பக்காத்தான் தோல்விக்கு இனவாத அரசியலே காரணம்

பக்காத்தான் ஹராப்பானின் இனவாத அரசியல் காரணமாகத்தான் கடந்த சனிக்கிழமை தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கூட்டணி படுதோல்வி கண்டதாக பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி. ராமசாமி கூறினார்.
இந்த இனவாத அரசியலால் சீன சமூகத்தினர் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் மீது கோபம் அடைந்துள்ளனர். இது இந்த இடைத்தேர்தலில் அதிருப்தி வாக்குகளாக மாறியதாக அவர் குறிப்பிட்டார்.மேலும் அதிகார மாற்ற சர்ச்சை, பிகேஆர் உட்பூசல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையின்மை ஆகியவையே பக்காத்தான் ஹராப்பான் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டதாக அவர் கூறினார்.கடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் மக்களுக்கு அளித்த பல வாக்குறுதிகளை பக்காத்தான் ஹராப்பான் நிறைவேற்றாததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பக்காத்தான் ஹராப்பானின் பலவீனங்களை தனக்கு சாதகமாக தேசிய முன்னணி இந்த இடைத்தேர்தலில் பயன்படுத்திக் கொண்டது. அது அந்த முன்னாள் அரசாங்கத்திற்கு வெற்றியாக முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
பக்காத்தான் ஹராப்பானின் இனவாத அரசியலால் மலாய்க்காரர் அல்லாதவர்களை மிகவும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. தனது இந்த போக்கை ஆளும் கூட்டணி மாற்றிக் கொள்ளாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் என ராமசாமி நினைவுறுத்தினார்.
கடந்த சனிக்கிழமை நடந்த இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் வீ ஜெக் செங் 15,086 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
கடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் 514 வாக்குகளில் தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதியை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − six =