நீதி கேட்டு அடுத்தக் கட்ட நடவடிக்கையில்… 23 இந்தியக் குடும்பங்கள்

0

சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான தென் செபெராங் பிறை சுங்கை கிச்சில் தோட்டம் தனியார் ஒருவருக்கு கை மாறி விட்டதால்,அங்கிருந்து வெளியேறுமாறு அதன் உரிமையாளர் தோட்ட மக்களுக்கு விடுத்துள்ள உத்தரவை எதிர்த்து,23 இந்தியக் குடும்பங்கள் தொடுத்த நீதிமன்ற வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால்,அடுத்த கட்ட நடவடிக்கையாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நீதி போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தோட்ட நிலத்தை சீனர் ஒருவர் வாங்கியுள்ளார்.அந்த இடத்தில் சில மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளப் போவதாக கூறிக் கொண்டு வரும் அவர்,
தற்போது அங்கு வசித்து வரும் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களான 23 இந்தியக் குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு நெருக்குதல் கொடுத்து வருகிறார் என பாலசந்திரன் நாராயணசாமி,சுகுமாரன் பரமநாதன்,தனலெட்சுமி கண்ணன் கூறினர்.

வெளியேறும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு இழப்பீடோ அல்லது மாற்று சலுகைகளோ வழங்குவது குறித்து எதையும் அவர் பேசவில்லை.வீட்டை காலி செய்து விட்டு உடனடியாக வெளியேற வேண்டுமென கூறி, பலமுறை எச்சரிக்கைக் கடித்தை வழங்கியிருப்பதோடு,வாய் மொழி யாகவும் மிரட்டல் விடுத்து வருவதாக பாதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான சித்திரவேலு முனுசாமி, இராகவன் பூஞ்சோலை, சுப்பிரமணியம் மாணிக்கம்,ரெங்கசாமி மாணிக்கம் ஆகியோர் தெரிவித்தனர்.
இதற்கிடையில் இரு தரப்பும் மேற்கொண்ட நீதிமன்ற வழக்கில்,நில உரிமையாளருக்கு எதிராக தோட்ட மக்கள் தொடுத்திருந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால்,அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நில உரிமையாளர், நீதிமன்ற ஆணையுடன் இம்மாதம் 13 – ஆம் தேதிக்குள் 23 இந்தியக் குடும்பங்களையும் இருக்கும் இடத்தை விட்டு துரத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது எங்களை அச்சத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக அம்பிகாபதி சண்முகம்,மங்கம்மா முனுசாமி, பச்சையம்மா பூங்கான், விஜயசேமன் தண்ணீர்மலை ஆகியோர் மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டனர்.
கடந்த சில வாரங்களாக போலீசாரின் பாதுகாப்புடன்,தோட்ட வீடுகளை உடைப்பதற்கு மண்வாரி இயந்திரத்துடன் நில உரிமையாளர் தோட்டத்தினுள் நுழைந்திருப்பது எங்களின் பாதுகாப்புக்கு மிரட்டலாக அமைந்துள்ளது என தோட்ட மக்கள் தெரிவித்தனர்.எந்நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தில்,எங்களின் வீடுகளை உடைபடுவதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு இரவும் பகலும் கண்விழித்துக் கொண்டிருப்பதாகவும் இவர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.
இதற்கிடையே சம்பவம் குறித்து கண்டறிய,தோட்டத்திற்கு நேரடியாக வருகைத் தந்த பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி,இந்த 23 குடும்பங்களின் துயர நிலையை உறுதிப்படுத்த,தமது வழக்கறிஞர் மூலம் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாகக் கூறினார்.அதுவரையில் எந்த சூழ்நிலையிலும் கவனமாகவும்
விழிப்புடனும் இருக்குமாறு தோட்ட மக்களை கேட்டுக் கொண்
டார். பிறை சட்டமன்ற உறுப்பினரு
மான பேராசிரியர் டாக்டர் பி.இராம சாமியின் இந்த மக்கள் சந்திப்பின் போது,பாதிக்கப்பட்டுள்ள 23 இந்தியக் குடும்பங்களின் பிரதிநிதியும்,நிபோங் திபால் பிகேஆர் கட்சியின் பிரமுகருமான சஞ்சய் சுப்பிரமணியமும் உடனிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here