பட்ஜெட் தோல்வியடைந்தாலும் அரசு ஊழியர்கள் சம்பளத்தைப் பெறத் தடையில்லை

2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறாமல் தோல்வியடைந்தால் அரசு ஊழியர்கள் தங்களது சம்பளத்தைப் பெற முடியாது என்று கூறுவது அப்பட்டமான அச்சுறுத்தல் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸும் சில அரசு அதிகாரிகளும் அவ்வாறு கூறுவது முஹிடின் யாசினின் ஆட்சியைக் தற்காக்கவே என்று அவர் குற்றம் சாட்டினார்.
பட்ஜெட் தோல்வியடைந் தாலும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை வழங்க வேறு வழிமுறைகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
1999ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பின்னர், தாம் முதன்முதலாகப் பிரதமர் பதவியை ஏற்றபோது, அவ்வாண்டு அக்டோபரில் தாக்கல் செய்யப்பட்ட 2000ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அங்கீகாரத்தைப் பெறவில்லை.
2000ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கான அரசின் நிர்வாகச் செலவுக்காக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அங்கீகாரத்தைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டானது மக்களின் நலனுக்கானது என்றால், அது நாடாளுமன்ற அங்கீகாரத்தைப் பெறுவதில் தடையேதும் இல்லையென்று அவர் குறிப்பிட்டார்.
நிலமை இப்படி இருக்கும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களை வற்புறுத்தி, அச்சுறுத்தி பட்ஜெட்டுக்கு ஆதரவு தெரிவிக்கச் சொல்வது கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.
நிலமையைக் கூர்ந்து நோக்கினால் பட்ஜெட்டானது மக்களின் நலன் கருதி தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக, ஆளும் கட்சிக்கு ஆதரவானது என்று சொல்ல வேண்டுமென மகாதீர் குறிப்பிட்டார்.
ஆட்சி பறிபோகும் என்ற அச்சத்தில் தலைவர்கள் பிதற்றுவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × five =