நேசா கூட்டரசுப் பிரதேச வட்டார கூட்டம்

மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசகம் தோற்றுவித்த நேசா பல நோக்கு கூட்டுறவு சங்கம் 1979இல் அவரது மறைவுக்குப் பின் மஇகாவின் முன்னாள் துணைத்தலைவர் டான்ஸ்ரீ டத்தோ சி. சுப்ரமணியம் தலைமையில் செயல்பட்டு வந்தது.

11.11.2011 அன்று டான்ஸ்ரீ சுப்ரமணியம் திடீரென நோயினால் பாதிப்புற்ற பின் அந்த கூட்டுறவு கழகம் தலைவர் இல்லா இயக்கமாக தொடர்ந்தது. அதன் வாரியத் தலைவராக நாட்டின் பிரபலமான எம். சி. ஐ.எஸ் கூட்டுறவு இன்சுரன்ஸ் நிறுவனத்தின்,

மிக நீண்ட நாட்கள் அதன் தலைமை செயல்முறை அதிகாரியாக பதவி வகித்து வந்த டத்தோ எல். மெய்யப்பன் அதன் வாரியத் தலைவராக செயல்பட்டார். ஆனால், ‘ஒரு நபரின் பதவி மோகத்தாலும் தொடர்ந்து நேசா தனது கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய முயற்சிகள் நடந்ததாலும், டத்தோ மெய்யப்பன் பதவி விலக நேரிட்டது.

அதன் பின், நேசாவின் செயலாளராக ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பில் இருந்த ஆர். ராஜண்ணன் அதன் தலைவராக பொறுப்பேற்றார். இப்போது அவரும் கோலகுபு பாரு அம்பாங் பெச்சா நில விற்பனை தொடர்பான முறைகேடு வழக்கை எதிர்நோக்கி உள்ளார். அதன் காரணமாக பதவி விலகிய அவரின் வாரியத் தலைவர் பதவியை தற்போது சிரம்பான் டத்தோ சசி ஏற்றுள்ளார்.

இந்தியர்களின் சொத்து உடைமையை உயர்த்த வேண்டுமென முக்கிய நோக்கத்தோடு தோற்றுவிக்கப்பட்ட நேசா தற்போது நாட்டின் 100 கூட்டுறவு சங்கங்களில் 70வது நிலைக்கு மேல் இடம்பெற்றுள்ளது.

தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம், தொழிலாளர் கூட்டுறவு நாணயச்சங்கம், பலநோக்கு கூட்டுறவு சங்கம் ஆகியவற்றுக்குப் பின்னால் நேசா தள்ளப்பட்டு உள்ளது.

நேசாவின் பேராளர் தேர்வுக்கான வட்டார கூட்டங்கள் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். தற்போது இக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் பகாங், ஜொகூர், மலாக்கா சிலாங்கூர், மற்றும் ரவாங் வட்டாரங்களில் கூட்டங்கள் நடந்து முடிந்தன.

நாளை ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் கந்தையா மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெறும். இதில் மொத்தம் 19 பேராளர்கள் தேர்வு பெற 38 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர். குறைந்த பட்சம் 1000 வெள்ளி பங்கு பணம் வைத்திருக்கும் கூட்டரசுப் பிரதேச கோலாலம்பூர் முகவரி கொண்டவர்கள் கலந்து கொண்டு வாக்களிக்கலாம். வாக்களிப்பு காலை 11.00 மணிக்கு முடிவடையும். இதனைப் போலவே வரும் வாரத்தில் வட மாநில தேர்தல்களும் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 4 =