நெல்லை மாவட்டத்தில் தொடர்மழை: 3 அணைகள் – 1000 குளங்கள் நிரம்பியது

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த 3 நாட்களாக மழை பெய்கிறது.

தொடர் மழை காரணமாக நெல்லையில் சந்திப்பு பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாயினர்.

நேற்று பகல் மற்றும் இரவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் சாரல் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை நீடித்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை அதிகபட்சமாக கன்னடியன் கால்வாய் பகுதியில் 44 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நகர்புறங்களில் அம்பையில் அதிகபட்சமாக 24.1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 1635 கனஅடி நீர் வந்துகொண்டு இருக்கிறது. நேற்று பாபநாசம் அணை நீர்மட்டம் 128.85 அடியாக இருந்தது. அது 1 அடி உயர்ந்து இன்று காலை 129.90 அடியாக உள்ளது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 139.70 அடியாக இருந்தது. அது ஒரே நாளில் 4 அடி உயர்ந்து இன்று காலை 143.83 அடியாக உள்ளது. அணையில் இருந்து இன்று வினாடிக்கு 247 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 744 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 35 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் நேற்று 67.20 அடியாக இருந்த நீர்மட்டம் 1 அடி உயர்ந்து இன்று காலை 68.30 அடியாக உள்ளது.

ஏற்கனவே நிரம்பிய கடனாநதி, குண்டாறு, அடவிநயினார் அணை ஆகியவை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. ராமநதி, கருப்பநதி ஆகிய அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது. கொடுமுடியாறு அணைக்கு தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு இதுவரை நிரம்பாத வடக்கு பச்சையாறு, நம்பியாறு அணைகளுக்கும் தற்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் அதிக அளவு வெள்ளமாக செல்கிறது. ஆற்றின் மையப்பகுதி மூழ்கி இருபுற கரையையும் தண்ணீர் தொட்டப்படி செல்கிறது. இதனால் பலர் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவில்லை. சிலர் மட்டும் கரையில் ஓரமாக நின்று குளித்து வருகிறார்கள்.

தாமிரபரணி கிளை நதிகளிலும் தண்னீர் அதிகமாக வருகிறது. சிற்றாறு, மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதிகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால், பாசன கால்வாய்களிலும் தண்ணீர் வேகமாக செல்கிறது. கோடகன் கால்வாய், நெல்லை கால்வாய், மருதூர் கால்வாய், ஸ்ரீவைகுண்டம் தெற்கு மற்றும் வடக்கு கால்வாய்களில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பாசன குளங்கள் நிரம்பி வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 2518 குளங்கள் உள்ளன. இதில் கால்வாய் பாசன குளங்கள் 1221 ஆகும். மானாவாரி குளங்கள் 1297 ஆகும். அவற்றில் சுமார் 200 மானாவாரி குளங்கள் நிரம்பி உள்ளது. கால்வரத்து குளங்களில் சுமார் 800 குளங்கள் வரை நிரம்பி உள்ளது. இன்னும் சில நாட்கள் மழை பெய்தால் பெரும்பாலான குளங்கள் நிரம்பி மறுகால் பாயும் நிலை ஏற்படும்.

குற்றாலம் மலைப்பகுதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இன்று காலை மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் அதிக அளவு தண்ணீர் விழுந்ததால் சிறிது நேரம் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

அதன் பிறகு படிப்படியாக தண்ணீர் குறைந்ததால் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் வெள்ளமாக கொட்டுகிறது. அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 8 =