நேரடியாக வேலைக்கு அமர்த்துவதால் தரகர்களைத் தவிர்க்கலாம்!

0

குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் இருந்து வரும் ஆவணமற்ற அந்நிய நாட்டவர்களை வேலைக்கு அமர்த்த முதலாளிகளுக்கு உள்துறை அமைச்சு அனுமதி வழங்க வேண்டும் என்ற உள்துறை அமைச்சின் திட்டத்தை மலேசிய மகளிர் தொழில்முனைவர் களுக்கான தேசிய சங்கம் (நாவெம்) வரவேற்றுள்ளது.
இந்தத் திட்டத்தின் வழி அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நடைமுறையில் தரகர்களின் ஈடுபாட்டைத் தவிர்க்க முடியும் என நாவெம் தலைவர் நூரிஸான் ஹுசேன் கூறினார்.
முதலாளிகள் இவர்களை நேரடியாக வேலைக்கு அமர்த்துவதன் மூலம், நாடு முழுவதும் 15,000 ஆவணமற்ற அந்நியர்களைப் பராமரிப்பதற் கான அரசாங்கத்தின் நிதிச்சுமை குறையும் என்றார் அவர்.
இந்த நடவடிக்கையின் மூலம் குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் உள்ள அனைத்து அந்நிய நாட்டவர்களின் புள்ளி விவரங்களை காவல்துறை, குடிவுநுழைவு இலாகா மற்றும் சுகாதார இலாகா சேகரிக்க ஏதுவாக இருக்கும் என அவர் சொன்னார்.
இதன்வழி குற்றப்பதிவு, தொற்றுநோய் இல்லாத அந்நிய நாட்டவர்களுக்கு வேலைகள் வழங்கப்படலாம் என அவர் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார மீட்சிக்கு அந்நியத் தொழிலாளர்களின் தேவையை நிவர்த்தி செய்ய இந்தத் திட்டம் பாதுகாப்பானது என அவர் சொன்னார்.
குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப் பட்டுள்ள ஆவணமற்ற அந்நியத் தொழிலாளர்களை சட்டப்பூர்வமாக வேலைக்கு அமர்த்த ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம் என உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுடின் அண்மையில் கூறியிருந்தார்.
கடந்த ஜனவரி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை குடிநுழைவு இலாகா மேற்கொண்ட நடவடிக்கையில் 17,226 ஆவணமற்ற அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதே வேளையில் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காக 243 முதலாளிகள் கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 8 =