருந்தனர்.
பட்ஜெட் மக்களவையின் அங்கீகாரத்தைப் பெறுமா என்று ஒரு மாத காலமாக இழுபறியில் இருந்து, தற்போது அப்பிரச்சினைக்கு ஒரு விமோசனம் பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.