பக்தி கோஷம் முழங்க தெப்பக்குளத்தை வலம் வந்த மீனாட்சி-சுந்தரேசுவரர்!

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது சிறப்பு. அதில் சித்திரை திருவிழா, ஆடி முளைக்கொட்டு, ஆவணி மூலஉற்சவம், ஐப்பசி, தை தெப்ப திருவிழா போன்றவை முக்கியமானவை. இந்தாண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக கோவிலில் நடக்க இருந்த பல திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டன. கொரோனா நோய் தொற்று குறைந்ததை தொடர்ந்து அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்து, திருவிழா நடத்த அனுமதித்தது. சில தினங்களுக்கு முன்பு மார்கழி அஷ்டமி சப்பர திருவிழா விமரிசையாக நடந்தது. இதை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகரில் உள்ள மண்டபங்களில் எழுந்தருளினர். தெப்பத்திருவிழாவிற்கு முன்னோட்டமாக தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி கடந்த 26-ந் தேதி மாலை நடைபெற்றது. நேற்று முன்தினம் சிந்தாமணி கிராமத்தில் கதிரறுப்பு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. நேற்று சிகர நிகழ்ச்சியான தெப்ப திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு வெள்ளி அவுதா தொட்டில் வாகனத்தில் அம்மனும், வெள்ளி சிம்மாசனத்தில் சுந்தரேசுவரரும் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பாடாகினர். பின்னர் அவர்கள், நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து, கீழமாசி வீதி, யானைக்கல், கீழவெளி வீதி, முனிச்சாலை, காமராஜர் சாலை வழியாக முக்தீஸ்வரர் கோவிலை அடைந்தனர். காலை 10.30 மணிக்கு அலங்கரிக் கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்மனுக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடந்தது. தெப்பக்குளத்தில் முழுமையாக நீர் நிரம்பி இருந்ததால் ரம்மியமாக காட்சி அளித்தது. நேற்று தைப்பூச தினத்துக்கு அரசு விடுமுறை அளித்து இருந்ததால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தெப்ப உற்சவத்தை எதிர்நோக்கி அங்கு காத்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தெப்பக்குளத்தை தெப்பம் வலம் வர தொடங்கியது. குளத்தின் ஒவ்வொரு முனையையும் தெப்பம் கடந்து செல்லும் போது, மீனாட்சி-சுந்தரேசுவரரை போற்றி பக்தர்கள் எழுப்பிய பக்தி கோஷங்கள் விண்ணதிர ஒலித்தது. இருமுறை தெப்பம் வலம் வந்த பின்னர், சுவாமி-அம்மன், தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளினர். இரவில் தை பவுர்ணமி நிலவு வெளிச்சத் திலும், மின் ஒளியிலும் தெப்பக்குளமும், தெப்பமும் ஜொலித்தன. இதைதொடர்ந்து மீண்டும் சுவாமி, அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி, மீண்டும் ஒரு முறை தெப்பக்குளத்தை வலம் வந்தனர். பகலில் இருந்ததைவிட பன்மடங்கு பக்தர்கள் கூட்டம் இரவில் இருந்தது. தெப்ப உற்சவம் நிறைவு பெற்றதும், சுவாமி-மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைந்தனர். வைகை ஆற்றில் இருந்து பனையூர் கால்வாய் வழியாக தெப்பக்குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக, இந்த கால்வா யில் அடைப்பு ஏற்பட்டு நீர்வரத்து தடைபட் டது. தற்போது பனையூர் கால்வாய் வழியாக நீர்வரத்து வரும் வகையில் புனரமைப்பு செய்யப்பட்டதையடுத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டில் ஓரளவு நீர்நிறைந்த தெப்பக்குளத்தில் திருவிழா நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டில் தெப்பம் முழுவதும் நிறைந்துள்ள தால், 2-வது ஆண்டாக கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மட்டுமின்றி வெளியூர் களை சேர்ந்த பலரும் வந்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 8 =