நோட்டீஸ் கொடுக்கச் சென்ற ஆலயத் தலைவர் கைது

உடைபட்ட ஆலயத்தின் சிலைகளை பெறக் கோரி கால அவகாசம் கேட்கச் சென்ற இருவரை போலீஸார் கைது செயதுள்ளனர்.கடந்த வாரம் உடைபட்ட ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் உட்பட 3 இரும்புக் கடைகளின் பொருட்களை பெறக் கோரி நோட்டீஸ் கொடுக்கச் சென்ற ஆலயத் தலைவர் ஸ்ரீ ரமேஷ் கைது செய்யப்பட்டார்.ஆலயத்திற்கும் கடைகளுக்கும் மாற்று நிலம் கொடுத்த அவ்வட்டார நில அலுவலகமே இவற்றை உடைத்தது. உடைத்த பின்னர் அங்கிருந்த பொருட்களை எடுத்துச் செல்ல கால அவகாசம் கேட்டு கடந்த 2ஆம் தேதி அவ்விடத்திற்குச் சென்றதாக ஸ்ரீ ரமேஷ் கூறினார்.
அப்போது அங்கிருந்த நில அலுவலக அதிகாரிகளிடம் கால அவகாச நோட்டீஸை கொடுக்கும் போது அதை பெற அவர்கள் மறுத்தனர். இது அரசாங்கத்தின் முடிவு, எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என அவர்கள் அலட்சியமாக பதில் கூறினர்.
நாட்டில் நிலவும் அரசியல் சூழலே மாற்றம் கண்டுள்ளது. நெகாராகூ, ருக்குன் நெகாரா ஆகியவை மாற்றம் காணவில்லை. மக்களுக்கு சேவை செய்வதே அரசாங்கம் மற்றும் அரசு ஊழியர்கள் என்று தாம் கூறியதாக அவர் சொன்னார்.
அச்சமயம் அங்கிருந்த அவ்வட்டார போலீஸ் தலைவர் தம்மை நெஞ்சு பகுதியில் கை வைத்து தள்ளியதுடன் தம்மை கைது செய்யவும் உத்தரவிட்டார். அதற்கான முழு வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. இச்சம்பவத்தில் ஒரு வார்த்தைக்கூட பேசாத என் மனைவியையும் காரணம் இன்றி கைது செய்தனர்.
உடைபட்ட பொருட்களை அப்புறப்படுத்த வந்த அரசு அதிகாரிகளின் பணிகளை நாங்கள் தடுக்கவில்லை. எங்கள் தரப்பில் வழக்கறிஞர் வழங்கிய கால அவகாச நோட்டீஸைதான் கொடுக்கச் சென்றோம். இதற்கு எங்கள் இருவரையும் கைது செய்தனர். பின்னர் எனக்கு 2ஆயிரம் வெள்ளி ஜாமீனும் மனைவிக்கு வாய் மூலம் ஜாமினும் மறுநாள் வழங்கப்பட்டது.
இவ்விவகாரத்தில் எங்கள் மீது எந்த தவறும் இல்லை. சாதாரண குடிமக்களாக உரிமைகளை கேட்கச் சென்றதற்கு எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த இடத்தில் நடந்த அனைத்து சம்பவங்களும் வீடியோ ஆதாரமாக எங்களிடம் உள்ளது.
ஆலய இடமாற்றம் உட்பட அனைத்து விவகாரங்களிலும் இங்கிருந்த அவ்வட்டார போலீஸ் தலைவர் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார். கேள்வி கேட்ட காரணத்தினால் எங்களை கைது செய்தார். இதற்கான ஆதராம் எங்களிடம் உள்ளது என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நேற்று செந்தூல் காவல் நிலையத்தில் இதன் தொடர்பில் புகார் செய்த ஸ்ரீ ரமேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மனித உரிமை மீறலான இச்செயலை கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை காலையில் சுஹாகாம் எனப்படும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கவிருக்கிறோம். அதோடு பிற்பகல் புக்கிட் அமான் காவல் நிலையத்தில் அந்த வீடியோ ஆதாரத்தை ஐஜிபியின் பார்வைக்கு வழங்க விருப்பதாகவும் அவர் கூறினார்.
இது போன்ற நன்னெறி இல்லாத அதிகாரிகளினால்தான் ஏழை மக்களுக்கு சில சமயங்களில் நியாயம் கிடைப்பதில்லை. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது எடுக்கப்படும் நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.
மாற்று நிலம் வழங்காமல் ஆலயத்தை உடைத்து விட்டனர். அங்கிருந்த இரும்புக் கடைகளும் உடைக்கப்பட்டன. ஆலயத்தின் தோற்றுனர் தங்க இடமின்றி அங்கு தரையில் படுத்திருந்தார். இரும்புக் கடைக்காரர்கள் உடைப்பட்ட பொருட்களை வைத்து என்ன செய்வார்கள்? எங்களின் இந்த இழப்பிற்கு யார் பதில் சொல்வது? உடைபட்ட ஆலய சிலைகளையும் லோரியில் ஏற்றி எடுத்துச் சென்று விட்டனர்.
இவ்விவகாரத்தில் நீதி நிலை நாட்டப்பட வேண்டும். இதற்கு நீதி கிடைக்கா தவரை தாங்கள் ஓயப்போவதில்லை என்று ஸ்தாப்பாக் வட்டார மக்கள் சூளுரைத்தனர். இவ்விவகாரம் தொடர்பில் இதுவரை 25 போலீஸ் புகார்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் நாடு தழுவிய அளவில் போலீஸ் புகார்கள் மேற்கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக ஸ்தாப்பாக் வட்டாரத்தில் 500 கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது. நாளை அதுவும் புக்கிட் அமானில் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − twelve =