பக்காத்தானும் சபாநாயகர் நியமனமும்

0

2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பின்னர், நாடாளுமன்ற சபாநாயகராக டான்ஸ்ரீ முகமட் அரிஃப் யூசோப்பை ஆதரிக்காத பக்காத்தான் ஹராப்பான், தற்போது அவரை விழுந்து விழுந்து ஆதரிப்பது ஏன் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அரசியல் பிரமுகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அப்போது சபாநாயகர் நியமன விவாதத்தில் பெரும் பங்கு வகித்து வந்த அவர், உண்மையில் அப்பதவிக்கு ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங், அன்வாரின் புதல்வி நூருல் இஸ்ஸா அன்வார், கெடாவின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜொஹாரி அப்துல் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டதாக அவர் தெரிவித்தார்.
லிம் கிட் சியாங்கின் புதல்வர் லிம் குவான் எங் அப்போது பக்காத்தான் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்ததாலும் நூருலின் தாயார் வான் அஸிஸா வான் இஸ்மாயில் துணைப் பிரதமராக இருந்த காரணத்தினால் அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.
மேலும், சுங்கைபட்டாணி நாடாளுமன்ற உறுப்பினராகவும் குருண் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ஜொஹாரி அரசு ஊழியர்களுக்கு குடிமைப் பயிற்சியை நடத்திய ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது, அரசு ஊழியர்களை மூளைச் சலவை செய்ததாக கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார்.
மேலும், அவர் சபாநாயகராக நியமனம் பெற்றால், சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்க வேண்டுமென்ற விதி இருந்தது. அப்படி விலகினால், கெடாவில் பக்காத்தான் ஆட்சிக் கவிழும் நிலை எழுந்தது. அவர் விலகினால், பக்காத்தான் ஹராப்பானில் இருந்து ஒரு தொகுதியை இழக்க வேண்டியிருக்கும். அங்கு அம்னோ, பாஸ் கட்சிகள் பக்காத்தானுக்கு நிகரான தொகுதிகளை அப்போது கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கெடாவில் 36 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
இந்நிலையில், பக்காத்தான் ஹராப்பானின் கொள்கை அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே சபாநாயகராக நியமிக்கப்படுவார் என்ற உறுதிப்பாடு பின்பற்றப்படாமல், மேல் முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதியான முகமட் அரிஃப் யூசோப்பை துன் மகாதீர் முன்மொழிந்து சபாநாயகர் பதவியில் அமர்த்தினார்.
கிட் சியாங்கும் நூருல் இஸ்ஸாவும் அரசியல் பின்புலத்தைக் கொண்டிருந்த வேளையில், அரிஃப் அமானாவின் சட்ட ஆலோசகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜசெகவும் பிகேஆரும் தங்களின் கட்சியைச் சேர்ந்த எம்பி ஒருவர் சபாநாயகராக ஆக வேண்டுமென்று வாதிட்டாலும், மகாதீர் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் அரிஃப் சபாநாயகராக இருக்க வேண்டுமென்று விடாப்பிடியாக இருந்து, காரியத்தைச் சாதித்ததாக மேற்கண்ட பிரமுகர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − one =